சிறீலங்காவின் மீறப்பட்ட வாக்குறுதிகள் – புதுடெல்லி ஊடகம்

269 0

2015ல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு சிறிலங்கா இணை அனுசரணை வழங்கியதன் மூலம் அனைத்துலக அமைப்பின் நம்பகத்தன்மையைப் பெற்றுக்கொண்டது.

ஜெனிவாவில் சிறிலங்காவால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு ஏற்ப, தற்போதைய சிறிலங்கா அரசாங்கமானது நாட்டில் காணப்பட்ட உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றியதுடன், இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பொதுமக்களின் நிலங்களையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தது.

2015ல் நிறைவேற்றப்பட்ட பேரவையின் தீர்மானத்தில், போரின் போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக குறிப்பாக இறுதிக்கட்ட யுத்தத்தில் 40,000 வரையான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்காக அனைத்துலக நீதிபதிகள் மற்றும் வெளிநாட்டு வல்லுனர்களை உள்ளடக்கிய நீதிப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அனைத்துலகச் சட்டத்தின் பிரகாரம், மனிதாபிமானத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள் இனப்படுகொலை எனவே வரையறுக்கப்பட்டுள்ளது. போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டு நீதிப் பொறிமுறைகள் ஒருபோதும் வெற்றியளிப்பதில்லை.

‘சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் என்பது சிறிலங்கா அரசால் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட குற்றங்களாகும். ஆகவே அனைத்துலகக் குற்றங்களின் அடிப்படையில் சிறிலங்கா அரசே போர்க் குற்றவாளியாகக் காணப்படுகிறார். இந்நிலையில் கம்போடியா, கிழக்குத் தீமோர், கொசோவோ, சியராலியோன் போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட கலப்பு நீதிமன்றங்கள் மற்றும் விசாரணைகள் போன்றே சிறிலங்கா தொடர்பிலும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என கருதப்படுகிறது’ என ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்துலக நீதிபதிகள், பாதுகாப்பு சட்டவாளர்கள், வழக்கறிஞர்கள், விசாரணையாளர்கள் போன்றோரை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்பட்டு சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்களில் அனைத்துலக மனித உரிமைச் சட்டம் மற்றும் போர்க் குற்றங்கள் போன்றன எவ்வாறு மீறப்பட்டுள்ளன என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் இது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மார்ச் 03 அன்று இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத்தொடரின் விவாதத்தின் போது அல் ஹுசேன் வலியுறுத்தினார்.

இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் வர்த்தக மற்றும் பொதுமக்களின் ஏனைய நடவடிக்கைகளில் சிறிலங்கா இராணுவத்தினர் தலையீடு செய்வது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.zeid-colombo

சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்கள் போன்றன தடைசெய்யப்பட்டுள்ளன என்பதுடன் இவ்வாறான மீறல்கள் இடம்பெறுமாயின் அவை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு தண்டனை வழங்கப்படும் என சிறிலங்கா இராணுவ, புலனாய்வு மற்றும் காவற்துறை ஆகியவற்றின் அனைத்துப் பிரிவுகளுக்கும் சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக அறிவித்தல் விடுக்க வேண்டும் என மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளரின் அலுவலகத்தால் விடுக்கப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அனைத்து வகையான கண்காணிப்புக்கள், சித்திரவதைகள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், சமூக ஆர்வலர்களுக்கு எதிரான திட்டமிட்ட பழிவாங்கல்கள் போன்றன உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என அனைத்துப் பாதுகாப்புப் படையினருக்கும் அரசாங்கம் கட்டளை வழங்க வேண்டும் எனவும் உயர் ஆணையாளரின் அலுவலகம் சிறிலங்கா அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

நாட்டில் இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் பலவந்தக் காணாமற் போன சம்பவங்கள் தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்படுவதுடன், இவ்வாறான மீறல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் இதற்கான கட்டளைகளை வழங்கிய பொறுப்புநிலை அதிகாரிகள் போன்ற அனைவரும் எவ்வித பாரபட்சங்களுமின்றி நீதியின் நிறுத்தப்படவேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதில் சிறிலங்கா அரசாங்கம் மேலும் காலத்தை இழுத்தடிப்புச் செய்வதாகவும் இது நாட்டில் நிலையான அமைதி மற்றும் நிலைத்தன்மையை எட்டுவதில் அச்சுறுத்தலாக அமையும் எனவும் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசாங்கமானது சில சட்ட சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளதுடன், நல்லிணக்கம் தொடர்பில் நல்லெண்ண சமிக்கைகளைக் காண்பிப்பதாகவும், ஆனால் இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள நகர்வுகள் திருப்திகரமானதாக இல்லை எனவும் ஒத்துழைப்பு அற்றதாகவும் காலத்தை இழுத்தடிப்பதாகவும் உள்ளதாக அல் ஹுசேன் எச்சரித்துள்ளார்.

அனைத்துலக நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்களைக் கொண்ட சிறப்பு போர்க்குற்ற விசாரணை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என உயர் ஆணையாளர் கோரிக்கை விடுக்கின்ற போதிலும் ஏற்கனவே இதனை சிறிலங்கா அரசாங்கம் மறுத்துள்ளது. சிறிலங்கா அரசாங்கம் இக்கோரிக்கை அடங்கிய பேரவையின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட போதிலும் இதனை இன்னமும் நடைமுறைப்படுத்தவில்லை.

‘கலப்பு நீதிப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்பது மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் உட்சேர்க்கப்பட்ட போது சிறிலங்காவின் நீதிச் சேவை மீது அனைத்துலக சமூகம் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறிலங்கா அரசாங்கமானது நாட்டின் நீதிச்சேவையை சுயாதீனமானதாக ஆக்கியுள்ளது. ஆகவே கலப்பு நீதிமன்றம் என்கின்ற கோரிக்கை தற்போது தேவையற்றதாகும்’ என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ranil-maithriகலப்பு நீதிமன்றம் ஒன்றை உருவாக்குவதற்கான சட்ட சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்கு சிறிலங்கா நாடாளுமன்றின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு கிடைக்க வேண்டும். அத்துடன் அரசியல் சாத்தியமற்ற, கருத்து வாக்கெடுப்பு ஒன்றும் நடத்தப்பட வேண்டும். நீண்ட காலமாக சிறிலங்காவின் நாடாளுமன்றம் பெரும்பான்மை சிங்களவர்களையே கொண்டுள்ளது. ஆகவே இந்த விடயத்தில் சிங்களவர்களின் ஆதரவைப் பெறமுடியாது. அத்துடன் சிங்கள இனத்தைச் சேர்ந்த இராணுவத்தினர் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தண்டனை பெறுவதில் தாமும் பங்கு வகிப்பதை சிங்கள மக்கள் விரும்பமாட்டார்கள்.

நாட்டில் சட்ட ஆட்சியை ஏற்படுத்துவேன் மற்றும் தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பணிகளை முன்னெடுப்பேன் என வாக்குறுதி வழங்கியே மைத்திரிபால சிறிசேன நாட்டின் அதிபராகினார். இவருக்கு சிறிலங்காவின் பிரதான இரு அரசியற் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி போன்றவற்றின் ஆதரவுகள் மட்டுமல்லாது நாட்டின் சிறுபான்மையினரின் ஆதரவும் கிடைக்கப்பெற்றன.

ஆனால் சிறிசேன அதிபராகி இரண்டு ஆண்டுகள் கடந்த போதிலும், நாட்டை பிளவுபடுத்தும் ஆபத்தைக் கொண்ட இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் இவர் தோல்வியுற்றுள்ளார். இவர் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை முடிவுக்குக் கொண்டு வருவதில் தீவிரமாகச் செயற்படுவாராயின் தமிழர் பகுதிகளில் நிலவும் இராணுவ ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வருவதுடன், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கையையும் முன்னெடுத்திருப்பார்.

ஆனால் இதற்குப் பதிலாக 30/1 தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட கலப்பு நீதிப்பொறிமுறை உருவாக்குதல் மற்றும் ஏனைய பரிந்துரைகளை சிறிசேன நிறைவேற்றத் தவறியுள்ளார். சிறிலங்கா இராணுவத்தினர் மீது பாரபட்சமற்ற சுயாதீன விசாரணையை முன்னெடுப்பதற்கு சிறிசேன ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்.

ஐ.நா பாதுகாப்புச் சபையின் ஊடாக சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும்.

சிறிசேன மற்றும் விக்கிரமசிங்க ஆகியோரின் தேசிய ஒற்றுமை அரசாங்கத்தின் ஆட்சி நடைபெறும் காலப்பகுதியில் கூட, வடக்கு,கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்தும் இராணுவக் கண்காணிப்புக்கள் இடம்பெறுகின்றன. மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் அரசியல் சூழல் மாறிவிடுமோ என்கின்ற அச்சத்தில் வாழ்கின்றனர். அரசியல் கைதிகள் இன்னமும் சிறைகளில் வாடுகின்றனர். சிறைகளிலிருந்து விடுவிக்கப்படுவோர் புனர்வாழ்வு நடவடிக்கைகளின் போது சிறிலங்கா இராணுவத்தின் சித்திரவதைகளுக்கு ஆளாகுகின்றனர். காணாமற் போனோருக்கான அலுவலகமானது எவ்வித செயற்பாடுமின்றிக் காணப்படுகிறது. காணாமற் போனவர்கள் இறந்துவிட்டதாக பிரதமர் விக்கிரமசிங்க பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு படையினரே போர்க் குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் என்பதற்கான ஆதரங்கள் உள்ளதாக தென் ஆபிரிக்காவிலுள்ள மனித உரிமைகள் நிறுவகம் மற்றும் அனைத்துலக உண்மை மற்றும் நீதித்திட்டத்தின் நிறைவேற்று இயக்குனர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். போர் இடம்பெற்ற வலயங்களில் வாழும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் இராணுவ அடக்குமுறை மற்றும் கண்காணிப்பு, தலையீடு போன்ற பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் வாழ்வதாகவும் ஜஸ்மின் சூக்கா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதேவேளையில், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மீண்டும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான நகர்வுகளை முன்னெடுத்து வருகிறார். இவருக்கு பௌத்த மதகுருமார் மற்றும் ஒரு பகுதி சிங்கள மக்கள் தமது ஆதரவுகளை வழங்குகின்றனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 50 வரையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆதரவுகளை மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கியுள்ளனர்.

சிறிசேன தனது நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தாமதம் காண்பிக்கின்றார். அத்துடன் பிரதமர் விக்கிரமசிங்க, அதிபர் போன்று ஒரே கொள்கையைக் கொண்டிராதவராகக் காணப்படுகிறார். அதிபர் முறைமையை ஒழிப்பது தொடர்பாக வழங்கப்பட்ட வாக்குறுதி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. 2015 தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட பெரும்பாலான வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. அரசியல் யாப்பை மீள எழுதுவதற்கான முயற்சியிலும் தடை ஏற்பட்டுள்ளது.

ராஜபக்சவை ஆட்சியிலிருந்து துரத்துவதில் பங்களிப்பைச் செய்த தமிழ் மக்கள் சிறிலங்கா அரசாங்கமானது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை அரசாங்கம் நிறைவேற்றமையால் அதன் மீதான தமது நம்பிக்கையை இழந்து வருகின்றனர். அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், கிட்டிய எதிர்காலத்தில் ராஜபக்ச ஆட்சி உருவாவதை எவரும் எதிர்பார்க்க முடியும்.

ஆங்கிலத்தில்  – Sam Rajappa | New Delhi
வழிமூலம்       – The statesman
மொழியாக்கம் – நித்தியபாரதி