மஹிந்த ராஜபக்ஷ மீதான அச்சமே கால அவகாசத்திற்கான பின்னணி : கூட்டு எதிர்க்கட்சி

230 0

முன்ளாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்து விடுவார் என்கின்ற அச்சம் அரசாங்கத்திற்கு உள்ளது. அவ்வாறு அவர் ஆட்சிக்கு வந்தால் சர்வதேச நாடுகள் அவரை நெருக்கடிக்குள்ளாக்குவதற்கான உபாயமாகவே இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையில் இரு வருட கால அவகாசம் கோரியுள்ளது. மேலும் அக்கால அவகாசத்திற்கு சில தமிழ் பிரிவினைவாதிள் எதிர்ப்புத் தெரிவித்தாலும் அதிகளவானோர் அதனை ஏற்றுக்கொண்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பொரளையிலுள்ள என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை. மேலும் அவ்வாறான விடயம் ஒன்றுக்கு உடன்படவில்லை’ என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று (நேற்றுமுன்தினம்) பாராளுமன்றில் குறிப்பிட்டிருந்தார். எனினும் அது உண்மைக்குப் புறம்பானதாகும். ஏனெனில் 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். ஏனெனில் தமது நாட்டு எதிரான பிரேரனை ஒன்றுக்கு இலங்கையே முன்வந்து அனுசரணை வழங்கியிருந்தது. அவ்வாறானதொரு விடயத்தை வேறு நாடுகள் செய்திருக்கவில்லை.

எனவே அப்பிரேரனையின் ஆறாம் உறுப்பிரையின் பிரகாரம் யுத்தக்குற்றம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு பொதுநலவாய நாடுகள் மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டத்தரணிகள் பங்குகொள்ள முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே இலங்கை சட்டமா அதிபர் மற்றும் பொலிஸாரின் பணிகளையும்  வெளிநாட்டவர்கள் மேற்கொள்ளும் அடிப்படையில் அதன் உள்ளார்ந்த அர்த்தம் அமைந்துள்ளது.

‘2015 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட பிரேரனைக்கு அனுசரனை வழங்கியதுபோல் இம்முறை கொண்டுவரப்படவுள்ள பிரேரனைக்கும் அனுசரனை வழங்குகிறோம். ஆனால் திருத்தம் ஒன்றை மேற்கொள்வதற்கு இடமளிக்குமாறு’ அரசாங்கம் கோரியிருக்கலாம்.  அவ்வாறு செய்யாது 2015 ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் இரு வருட கால அவகாசம் கோரியுள்ளது.

இரு வருட கால அவகாசம் போருவதற்கு பின்னணி ஒன்றுள்ளது. அப்பின்னணியை அடிப்படையாகக் கொண்டுதான் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர செயற்பட்டுக்கொண்டிருக்கிறார். அதாவது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவார் என்ற அச்சம் அரசாங்கத்திற்கு உள்ளது. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் மேற்கத்தைய நாடுகள் அவரை நெருக்கடிக்குள்ளாக்கும் துரும்புச்சீட்டொன்று தேவையாக உள்ளது.

எனவேதான் யுத்த குற்ற விடயத்தை ஒரே முறையில் தீர்த்துக்கொள்ளாமல் கால நீடிப்பு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆகவேதான் தமிழ் பிரிவினைவாதிகளில் சிலர் இரு வருட கால அவகாசம் வழங்குவதை எதிர்த்தாலும் அதிகளவானோர் அதற்கு உடன்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.