கூட்டமைப்பின் எதிர்காலம்!

410 0

இதனை வாசிக்கும் ஒருவரிடம் இப்படியொரு கேள்வி எழலாம் – இந்தப் பத்தியாளர் தொடர்ச்சியாக கூட்டமைப்பு தொடர்பிலேயே எழுதி வருகின்றாரே – இவரிடம் வேறு விடயங்கள் இல்லையா? இது நியாயமான கேள்விதான். ஆனால் கூட்டமைப்பு என்பது வெறும் கட்சிகளின் கூட்டல்ல, மாறாக அது பெரும்பான்மை தமிழ் மக்களின் உணர்வுநிலையின் வடிவம். எதிர்கால தமிழ்த் தலைமுறைக்கு சரியான வழியை காண்பிக்க வேண்டிய நிலையில் இருக்கும் ஒரு மக்கள் தலைமை. எனவே தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பில் கேள்வி எழும் போது, அது முதலில் கூட்டமைப்பின் மீதான கேள்வியாகத்தானே இருக்க முடியும். இதன் காரணமாகவே அவ்வப்போது இப்பத்தியாளர் கூட்டமைப்பை முன்னிறுத்தி எழுத நேர்கிறது.

தமிழில் ஒரு பழமொழியுண்டு காய்க்கிற மரத்திற்குத்தான் கல்லெறி விழும் – அதாவது, பாராட்டும் கூட்டமைப்பிற்குத்தான், விமர்சனமும் கூட்டமைப்பிற்குத்தான். ஆனால் ஒன்றை பாராட்டுவதற்கான விடயங்கள் குறைந்துகொண்டு செல்லும் போது அதன் மீதான விமர்சனங்கள்தானே அதிகரிக்கும். அரசாங்கத்தின் செயற்பாடுகள் மந்தகதியில் இருக்கின்றபோது அதற்கான பொறுப்பை கூட்டமைப்பிடமிருந்தே மக்கள் எதிர்பார்ப்பர். ஏனெனில் கூட்டமைப்பைத்தான் மக்கள் தங்களின் தலைமையாக தெரிவு செய்திருக்கின்றனர். அந்தத் தலைமையிடம்தானே மக்கள் கேள்வியெழுப்ப முடியும்.

அண்மையில் ஒரு மூத்த பத்திரிகையாளரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அவர் என்னிடம் இப்படிக் கேட்டார் ; அரசாங்கத்தின் தவறுகள் தொடர்பில் ஒருவரும் பேசுகிறார்களில்லையே, தொடர்ந்தும் கூட்டமைப்பில்தானே பிழை பிடிக்கின்றனர். இப்படியொரு ஆதங்கம் சிலரிடம் இருப்பது உண்மைதான். நாங்கள் எவரை உற்றுநோக்க வேண்டுமோ அவர்களை விட்டுவிட்டு சதா கூட்டமைப்பை மட்டுமே விமர்சித்துக் கொண்டிருக்கின்றோமே! மேலோட்டமாக பார்த்தால் இவ்வாறான ஆதங்கத்தில் நியாயமிருப்பதாகவே தெரியும். ஆனால், ஆழமாக நோக்கினால் அது சரியான கூற்றுத்தானா என்னும் சந்தேகமே எழும். ஏனெனில் அரசாங்கம் தொடர்பில் தமிழர்களிடம் எழுபது வருடத்திற்கும் மேலான அனுபவமுண்டு. இந்தக் காலத்தில் பல அரசாங்கங்கள் இலங்கையை வெற்றிகரமாக ஆட்சி செய்திருக்கின்றன. அவர்களது ஆட்சிக்காலத்தில் தமிழர் தலைமைகளுக்கு பல வாக்குறுதிகளையும் வழங்கியிருக்கின்றனர். கூடவே அதனை எந்தவொரு குற்றவுணர்வுமின்றி மீறியும் இருக்கின்றனர். ஏனெனில் அரசியல் அதிகாரத்திற்கும் குற்றவுணர்வுக்கும் எட்டாப் பொருத்தம். வாக்குறுதிகளை வழங்குவதும் அதனை சாதாரணமாக மீறுவதும் இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு கைவந்த கலையாகும்.

இந்த அனுபவங்களின் வழியாக சிந்தித்தால், அரசாங்கம் தொடர்பில் பேசுவதற்கு என்னதான் இருக்கிறது என்னும் கேள்வியின் பின்னால்தான் ஒரு தர்க்கம் இருக்க முடியும். எனவே அப்படியானதொரு அரசாங்கத்தை கையாள வேண்டிய பொறுப்பிலிருக்கும் கூட்டமைப்போ என்ன செய்துகொண்டிருக்கிறது? ஒருவேளை அரசாங்கம் தொடர்ந்தும் இப்படித்தான் இருக்கப் போகிறதுதென்றால், தமிழ் மக்களின் தலைமை என்னும் வகையில் கூட்டமைப்பிடம் இருக்கின்ற மாற்றுத் திட்டம்தான் என்ன? – இப்படித்தானே கேள்விகள் எழும்.

சரி, இதற்கும் கூட்டமைப்பின் எதிர்காலத்திற்கும் என்ன தொடர்பு? கூட்டமைப்பின் தலைமை விடயங்களை சரியாக முன்னெடுக்கவில்லை என்பதுதான் இன்றைய நிலையில் அவ்வப்போது தலைநீட்டிக் கொண்டிருக்கும் விமர்சனம். அதில் முதன்மையானதுதான் கூட்டமைப்பின் தலைமை, அதாவது சம்பந்தன் தமிழ் மக்கள் ஒரு தரப்பு என்னும் நிலையிலிருந்து விடயங்களை கையாளமல், அரசாங்கத்துடன் முற்றிலுமாக ஒத்துப்போய்க் கொண்டிருக்கிறார். அதாவது தமிழ்த் தேசியப் பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்துடன் ஒரு தனியான பேச்சுவார்த்தையை சம்பந்தன் செய்திருக்க வேண்டும். கூட்டமைப்பிற்கும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்குமிடையில் அப்படியானதொரு பேச்சுவார்த்தை இருந்தது. ஆனால் மகிந்த ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட நிலையில், புதிய அரசாங்கத்துடன் அப்படியானதொரு பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் சம்பந்தனோ அதனைச் செய்யவில்லை.
கூட்டமைப்புக்குள் இது தொடர்பில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கிறார். மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இருந்தபோது ஒரு தனித்தரப்பு என்னும் நிலையில் இயங்கிய கூட்டமைப்பானது, ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏன் அதனை கைவிட்டது? அப்படி கைவிடுவதற்கான அவசியம் என்ன? இப்படியான கேள்விகளுக்கு சம்பந்தனிடம் இருக்கின்ற பதில் என்ன என்பதை அறிய முடியவில்லை. ஆனால் மேற்படி கேள்விகள் நியாயமானவை என்பதில் ஐயமில்லை. உண்மையில் இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் ஒரு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தனித்தரப்பு என்னும் தகுதி நிலையானது எப்போதுமில்லாத அளவிற்கு இன்று பலவீனமடைந்திருக்கிறது. ஆனால் இந்த தகுதிநிலையை தமிழ் மக்கள் எக்காரணம் கொண்டும் இழந்துவிடக் கூடாது. எனெனில் அதுதான் தமிழ் மக்களின் உண்மையான பலம். இத்தீவை தங்களின் நலன்களுக்காக கையாண்டுவரும் பலம்பொருந்திய சக்திகளுடன் ஊடாடுவதற்கு அந்தத் தனித்தரப்பு என்னும் தகுதிநிலை ஒன்றுதான் தமிழ் மக்களுக்கு கைகொடுக்கும். ஆனால் சம்பந்தனது தன்னிச்சையான செயற்பாடுகள்தான் அந்த நிலைமையை சீர்குலைத்தது. எனவே, சம்பந்தன் தொடர்ந்தும் தலைமைப் பொறுப்பில் இருக்கக் கூடாது என்பதே தற்போது மேலெழுந்துவரும் வாதம். இந்த இடத்தில்தான் கூட்டமைப்பின் எதிர்காலம் தொடர்பில் மீளவும் கேள்விகள் எழுந்திருக்கின்றன.
கூட்டமைப்பை ஒரு தனியான அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டுமென்று கூட்டமைப்புக்குள் இருந்தவாறே தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்ததும் சுரேஸ் ஒருவர்தான். ஆரம்பத்தில் இதனை ஒரு உட்கட்சி விவகாரமாக கையாண்ட சுரேஸ், பின்னர் இதனை ஒரு பகிரங்க விடயமாக மாற்றியிருந்தார். எனவே சுரேஸ் தேர்தலில் தோல்வியடைந்திராவிட்டால் இப்படியெல்லாம் பேசமாட்டார் என்னும் வாதம் வலுவற்றது. சுரேசின் வாதங்களால் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் கருக்கொண்டன அதிகரித்தன. இந்திய ராஜதந்திரிகள் கூட உங்களுக்குள் ஒற்றுமை அவசியம் என்று கூறுமளவிற்கு கூட்டமைப்பின் உள்முரண்பாடுகள் பிரபலமாகியது. ஆனால் ஆரம்பத்திலிருந்தே கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசு கட்சியானது கூட்டமைப்பை ஒரு தனியான கட்சியாக பதிவு செய்வதற்கு இணங்கியிருக்கவில்லை. இந்த நிலையில்தான் ஏனைய மூன்று கட்சிகளும் உடன்பட்டால் அதனை செய்ய முடியுமென்னும் வாதம் மேலெழுந்தது. இது தொடர்பில் இப்பத்தியாளரும் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். ஆனால் இதற்கு செல்வம் தலைமையிலான டெலோ உடன்பட்டிருக்கவில்லை. இந்த நிலையில், இந்த விவகாரம் அவ்வப்போது விழிப்பதும் பின்னர் உறங்குவதாகவும் இருந்தது. ஆனால் உறங்கிவிடவில்லை.

இவ்வாறானதொரு சூழலில்தான் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் விவகாரம் வெளித்தெரிந்தது. சம்பந்தன் – விக்கினேஸ்வரன் முரண்பாடு தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கம் – அதற்கு கூட்டமைப்பின் பிறிதொரு அங்கத்துவ கட்சியான சித்தார்த்தன் தலைமையிலான டி.பி.எல்.எப் ஆதரவு தெரிவித்தமை அனைத்தும் ஒன்றுசேர்ந்து, உறங்கியும் உறங்காது போன்றும் இருந்த கூட்டமைப்பு விவகாரத்தை மீளவும் விவாத மேடைக்கு கொண்டுவந்தது. ஏனெனில் இப்போது ஈ.பி.ஆர்.எல். எவ் மற்றும் டி.பி.எல்.எப் (புளொட்) ஆகிய கட்சிகள் ஒரு பக்கமாகவும், தமிழரசு கட்சி மற்றும் டெலோ பிறிதொரு புறமாகவும் இருந்தது. அதாவது கூட்டமைப்பு இரண்டாகத் தெரிந்தது. இந்த நிலைமைகள் ஆரம்பத்தில் தமிழரசு கட்சிக்கு ஒரு கலக்கத்தை கொடுத்ததும் உண்மைதான் – அவர்கள் அதனை வெளியில் சொல்லிக் கொள்ளாது விட்டாலும் கூட. ஆனால் சித்தார்த்தன் பலரும் எதிர்பார்த்தது போன்று கூட்டமைப்பின் பெயரில் மேற்கொள்ளப்படும் அரசியல் முன்னெடுப்புக்களிலிருந்து வெளியேற விரும்பவில்லை. சித்தார்த்தனை பொறுத்தவரையில், சம்பந்தனால் முன்னெடுக்கப்படும் அரசியல் நகர்வுகள் ஒரு முடிவுக்கு வரும் வரையில் அதிலிருந்து வெளியேறுவதில்லை என்னும் நிலைப்பாட்டிலேயே அவர் இருக்கிறார்.

உண்மையில் கூட்டமைப்பு என்னும் நிலைப்பாட்டிலிருந்து சித்தார்த்தன் வெளியேறினால் தமிழரசு கட்சி டெலோ ஆகிய இரு கட்சிகளும் இணைந்து கூட்டமைப்பை பிரகடனம் செய்யமுடியாது போகும். அந்த வகையில் பார்த்தால் தற்போதைய நிலையில் கூட்டமைப்பின் எதிர்காலம் என்பது சித்தார்த்தன் தலைமையிலான டி.பி.எல்.எப் இல்தான் தங்கியிருக்கிறது. ஆரம்பத்தில் இந்த இடத்தில் டெலோ இருந்தது. ஆனால் அந்த இடம் தற்போது கைமாறியிருக்கிறது. சித்தார்த்தன் வெளியேறினால் கூட்டமைப்பின் தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் தகுதிநிலையையும் சம்பந்தன் இழக்க நேரிடும். ஏனெனில் தற்போதைய நிலையில் கூட்டமைப்பின் அசலான பங்காளிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ் கூட்டமைப்பின் தலைமை மாற்றப்பட வேண்மென்று கூறிவருகிறது. அந்த வகையில் பார்த்தால் சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழரசு கட்சியுடன் இணைந்து செயற்பட விரும்பவில்லை. அதேவேளை கூட்டமைப்பை தமிழரசு கட்சியிடம் விட்டுக் கொடுக்கவும் விரும்பவில்லை போலும் தெரிகிறது. அதேவேளை கூட்டமைப்பின் அசலான பங்காளிகளில் ஒன்றான, அதாவது விடுதலைப் புலிகள் கால பங்காளியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஏற்கனவே வெளியில் இருக்கிறது. இவர்கள் இருவருடனும் சித்தார்த்தனும் இணைவாராக இருப்பின், கூட்டமைப்பின் உரித்து என்பதும் கைமாறிவிடும் – இல்லாவிட்டால் கூட்டமைப்பை எவருமே பயன்படுத்த முடியாது போகலாம். அப்படியொரு நிலைமை ஏற்பட்டால் டெலொ தனிமைப்பட நேரிடும்.

மொத்தத்தில், தற்போது கூட்டமைப்பு என்பது அரசியல் நிலைப்பாட்டிலும் சரி, கருத்தொருமித்த செயற்பாடுகளிலும் சரி ஒரு கூட்டமைப்பாக இல்லை என்பதே உண்மை. எதிர்காலத்தில் கூட அதற்கான வாய்ப்புக்கள் எதுவும் தென்படவில்லை. இதனையும் மீறி கூட்டமைப்பால் தாக்குப்பிடிக்க முடியுமென்றால் அது ஒரு விடயத்தால் மட்டுமே சாத்தியப்படும். அதாவது, தேர்தலில் வெற்றிபெறுவதற்கு ஒரு இடம் தேவை. பதவி நிலைகள், அதனால் கிடைக்கக் கூடிய அங்கீகாரம் ஆகியவையே கூட்டமைப்பை தக்கவைக்கும். ஏனெனில் கூட்டமைப்பு என்பது அரசியல் ரீதியில் ஏற்கனவே செத்துப்போன ஒன்றாகும். அது வெறுமனே தேர்தல் வெற்றி எண்ணங்களால் மட்டுமே ஊசலாடிக் கொண்டிருக்கிறது. அதுவும் எதுவரை?

யதீந்திரா