யேர்மனியில் நடைபெற்ற நெருப்பை எரித்த நிகரில்லாத் தாயின் நினைவேந்தல்

471 0

சுதந்திர தமிழீழத்தை மக்கள் இதயங்களில் ஒரு நொடியில் மலர்வித்த தாய்தான் அன்னை பூபதி. அவர் ஒருவரே இந்த உலகில் நெருப்பை எரித்த நிகரில்லாத் தாய்.அன்னை பூபதியின் மரணம் சம்பவித்தவுடன் ஏற்பட்ட அதிர்வலைகள் தமிழீழ மக்களை எல்லாம் ஒட்டு மொத்தமாகப் பாதித்தது.இந்திய அரசையும், அதன் எண்ணங்களுக்கு உட்பட்ட தீர்வையும் நிராகரித்து, தமிழீழமே இனி எங்கள் தேசம் என்ற உறுதியான எண்ணத்தை மக்கள் மனதில் தூக்கிப் போட்டது.

அன்னை பூபதி கண்களை மூட, தமிழ் மக்கள் இதயக் கண்கள் அனைத்தும் ஒரு நொடி ஒற்றுமையாக அகலத் திறந்தன.அந்த நொடியிலேயே கண்ணுக்குத் தெரியாத தமிழீழம் மலர்ந்து விட்டது. அன்னை பூபதி அவர்களின் 29 வது ஆண்டு நினைவு நாள் மற்றும் நாட்டுப்பற்றாளர் தினம் மிகவும் உணர்வுபூர்வமாக Frankfurt நகரில் நடைபெற்றது .

வணக்க நிகழ்வில் ஈகைச்சுடர் ஏற்றி, மலர்வணக்கம், அகவணக்கம் செலுத்தப்பட்டது. அன்னையையும் மாவீரர்களையும் போற்றும் விடுதலை கானங்களுக்கு நடனங்களும் நடைபெற்றது.

Landau நகரத்திலும் தமிழர் கலாச்சார – விளையாட்டுக் கழகத்தினால் நடைபெற்ற உள்ளரங்க விளையாட்டுப் போட்டியில் அன்னை பூபதி அவர்கள் நினைவுகூரப்பட்டதுடன் , வீரத்தாயின் நினைவாக வெற்றிக்கிண்ணங்களும் வழங்கப்பட்டது.

யேர்மன் தலைநகரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்னை பூபதி அம்மாவின் சுடர்வணக்க நிகழ்வு பல்லின கலாச்சார மன்றத்தில் நடைபெற்றது.காலங்கள் கடந்தாலும் எம் இருப்புக்கு உரமாக மண்ணுக்குள் விதையாக கலந்துகொண்ட அன்னையை நினைவுகூரி வலிசுமந்த மாதத்தில் செய்யப்பட இருக்கும் வேலைத்திட்டங்கள் சார்ந்தும் எடுத்துரைக்கப்பட்டன.

மாவீரர்களுக்கான வணக்கத்தோடு நாம் நில்லாமல் அவர்கள் எந்த இலட்சியத்துக்காக போராடினார்களோ அந்த உயரிய இலட்சியத்துக்காக நாம் அனைவரும் தொடர்ந்தும் போராட வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டு, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என முழக்கமிட்டு வணக்க நிகழ்வுகள் நிறைவுபெற்றன.