முல்லைத்தீவு கேப்பாப்பிலவில் 399 ஏக்கர் காணி மக்களின் பயன்பாட்டிற்கு- டி.எம்.சுவாமிநாதன் (காணொளி)

264 0

முல்லைத்தீவு கேப்பாப்பிலவில் 399 ஏக்கர் காணி மக்களின் பயன்பாட்டிற்கு விடுவிக்கப்படுவதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற்ற பனைசார் உற்பத்திப் பயனாளிகளிற்கான வாழ்வாதார உபகரணங்கள் கையளிப்பு மற்றும் நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான உபகரணங்களை வழங்கி வைத்த பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு குறிப்பிட்டார்.

இம்மாதம் காணிகள் விடுவிப்பது தொடர்பான கூட்டமொன்று அனைத்து அமைச்சர்களையும் ஒன்றிணைக்கும் கூட்டமாக நடாத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதன் போது அனைத்து இராணுவப்படைகளின் தளபதிகளையும் சந்தித்து மக்களின் காணிகளை எவ்வாறு படிப்படியாக விடுவிக்கலாம் என்பது தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இன்றைய பனைசார் உற்பத்திப் பயனாளிகளிற்கான வாழ்வாதார உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வில் பதநீர் உற்பத்தியாளர்களுக்கு சைக்கிள் மற்றும் பனைசார் தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் மொறசஸ் விஞ்ஞான பார்வையிலே பனை வளம் எனும் நூல் வெளியிடப்பட்டது

இன்றைய நிகழ்வில் கௌரவ விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவான், சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், சிவன் பவுண்டேசன் இயக்குனர் வே.கணேஸ்வரன், வடக்கு மாகாண பனை தென்னை வள கூட்டுறவுச்சங்கங்களின் சமாசத் தலைவர் நா.கணேசன், பனை தென்னை அபிவிருத்திச் சங்க தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.