லண்டன் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

228 0

லண்டனில் நடந்த தீவிரவாத துப்பாக்கிச்சூடு தாக்குதலில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்த 40 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இங்கிலாந்து தலைநகரம் லண்டனில் தேம்ஸ் நதிக்கரையையொட்டி பாராளுமன்ற கட்டிடம் உள்ளது. நேற்று இங்கிலாந்து நேரப்படி பிற்பகல் 2.30 மணி அளவில் பாராளுமன்ற கூட்டம் நடந்து கொண்டிருந்தது. பாராளுமன்றத்தையொட்டி தேம்ஸ் நதியில் வெஸ்ட் மினிஸ்டர் பாலம் இருக்கிறது. இந்த பாலத்தின் மக்கள் கூட்டமாக நடந்து வருவது வழக்கம்.

தீவிரவாதி ஒருவன் மின்னல் வேகத்தில் இந்த பாலத்தின் வழியாக காரை ஓட்டிக்கொண்டு பாராளுமன்றம் நோக்கி வந்தான். இதில் பாலத்தில் நடந்து வந்தவர்கள் மீது கார் மோதியது.

ஆனால் அதை பொருட்படுத்தாமல் வேகமாக ஓட்டியபடி பாராளுமன்றத்துக்கு அருகே வந்தான். அப்போது பாராளுமன்ற வளாகத்தையொட்டி அமைக்கப்பட்டுள்ள இரும்பு வேலியில் கார் மோதியது. காரை ஓட்டிவந்த தீவிரவாதி அதில் இறங்கி பாராளுமன்ற வாசலை நோக்கி ஓடிவந்தான். அவனது கையில் 7 அங்குல கத்தி ஒன்று இருந்தது.

இதை பார்த்ததும் அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸ் அதிகாரி கெய்தர்பால்மர் அவனை தடுப்பதற்காக ஓடினான். அந்த போலீஸ்காரர் கையில் ஆயுதம் எதுவும் இல்லை. தீவிரவாதி போலீஸ் அதிகாரியை கத்தியால் குத்தினான். இதில் அந்த இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

பின்னர் பாராளுமன்றத்தில் நுழைவதற்காக தீவிரவாதி ஓடினான். இதற்குள் உஷாரடைந்த போலீசார் அவனை நோக்கி சரமாரி சுட்டனர். இதில் தீவிரவாதி உயிரிழந்தான்.

பாலத்தில் தீவிரவாதி கார் மோதியதில் 2 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். 41 பேர் படுகாயமடைந்திருந்தனர். அவர்களில் ஒருவர் ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். 40 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த தாக்குதலில் போலீஸ் அதிகாரி உள்ளிட்ட 4 பேரும் தீவிரவாதியும் இறந்துள்ளனர். இதன்படி பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. தீவிரவாதி காரை ஓட்டிவந்து மோதியபோது பாலத்தில் சென்ற பெண் ஒருவர் ஆற்றுக்குள் குதித்தார். படுகாயத்துடன் இருந்த அவரை உயிருடன் மீட்டனர்.

பிரான்ஸ் நாட்டில் இருந்து மாணவர்கள் இங்கிலாந்துக்கு சுற்றுலா வந்திருந்தனர். அவர்கள் 13 பேர் இந்த பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்கள் மீதும் கார் மோதியது. இதில் 4 மாணவர்கள் காயமடைந்தனர்.

தீவிரவாதியின் கார் மோதி சிகிச்சை பெற்று வருபவர்களில் 4 பேருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தீவிரவாதிக்கு 45-ல் இருந்து 50 வயது இருக்கும் என்று தெரியவந்துள்ளது. ஆனால் அவனது பெயர் மற்றும் மற்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை. அவன் ஓட்டிவந்த கார் கடத்தி வந்ததாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. ஆனாலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் இதில் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிக்கு வேறு ஒரு நபர் உதவியதாக தெரியவந்துள்ளது. அவர் யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறார்கள். லண்டன் முழுவதும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. நேற்று தாக்குதல் நடந்தபோது வெஸ்ட் மினிஸ்டரில் உள்ள சுரங்க ரெயில் நிலையம் மூடப்பட்டது. இன்று அந்த ரெயில் நிலையம் வழக்கம்போல் இயங்கியது.

தாக்குதல் நடந்தபோது பிரதமர் தெரசாமே பாராளுமன்ற வளாகத்தில் தான் இருந்தார். அவர் பத்திரமாக வெளியேற்றப்பட்டார். உள்ளே இருந்த எம்.பி.க்கள் 4 மணி நேரம் அங்கேயே அமர வைக்கப்பட்டிருந்தனர். இனி ஆபத்து இல்லை என்று தெரிந்ததற்கு பிறகு அவர்கள் வெளியேற அனுமதிக்கப்பட்டனர். தாக்குதலுக்கு பிறகு பாராளுமன்ற கூட்டம் முற்றிலும் ஒத்திவைக்கப்பட்டது.

முதலில் இந்த தாக்குதல் வாகன விபத்து என்றே கருதப்பட்டது. பின்னர் தான் அது தீவிரவாதி தாக்குதல் என உறுதியானது. இதுதொடர்பாக பிரதமர் தெரசாமே கூறியதாவது:-

இது தீவிரவாதி தாக்குதல் என்பதை உறுதிபடுத்தி உள்ளோம். லண்டனில் எல்லா கலாச்சாரத்தை கொண்ட, எல்லா மதத்தை கொண்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த மக்கள் மீது நடத்தியிருக்கும் தாக்குதல் வக்கிரமான ஒன்று. இதன் மூலம் இங்கிலாந்தின் மதிப்பை அழித்துவிடலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது.

இதுபோன்ற மோசமான நபர்கள் தாக்குதலால் இந்த நாட்டுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடாது. தீவிரவாதிகள் வி‌ஷயத்தில் நாங்கள் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். இங்கு எல்லோருக்கும் ஜனநாயகமும், உரிமையும், பேச்சு சுதந்திரமும் உள்ளது. அது என்றும் காப்பாற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

லண்டன் மேயர் சதிக்கான் கூறும்போது, தீவிரவாதிகள் கோழைத்தனமாக நடந்தியுள்ள இந்த தாக்குதலை ஒருபோதும் வெற்றியடைய விடமாட்டோம் என்று கூறினார்.

தீவிரவாதி யார் என்பதை கண்டுபிடிக்க தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவர் ஆசியா நாட்டை சேர்ந்தவர் என்பதை மட்டும் கூறியுள்ளனர். மற்ற விவரங்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை. எனவே அனைத்து இடங்களிலும் விசாரணை நடந்து வருகிறது.

அவருக்கு உதவி செய்தவர்கள் இங்கிலாந்தில் தான் இருக்க வேண்டும் என்று கருதி சந்தேகப்படும் அனைத்து இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது. இங்கிலாந்தில் 2005-ம் ஆண்டு 7 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. அதில் 52 பேர் பலியானார்கள்.

அதன்பிறகு இப்போது தான் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெல்ஜியம் தலைநகரம் பிரசல்ஸ் நகரில் தீவிரவாதிகள் தாக்கியதில் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அந்த நிகழ்வு நடந்து ஒரு ஆண்டுக்குள் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் தாக்குதல் நடந்ததால் பக்கத்து நாடான பிரான்சிலும் தாக்குதல் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதி அங்கு உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஈபிள் கோபுரம் அமைந்துள்ள பகுதியில் நேற்று இருட்டடிப்பு செய்யப்பட்டது.