பிரித்தானிய நாடாளுமன்றத்துக்குள் துப்பாக்கிச்சூடு, அவசரமாக அழைத்துச்செல்லப்பட்டார் தெரேசா மே!

244 0

லண்டனிலுள்ள பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தை “இப்போதைக்கு பயங்கரவாத தாக்குதலாக” கருதுவதாக லண்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த ஒரு பெண் உயிரிழந்ததாகவும், மேலும் சிலர் மோசமாக காயமடைந்திருப்பதாகவும் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்திற்குள் காவல்துறை அதிகாரி கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

தாக்குதலாளி மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். காயமுற்ற அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மேலும் கார் ஒன்று வேகமாக ஓட்டப்பட்டு அங்கிருந்த தடுப்புச் சுவரில் பலவந்தமாக மோதச் செய்யப்பட்டதாகவும் அதற்கு முன் அந்த கார் நான்கு அல்லது ஐந்து பாதசாரிகள் மீது ஏற்றப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றன.

நாடாளுமன்ற வளாக சுற்றுச்சுவரில் கார் மோதியதைக் காட்டும் காட்சிகளை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிவருகின்றன.

அவசர சிகிச்சை வாகனங்களும், காவல்துறை வாகனங்களும் அங்கு குழுமியுள்ளன.

துப்பாக்கி சூட்டு சத்தம் கேட்டவுடன் நாடாளுமன்றத்துக்குள்ளிருந்த பிரிட்டன் பிரதமர் தெரெசா மே அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் அவசரமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

நாடாளுமன்ற வளாகத்திற்குள் இருந்தவர்கள் யாரும் வெளியேறவேண்டாம் என்று அறிவிக்கப்பட்டிருப்பதோடு, நாடாளுமன்ற வளாகத்தை நோக்கி யாரும் வரவேண்டாமென்றும் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.