போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இரசாயனப் பாதிப்பு குறித்த ஆய்வுக்கட்டுரைக்கு அமெரிக்காவில் விருது! ஈழத்தமிழச்சி இலக்கியா சாதனை!

255 0

இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இரசாயணரீதியாக என்னென்ன தாக்கங்கள் இருக்கும், என்னென்ன இரசாயனப் பொருட்கள் இருக்கும் என மற்றைய போர் நடந்த நாடுகள் தொடர்பாக ஆய்வு செய்ததுடன் அந்த இரசாயணப் பொருட்களை செயற்கையாகவும் இயற்கையாகவும் எப்படி அழிக்கலாம் என்ற தீர்வையும் முன் வைத்து ஈழத்தமிழச்சி இலக்கியா தயாரித்த ஆய்வுக்கட்டுரை சிறந்த ஆய்வுக்கட்டுரையாக அமெரிக்க நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழீழம் வல்வெட்டித்துறை இலக்கணாவத்தையைச் சேர்ந்த செல்வி இலக்கியா-சிதம்பரநாதன் அவர்களே இச்சாதனையைப் படைத்துள்ளார். ஆரம்பக் கல்வி முதல் க.பொ.த. உயர்தரம் வரை உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் கல்விகற்றிருந்த இலக்கியா வங்களாதேசத்தில் BSC பட்டப்படிப்பையும், ஹொலண்டில் Environmental Technology இல் Msc உயர் பட்டப்படிப்பையும் மேற்கொண்டுள்ளார்.

க.பொ.த. சாதரண தரப்பரீட்சையில் 10A பெறுபேற்றினை பெற்று தனது திறமையை நிரூபித்த இலக்கியாவிற்கு க.பொ.த.உயர்தரப்பரீட்சை சோதனையாக அமைந்திருந்தது. பரீட்சை நேரத்தில் அவரின் தாயாரின் உயிரிழப்பானது அவரை பாதித்திருந்தது. இந்த சோதனைகளைக் கடந்துதான் சர்வதேச விருதை வென்று இலக்கியா இச்சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

அமெரிக்காவை தளமாக கொண்டியங்கும் The Sustainability Research Network நிறுவனமே இவ்விருதினை வழங்கியுள்ளது. குறித்த நிறுவனத்தினால் சர்வதேச மட்டத்தில் பெறப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளில் 12 ஆய்வுக் கட்டுரைகள் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகியிருந்தது. அந்த 12 கட்டுரைகளில் ஒன்றாகத் தேர்வாகியிருந்த நிலையில், ‘நிலையான திரட்டுக்கள் தொகுதி 12’ இன் வெற்றியாளாராக செல்வி இலக்கியா சிதம்பரநாதன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

(Implementing Bioremediation Technologies to Degrade Chemical Warfare Agents and Explosives from War Affected Regions in Sri Lanka) இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இரசாயணரீதியாக என்னென்ன தாக்கங்கள் இருக்கும், என்னென்ன இரசாயனப் பொருட்கள் இருக்கும் என மற்றைய போர் நடந்த நாடுகள் தொடர்பாக ஆய்வு செய்ததுடன் அந்த இரசாயணப் பொருட்களை செயற்கையாகவும் இயற்கையாகவும் எப்படி அழிக்கலாம் என்ற தீர்வையும் முன் வைத்திருந்த ஆய்வுக்கட்டுரைக்கே சர்வதேச அளவில் பிரபலமான இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, டென்மார்க் நாட்டில் சமர்பித்து அங்கிருந்து தேர்வாகியே அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டு இந்த விருது கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவுஸ்திரெலியாவில் சமர்ப்பிக்க அழைக்கப்பட்டுள்ளார்.

இந்த போட்டியில் சர்வதேச அளவில் அதியுயர் திறமையுடைய பலர் பங்கேற்று தமது ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்திருந்த நிலையில் ஈழத் தமிழச்சியான செல்வி இலக்கியா-சிதம்பரநாதன் அவர்கள் வெற்றியாளராக தேர்வாகியுள்ளமை மிகப்பெரும் கௌரவமாகும். இது அவரது கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாகும்.

பிராந்திய உலக வல்லாதிக்க நலன்களுக்குள் அழித்தொழிக்கப்பட்ட எமது தேசத்தில் உரிமைகளுக்காய் நாளொருமேனியும் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் நாடற்றவர்களாக உலகெங்கும் வாழ்ந்துவரும் எம்மவர்கள் தமது திறன்களினூடே சாதனை படைத்து தம்சார்ந்த தமிழீழ தேசத்திற்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்த்துவருகிறார்கள்.

அந்தவகையில் சர்வதேச விருதை வென்று சாதனை படைத்திருக்கும் செல்வி இலக்கியா-சிதம்பரநாதன் அவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அவரது திறன்வழியேயான தொடர் பயணத்தில் மென்மேலும் வெற்றிகளைப் பெறுவதற்கும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

‘எமது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு புதிய இளம் பரம்பரை தோற்றங்கொள்ள வேண்டும். ஆற்றல் மிகுந்தவர்களாக, அறிவுஜீவிகளாக, தேசப்பற்றாளர்களாக, போர்க்கலையில் வல்லுனர்களாக, நேர்மையும்-கண்ணியமும் மிக்கவர்களாக, ஒரு புதிய-புரட்சிகரமான பரம்பரை தோன்ற வேண்டும்; இந்தப் பரம்பரையே எமது தேசத்தின் நிர்மாணிகளாக, நிர்வாகிகளாக, ஆட்சியாளர்களாக உருப்பெற வேண்டும்!’ – தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

இரா.மயூதரன்.
(20/03/2017)