இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் சாதனைப் பயணம் வெற்றிகரமாக முடிந்தது(காணொளி)

248 0

வவுனியாவை சேர்ந்த கலைஞரான தர்மலிங்கம் பிரதாபன் என்ற இளைஞன் இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலங்கை அரசாங்கம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று மேற்கொண்ட இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் சாதனைப் பயணம் வெற்றிகரமாக முடிந்தது.

முதியவர்கள் யாவருக்கும் பொருத்தமான போதுமான பணத்தை ஓய்வூதியமாக வழங்கி அவர்களது இறுதிக்கால வாழ்க்கைக்கு உத்தரவாதம் வழங்க வேண்டும் என்று தெரிவித்து இலங்கை சுற்றி சைக்கிளில் கடந்த 11 நாட்கள் பிரயாணம் செய்து நேற்று மாலை 5.00 மணிக்கு வவுனியா கந்தசாமி கோவிலை வந்தடைந்தார்.

60 வயதைக் கடந்த முதியவர்களுக்கு ‘அரச ஓய்வூதியம்’ வழங்கி உதவவேண்டும் என்ற கோரிக்கையுடன் இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் சாதனைப் பயணத்தை கடந்த 08.04.2017 அன்று சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு வவுனியா கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பித்த தர்மலிங்கம் பிரதாபன் துவிச்சக்கர வண்டியில் ஆயிரத்து 515 கிலோமீற்றர்கள் பயணம் செய்து தனது கவனயீர்ப்பு பிரயாணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

வவுனியா கந்தசுவாமி ஆலயத்தின் முற்றலில் பயணத்தை நிறைவு செய்த தர்மலிங்கம் பிரதாபனை வவுனியா அரசாங்க அதிபர் எம்பி.றோகண புஸ்பகுமார, வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், கே.கே. மஸ்தான், வடமாகாணசபை உறுப்பினர்களான எஸ்.மயூரன். எம்.தியாகராஜா, மக்கள் சேவை மாமணி சேனாதிராஜா, தமிழ்விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் சந்திரகுமார், சமுக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராசலிங்கம் ஆகியோர் பொன்னாடை போர்த்தி வரவேற்றதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

தர்மலிங்கம் பிரதாபனால் அரசாங்கத்திடம் கையளிக்குமாறு தனது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டது.