வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் அருட்கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை(காணொளி)

369 0

வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் அரசாங்கம் மற்றும் கிழக்கு மாகாணசபை எதுவித நடவடிக்கையும் எடுக்காமை தொடர்பில்பெரும் விரகத்தியளிப்பதாக உள்ளதாக சர்வமத ஒன்றியத்தின் தலைவரும் மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்ட ஆயருமான அருட்கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை தெரிவித்தார்.

இதேபோன்று அரசாங்கம் புறக்கணிக்குமானால் அனைத்து பெண்கள் அமைப்புகளையும் ஒன்றுதிரட்டி அவர்களுக்கு சார்பாக போராட்டங்களை நடாத்தவேண்டிய நிலையேற்படும் என மட்டக்களப்பு மாவட்ட மகளிர் சம்மேளனத்தின் தலைவி திருமதி செல்வி மனோகர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இரண்டாவது தடவையாகவும் மட்டக்களப்பு மாவட்ட சர்வமத ஒன்றியம் ஆதரவு தெரிவித்து நேற்று செவ்வாய்க்கிழமை கலந்துகொண்டது.

இதன்போது இந்து,கிறிஸ்தவ,இஸ்லாமிய மதத்தலைவர்களும் கலந்துகொண்டதுடன் அகில இலங்கை வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் இணைப்பாளரும் கலந்துகொண்டார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை,

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தபோது அவர்களின் பிரச்சினையை தீர்ப்போம் என உறுதியளித்தது.

கிழக்கு மாகாண முதலமைச்சரும் கல்வி அமைச்சரும் கூறினார்கள் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினையை தீர்ப்போம் என்று.ஆனால் இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்காதது விரகத்தியை ஏற்படுத்தியுள்ளதுடன் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உயர்நிலையில் உள்ளவர்கள் இந்த வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு நடவடிக்கையெடுக்கவேண்டும்.இவ்வளவுபேர் வேலையில்லாமல் உள்ளார்கள் என்றால் அவர்கள் பசியுடன் உள்ளார்கள்.

மட்டக்களப்பு மாவட்டம் கல்வியில் பின்தங்கிய நிலையில் உள்ளதாக சிலர் கூறுகின்றனர்.மட்டக்களப்பு மாவட்டம் கல்வியில் பின்தங்கவில்லை.இத்தனை பட்டதாரிகள் இருப்பது அதற்கு சான்றாகும்.

கற்று பட்டம்பெற்றவர்களை அரசாங்கம் உதாசீனம் செய்கின்றது.அரசாங்கம் முன்வந்து இவர்களின் பிரச்சினைக்கு ஏதாவத நடவடிக்கை எடுக்கNவுண்டும்.இன்னும் கண்ணை மூடிக்கொண்டிருக்காமல் வந்து இவர்களுக்கு ஏதாவது நடவடிக்கையெடுக்கவேண்டும்.

எப்போதும் நாங்கள் சமாதான மற்றும் அகிம்சை வழிபோராட்டங்களை வரவேற்கின்றோம்.நம்பிக்கையில் வலுவாக இருந்து உங்களது போராட்டங்களை முன்னெடுக்கும்போது அது நிச்சயமாக வெற்றிபெறும்.சர்வமத ஒன்றியத்தின் ஆதரவு தொடரும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து நேற்றைய போராட்டத்தில் கலந்துகொண்டன.

அதிளவில் பெண்கள் வீதிகளில் போராடிவருவதை பார்க்கும்போது கவலையளிப்பதாகவுள்ளதாகவும் தொடர்ந்து இந்த போராட்டத்தினை அரசாங்கம் புறக்கணிக்குமானால் அனைத்து பெண்கள் அமைப்புகளையும் ஒன்றுதிரட்டி அவர்களுக்கு சார்பாக போராட்டங்களை நடாத்தவேண்டிய நிலையேற்படும் என மட்டக்களப்பு மாவட்ட மகளிர் சம்மேளனத்தின் தலைவி திருமதி செல்வி மனோகர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான வேலையற்ற பட்டதாரிகளாக பெண்கள் காணப்படுவதாகவும் அவர்கள் தங்களது கைக்குழந்தைகளுடன் வீதியில் போராடிவருவதை அரசாங்கம் உதாசீனம் செய்துவருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இதேநேரம் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் புதன்கிழமை ஒரு மாதத்தினை பூர்த்திசெய்யவுள்ள நிலையில் அன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகள் அனைவரையும் காந்தி பூங்கா வருகைதருமாறு மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

கடந்த மாதம் 22ஆம் திகதி மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் தமது சத்தியாக்கிரக போராட்டத்தினை காந்தி பூங்கா முன்பாக ஆரம்பித்த நிலையில் நேற்று 29 நாட்களையும் கடந்து சத்தியாக்கிரக போராட்டம் நடைபெற்றுவருகின்றது.

 

மத்திய மாகாண அரசாங்கங்கள் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்;டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

 

இரவு பகலாக நடைபெற்றுவரும் இந்த போராட்டம் தொடர்பில் அரசியல்வாதிகளும் அரசாங்கமும் கிழக்கு மாகாணசபையும் உரிய நடவடிக்கைகளை இதுவரையில் எடுக்கவில்லையென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றச்சாட்டுகளை தெரிவிக்கின்றனர்.

 

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு அபாயம் நிலவிவருவதாகவும் வேலையற்ற பட்டதாரிகள் இரவு வேளைகளில் கடுமையான நுளம்புக்கடிக்கும் மத்தியில் போராட்டத்தினை நடாத்திவருவதாகவும் எவருக்காவது ஏதாவது நேருமானால் அதற்கான முழுப்பொறுப்பினையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ளவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் ரி.கிஷாந்த் தெரிவித்தார்.

 

30நாட்களை நெருங்கியுள்ள நிலையிலும் மத்திய மாகாண அரசாங்களினால் ஆக்கபூர்வமான பதில்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

கடந்த 14ஆம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர் பிரதரின் ஆலோசகருடன் சந்திப்பினை மேற்கொண்டிருந்த நிலையில் நியமனங்களை வழங்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டபோதிலும் இதுவரையில் அது தொடர்பிலான தீர்க்கமான பதில்களும் வழங்கப்படவில்லை.

 

இதனை ஒரு வெறும் கண்துடைப்பாகவே கருதுவதாகவும் அவர் வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் ரி.கிஷாந்த் தெரிவித்தார்.

எங்கள் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 30வது தினம் நிறைவடைகின்றது.; மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகளுக்கு நாங்கள் அழைப்பு விடுகின்றோம்.

 

சத்தியாக்கிரக போராட்டம் நடைபெறும் இடத்திற்கு அனைத்து அரசியல்வாதிகளும் வருகைதந்து எமது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு என்னன்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் எங்களுக்கு தெளிவுபடுத்தப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.