கிளிநொச்சியில்காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்தில் தாயார் ஒருவர் மயங்கி வீழ்ந்த நிலையில்….(காணொளி)

265 0

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தாயார் ஒருவர்  மயங்கி வீழ்ந்த நிலையில், கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கடந்த மாதம் 20ஆம் திகதி காலை முதல், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 30ஆவது நாளாக தீர்வின்றி தொடர்கின்றது.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தாயொருவர் மயக்கமடைந்து வீழ்ந்தமையால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.

தொடர்ந்து வடமாகாண நோயாளர் காவுவண்டி நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டதனை அடுத்து சில நிமிடங்களில் கிளிநொச்சி பொதுவைத்தியசாலை நோயாளர் காவுவண்டி மூலம் குறித்த தாயார் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
குறித்த தாயார் காணாமல் ஆக்கப்பட்ட தனது பிள்ளையின் நினைவுகள் வரும்போதெல்லாம் இவ்வாறு மயக்கமடைவார் என்பதுடன் இதற்காக பிரத்தியேக வைத்தியர் மூலம் சிகிச்சை பெற்றுவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.