சசிகலா பதவியில் நீடிக்க முடியுமா?: ஏப். 17-ந்தேதி தேர்தல் கமி‌ஷன் விசாரணை

248 0

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தை விதிகள் ஏப். 17-ந்தேதி முடிவடைவதால், அதற்கு பிறகு சசிகலா பொதுச் செயலாளர் நியமனம் சர்ச்சை அடுத்த மாதம் 17-ந்தேதிக்கு பிறகு விசாரிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

அ.தி.மு.க.வில் சசிகலா அணியினருக்கும், ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கும் ஏற்பட்டுள்ள போட்டி அடுத்தடுத்து பரபரப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இரு அணியினரும் அ.தி.மு.க.வின் தேர்தல் சின்னமான இரட்டை இலை சின்னத்தை கேட்டதால், யாருக்கும் கொடுக்க இயலாத காரணத்தால் அந்த சின்னத்தை தலைமை தேர்தல் கமி‌ஷன் முடக்கி உள்ளது.

அதோடு அ.தி.மு.க. என்ற பெயரையும் இரு அணியினரும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை சசிகலா தரப்பினர் பயன்படுத்தக் கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகிய இருவரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் மற்றும் துணை பொதுச் செயலாளர் பதவிகளில் நீடிக்க முடியுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. அந்த பதவிகளில் இருந்து அவர்களை விலக்க வேண்டும் என்று ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தலைமை தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் நேற்று இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்த போது, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவி பற்றி இப்போது எதுவும் பேச வேண்டாம் என்று அறிவுறுத்தியது. இது தொடர்பாக அடுத்த மாதம் (ஏப்ரல்) விசாரணை நடத்தி தீர்ப்பு வெளியிட தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதற்காக தேவைப்படும் ஆவணங்களை, ஆதாரங்களை ஏப்ரல் மாதம் 17-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அது போல சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது சரிதான் என்பதற்கான ஆதாரங்களை தருமாறு சசிகலா தரப்புக்கும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தை விதிகள் ஏப்ரல் 17-ந்தேதி முடிவடைவதால், அதற்கு பிறகு சசிகலா பொதுச் செயலாளர் நியமனம் சர்ச்சை பற்றி 17-ந்தேதிக்கு பிறகு விசாரிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இரு அணியினரும் ஆதாரங்கள் தாக்கல் செய்த பிறகு வக்கீல்கள் வாதம் நடைபெறும்.

அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் தீர்ப்பை வெளியிடும். அ.தி.மு.க. சட்ட விதிகள் அனைத்தும் சசிகலா பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்ட விதத்துக்கு எதிராக இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே சசிகலா அ.தி.மு.க. பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டது செல்லுமா என்பது அடுத்த மாத இறுதியில் தெரிந்துவிடும்.