இலங்கைக்கு கால அவகாசம் – இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்

201 0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டுகள், கால அவகாசம் வழங்கும் யோசனைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் ஆளும் கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வி.மைத்ரேயன், இந்திய ராஜ்ய சபையில் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை நடத்துவதற்கு இந்தியா வலியுறுத்த வேண்டும் என்றும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை ஏற்படுத்துவதற்கு இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கும் பிரேரணை மீது நாளைய தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் விவாதம் இடம்பெறவுள்ளது.

குறித்த பிரேரணை மீதான விவாதத்தில் இலங்கை தொடர்பான தத்தமது நிலைப்பாடுகளை சர்வதேச நாடுகள் முன்வைக்கும்.

இதையடுத்து, வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும்.

அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட இந்தப் பிரேரணைக்கு இணை அனுசரனை வழங்குவதாக இலங்கை அரசாங்கமும் அறிவித்துள்ளது.

அத்துடன், மனித உரிமைகள் பேரவையின் பெரும்பான்மையான உறுப்பு நாடுகளும் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், வாக்கெடுப்பின்றி, அது நிறைவேற்றப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.