ஆச்சேயில் அகப்பட்ட தமிழ் அகதிகளின் அவலநிலை!

305 0

படகொன்றின் மூலம் 43 புகலிடக் கோரிக்கையாளர்கள்  நியூசிலாந்திற்குப் புறப்பட்ட வேளையில் படகின் இயந்திரம் பழுதடைந்து இந்தோனேசிய கரையை அடைந்ததாக இப்படகில் பயணம் செய்தவரும், இந்த வாரம் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை ஒன்றைப் பிரசவித்தவருமான தாயொருவர் தெரிவித்தார்.

இத்தாய் ஆண் குழந்தையைப் பிரசவித்து ஒரு சில நாட்களே ஆகியுள்ள நிலையில் இவரது குடும்பத்தை இந்தோனேசிய அதிகாரிகள் தடுப்பு முகாமிற்கு அனுப்பியுள்ளனர். இந்தோனேசிய குடிவரவு வாகனம் ஒன்றில் இக்குடும்பத்தினர் ஏற்றிச் செல்லப்படும் காட்சி ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

32 வயதான சிவரஞ்சினி பகீதரன் மற்றும் இவரது கணவரான 34 வயதான பகீதரன் கந்தசாமி ஆகியோர் எட்டு ஆண்டுகளாக சிறிலங்காவின் சிறையில் தாம் அனுபவித்த சித்திரவதைகள் மற்றும் அகதி அந்தஸ்து வழங்கப்பட்ட போதிலும் இந்தோனேசியாவின் லொக்சியுமோவ் அகதி நிலையம் மற்றும் மெடன் குடிவரவுத் தடுப்பு முகாம் ஆகியவற்றில் தாம் தடுத்து வைக்கப்பட்டது தொடர்பாக எடுத்துக் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தோனேசியாவின் வடக்கு மாகாணமான ஆச்சேயின் கரையோரத்தை வந்தடைந்த படகில் 20 ஆண்கள், 15 பெண்கள் மற்றும் ஒன்பது சிறுவர்கள் உட்பட இத் தமிழ் தம்பதிகளும் அடங்குவர்.  இவர்கள் 20 நாட்கள் வரை இந்தோனேசியாவின் கடலில் தரித்து நின்ற பின்னர் ஆச்சே கரையை நோக்கி படகைச் செலுத்தினர்.

இவர்கள் படகிலிருந்து இறங்குவதற்கு இந்தோனேசிய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. சில பெண்னள் படகை விட்டு கீழே இறங்க முற்பட்ட போதிலும், அதிகாரிகள் அவர்களைப் பலவந்தமாகப் படகில் ஏற்றினர். இவர்கள் பயணித்த படகு மீண்டும் கடலிற்குள் செல்ல முடியாத நிலை காணப்பட்டதால், இவர்கள்  பத்து நாட்கள் வரை கடற்கரையில் முகாம் அமைத்து தங்குவதற்கான அனுமதியை இந்தோனேசிய அதிகாரிகள் வழங்கினர்.

achche -tamil refuge (2)

பத்து நாட்களின் பின்னர் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் பேருந்தில் ஏற்றப்பட்டு லொக்சியுமோவ் அகதி முகாமிற்குக் கொண்டு செல்லப்பட்டனர். படகில் பயணித்த தமிழர்களிடம் ஐ.நா அகதிகள் நிறுவனம் நேர்காணலை மேற்கொண்டது. ஆனால் இத்தகவல் தவறாகப் பதிவு செய்யப்பட்டது. அதாவது இவர்கள் நியூசிலாந்திற்குப் பயணம் செய்யவில்லை, அவுஸ்திரேலியாவிற்கே பயணம் செய்ததாக தவறாகப் பதிவு செய்யப்பட்டது.

‘அவுஸ்திரேலியா தனது குடிவரவுச் சட்டங்களை மேலும் இறுக்கமாக்கியுள்ளது என்பதை நாங்கள் அறிவோம். 2014 தொடக்கம் அவுஸ்திரேலியா தனது நாட்டிற்குள் சட்ட விரோதமாக நுழையும் படகுகளை திருப்பி அனுப்பி வருவதை நாம் அறிவோம். ஆகவே நாங்கள் அவுஸ்திரேலியாவிற்குச் செல்லாது நியூசிலாந்திற்குச் செல்வதெனத் தீர்மானித்தோம்’ என பகீதரன் தெரிவித்தார்.

நியூசிலாந்து விமான நிலையத்தை அடைந்த 11 புகலிடக் கோரிக்கையாளர்கள் போதிய ஆவணங்களைச் சமர்ப்பிக்காததால் ஒக்லாண்ட்டிலுள்ள மௌன்ற் எடென் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.

‘கிட்டிய எதிர்காலத்தில் நியூசிலாந்திற்கு புகலிடக் கோரிக்கையாளர்கள் பெருமளவில் வருவதற்கான சாத்தியம் காணப்படாது என நான் நம்புகிறேன். ஏனெனில் நாங்கள் குடிவரவுச் சட்டத்தை மேலும் இறுக்கமாக்கியுள்ளோம். ஆகவே ஆபத்தான கடற்பயணத்தின் மூலம் மக்கள் படகுகளில் நியூசிலாந்திற்குள் நுழைவதற்கு இந்தச் சட்டங்கள் உத்வேகத்தை வழங்கமாட்டாது’ என நியூசிலாந்தின் பிரதமர் பில் இங்க்லிஸ் தெரிவித்தார்.

ஆனால் நியூசிலாந்துப் பிரதமரின் கருத்திற்கு முரண்பாடான கருத்தொன்றை இந்நாட்டின் குடிவரவு பொறுப்பதிகாரி அன்னா போல்லே தெரிவித்துள்ளார். அதாவது நியூசிலாந்தானது ஆட்கடத்தல்காரர்களின் இலக்காக உள்ளது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை எனவும் சட்டவிரோதக் குடிவரவாளர்கள் பெருமளவில் நாட்டிற்குள் நுழைவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு முழுஅளவில் தயாராக வேண்டிய நிலை காணப்படுவதாகவும் அன்னா போல்லே தெரிவித்தார்.

படகுகளில் நியூசிலாந்து நோக்கிப் புறப்பட்ட 44 தமிழர்களும் தலா 3200 நியூசிலாந்து டொலரை தென்னிந்தியாவிலுள்ள முகவர் ஒருவரிடம் வழங்கியதாகவும் பகீதரன் தெரிவித்தார்.

indonesia-tamils-boat (3)

ஆச்சே மாகாணத்தை படகின் மூலம் சென்றடைந்த 44 புகலிடக் கோரிக்கையாளர்களில் ஐந்து பேரின் புகலிடக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், 17 பேர் மீண்டும் சிறிலங்காவிற்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அத்துடன் எஞ்சிய 22 பேரும் அவர்களது சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பக் கூடிய ஆபத்தில் தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இப்பயணத்திற்கு முகவராகச் செயற்பட்டவர் புதிதாகப் படகொன்றை வாங்கியதுடன் படகோட்டி ஒருவரையும் நியமித்து தென்னிந்தியாவின் வேளாங்கண்ணி எனும் இடத்திலிருந்து இப்பயணம் ஆரம்பிக்கப்பட்டது. ‘இந்தோனேசியாவைக் கடப்பதற்குத் தேவையான போதியளவு எரிபொருளை எம்மிடம் இல்லை என்பதை பயணத்தின் அரைவாசியில் நாம் உணர்ந்து கொண்டோம். அவர்கள் எம்மை ஏமாற்றி விட்டார்கள்.’ என பகீதரன் தெரிவித்தார்.

‘ஆட்கடத்தல்காரர்களின் பொய் வாக்குறுதியை நம்பி ஏமாந்து விட்டோம்’ என பகீதரனும் அவரது மனைவியும் மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் மூலம் தெரிவித்தனர். இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்திலுள்ள லொக்கிங்கவின் கபுக் கடற்கரை நோக்கி படகைத் திசை திருப்புமாறு இந்தோனேசிய குடிவரவு மற்றும் கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் படகிற்கு எரிபொருள் பற்றாக்குறையாக உள்ளதால் அதனைப் பெற்று வருவதாகக் கூறி படகோட்டி வேறொரு மீன்பிடிப்படகிற்குள் பாய்ந்ததாகவும் அதன் பின்னர் அவரைக் காணவில்லை எனவும் பகீதரன் தம்பதிகள் தெரிவித்தனர்.

தமிழ்ப் புலிகள் அமைப்பில் தாம் இணைந்தமையால் போரின் பின்னர் சிறிலங்கா அரசாங்கத்தின் சிறையில் எட்டு ஆண்டுகள் தாம் தடுத்து வைக்கப்பட்டதாகவும் இத்தம்பதிகள் கூறினர். தாம் தடுத்து வைக்கப்பட்ட போது சிறிலங்கா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் சித்திரவதைகளுக்கு உள்ளாகியதாகவும் பகீதரனும் அவரது மனைவியும் தெரிவித்தனர். ‘சித்திரவதையின் போது எனது கால் நகங்கள் மற்றும் இரு கட்டைவிரல்களின் நகங்களும் பிடுங்கப்பட்டன’ என பகீதரன் தெரிவித்தார்.

சில நாட்களின் முன்னரே ஆண் குழந்தை ஒன்றைப் பிரசவித்த சிவரஞ்சினி, லொக்சியுமோவ் அகதி நிலையத்திலிருந்து மெடனிலுள்ள குடிவரவுத் தடுப்பு மையத்திற்கு பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்ட போது பகீதரன் தம்பதிகள் கண்ணீர் விட்டு அழுதவாறு தம்மை அங்கு கொண்டு செல்ல வேண்டாம் என கெஞ்சினர்.

achche -tamil refuge (3)

அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையைப் பிரசவித்த சிவரஞ்சினி வெறும் மூன்று நாட்களே ஆகிய நிலையில் வேறிடத்திற்கு பலவந்தமாகக் கொண்டு செல்லப்பட்ட போது அவர் வலியால் துடிதுடித்தார். ‘எனக்கு உதவுங்கள்’ என அவர் கெஞ்சினார்.

‘என்னால் சரியாக இருக்கவோ அல்லது நிற்கவோ முடியவில்லை. அறுவைச் சிகிச்சை மூலமே பிரசவம் இடம்பெற்றதால் எனது உடல் வலி இன்னமும் ஆறவில்லை. அத்துடன் கடந்த முறை பிரசவத்தின் போதும் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதால் ஏற்கனவே காயங்கள் உள்ளன’ என சிவரஞ்சினி அழுதவாறு தெரிவித்தார்.

இவர்களது இரண்டு வயது மகனான ரதீசன் ஏற்கனவே மெடன் குடிவரவுத் தடுப்பு முகாமில்  தடுத்து வைக்கப்பட்டுள்ள 22 பேருடன் தங்க வைக்கப்பட்டுள்ளான். பகீதரன் குடும்பத்தினர் சிறிலங்காவிற்குத் திருப்பி அனுப்பப்படும் அபாய நிலையில் உள்ள 27 வயதான சாரு மற்றும் அவருடைய 29 வயது கணவரான குமார் ஆகியோர் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்திற்குக் கொண்டு செல்லப்படவுள்ளனர்.

சாரு படகில் பயணித்த போது ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருந்தார். ‘அவர்கள் என்னைத் திருப்பி அனுப்ப முயற்சித்தால் நான் இங்கேயே இறக்க விரும்புகிறேன். இந்த வாழ்வை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. நான் எனது நடுத்தெருவில் வைத்து எனது மகனிற்கு பாலூட்டுகிறேன்’ என சாரு தெரிவித்தார்.

இவ்விரு தம்பதிகளில் ஒரு தம்பதிக்கு புகலிடக் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. ஆனால் மற்றைய தம்பதியின் புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இவ்விரு தம்பதிகளும் சிறிலங்காவிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என குடிவரவிற்கான அனைத்துலக அமைப்பு மற்றும் ஐ.நா அகதிகள் நிறுவனத்திடமிருந்து அழுத்தம் இடப்பட்டுள்ளது. குடிவரவிற்கான அனைத்துலக அமைப்பு இது தொடர்பாக பதிலளிக்க மறுத்துவிட்டது.

நியூசிலாந்து கடந்த ஆண்டு தனது அகதிகள் எண்ணிக்கையை 750 தொடக்கம் 1000 ஆக அதிகரித்திருந்தது. நியூசிலாந்தின் துறைமுகம் அல்லது விமான நிலையத்தில் வைத்தே அகதி நிலை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால் பெரும்பாலான புகலிடக் கோரிக்கையாளர்கள் செல்லுபடியாகும் நுழைவுவிசைவுகளுடனேயே நியூசிலாந்தைச் சென்றடைகின்றனர்.

சட்டரீதியற்ற வகையில் நியூசிலாந்திற்குள் பயணிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கான சட்டம் ஒன்று 2013ல் ஜோன் கீ அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டது. குடிவரவுச் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டமையால் நியூசிலாந்திற்குள் வரும் சட்ட ரீதியற்ற குடிவரவாளர்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கீ தெரிவித்தார்.

சிவரஞ்சினி மற்றும் பகீதரன் ஆகியோருக்கு அகதி நிலை வழங்கப்பட்ட போதிலும், நியூசிலாந்தை அடைவதற்கான அனுமதி வழங்கப்படுமா என்பதை அறிய இவர்கள் காத்திருக்கின்றனர்.

ஆங்கிலத்தில்  – KATE  SHUTTLEWORTH
வழிமூலம்       – Stuff
மொழியாக்கம் – நித்தியபாரதி