கூட்டாளி (ஒரு நோக்கு)

297 0

ஒருகாலத்தை பதிவுசெய்வதே கலைப்படைப்பு. நவயுக உலகில் மக்களிடையே கருத்தைக் காவிச்செல்வதிலும் கருத்தூட்டலைச் செய்வதிலும் பெரும் பங்குவகிப்பது திரைப்படமாகும். காட்சிகள் வழியாகக் கண்வழிபாய்ந்து ஒரு பார்வையாளனை அதனோடு இணைந்து பயணிக்கவைத்துப் பெரும் தாக்கத்தை விளைவிக்கும ஒருதலைசிறந்த ஊடகமாகத் திரைப்படம் விளங்குகின்றது.

எம்மவர் தயாரிப்பாக வெளிவந்து தற்போதும் ஐரோப்பியத் திரையரங்குகளில் திரையிடப்பட்டுவரும் கூட்டாளி திரைப்படம் குறித்துத் தொட்டுச் செல்வதே இந்தப்பார்வையின் நோக்கு.

உலகத்தமிழினம் ஏக்கத்தோடும் பெருமூச்சோடும் காத்திருக்கும் தமிழீழவிடியல் அதனது இற்றைய களம் எனப்பேச முற்படுகிறது கூட்டாளி. மறைந்த தாயகப்பாடகர் சாந்தனது பாடலோடு தொடங்கும் கதையில் தமிழீழ விடுதலையை ஐநா அங்கீகரித்து அறிவித்ததாகவும், அதனை மக்கள் கொண்டாடுவதும், தமிழீழ விடுதலைக்காய் தம்மை அர்பணித்த மாவீரர்களை மக்கள் வணக்குவதும் தமிழர்கலைகளான காவடி கரகம் கும்மி என ஆடுவதும் அதற்குள் வெள்ளையர்களும் இணைந்ததுள்ளமை தமிழீழநடைமுறை அரசால் ஏற்படுத்தப்பட்ட அத்தனை கட்டுமானங்களும் மீளவும் நடைமுறைக்குவருவது படைகளின் வெளியேற்றத்தை இறுதியாகப் புறப்படும் சிங்களப்படையணி சுட்டுவது.
பயணப்பாதையில் படையினருக்கு இளையோருக்கும் ஏற்படும் முறுகல் எனக்காட்சி தொடர்ந்து விரிகிறது. இந்தவிரிப்பினூடே கதவுதட்டும் ஓசையில் திடுக்குற்று ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழும் திலீபன் ஒரு அற்புதமான கனவைக் கலைத்தவிட்டதாகத் தன்நண்பனைக் கடிந்துகொள்கிறான். அதேவேளை சிங்களப் படைகளின் அணியொன்று அந்தக் குடிலை இலக்குவைத்து வரச் சத்தமின்றிக், குரல்கொடுத்த நண்பன் அருகேயிருக்கும் காட்டினுள் மறைய இதையறியாது, சிங்களப்படைகள் கதைவைத்தட்ட தனது நண்பனே தட்டுவதாக எண்ணி தான் கண்ட கனவை விபரித்தவாறு கதைவைத் திறக்கப் படைகள் நிற்கிறது. படையினனனைத் தாக்கிவிட்டுத் தப்பியோடும் திலீபன் தாக்குதல் தப்பித்தலென்ற போராட்டத்தினூடே பிடிபட்டு விசாரிக்கப்படுகிறார்.

அங்கு காரசாரமான உரையாடல்கள். முடிவில் கைப்பற்றப்பட்டவரிடமிருந்து எதையுமே அறிய முடியாத நிலையில் திலீபன் சுட்டுக்கொல்லப்படுகிறார். அதை அவரது கூட்டாளி மறைவில் நின்று அவதானிப்பதாக நகர்கிறது.
இரண்டகரொளிப்பு. தனது கூட்டாளியை அழித்த அணியைப்பழிதீர்த்தல். அனைத்துலகையோ அரசியல்வாதிகளையோ நம்பியிருந்த பயனில்லை என்பதையும் பதிவுசெய்தவாறு நகரும் கதையில் ஒரு காதலும் இழையோடுகிறது. காதலுக்குக் காணிக்கையாத் தேசவிடுதலை கேட்கப்படுகிறது. காதலென்ற உணர்விருந்தாலும் விடுதலையே முதன்மையெனக் கூறும் காதலி. தனது காதலனின் கூட்டாளியான திலீபன் எங்கே என்ற வினா எழும்பும் போதே அவர்வருவார் என்று கூறியபொய்யை உடைத்து உண்மையைக் கூற அவள் இப்போதே நாம் அவரைப்பார்போம் எனக் கேட்க அவர்களது அணியின் உந்துருளிகள் புறப்படுகின்றன. அவர்களைப் பின்தொடர்ந்து பல உந்துருளிகள் பின்தொடர்கின்றன. நிறைவடைகிறது. தமிழீழம் இனியும் சாத்தியமா என்று வினவுவோருக்கான பதிலையும் பதிவுசெய்துள்ளது.

சொல்லியங்களில் சில சொற்பிரயோகங்கள் தவிர்கப்பட்டிருக்கப்படவேண்டும். காட்சிகள் களச்சூழலோடு பொருந்துமா என்பது குறித்த ஆய்வும் தேவை. காதற்காட்சிகளில் சற்று இடைவெளியை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
அனைத்தையும் கடந்து தமிழீழ விடுதலையை முன்னோக்கிய நகர்திய தளகர்த்தரது காட்சிகள் பல விடயங்களை நினைவூட்டி உயிரூட்டுகிறது. தமிழீழத் தமிழர்களது திரைப்படத்துறை முயற்சி வளர்தெடுக்கப்படவேண்டிய ஒன்றாகும். பெரும்பொருட்செலவில் தயாராகும் எம்மவர் திரைப்படங்களுக்குத் தமிழகத் திரைபடங்களுக்கு எல்லா வேலைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டுச் செல்லும் சுவைஞர் வட்டமானது அவ்வளவு முதன்மை இடம் கொடுப்பதில்லை என்பது பெரும் குறையே. எமது செடிகளுக்கு நாமே நீரூற்ற வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றோம். எம்மை நாமே ஏற்காதபோது யாரிடம் கொண்டு போவது என்ற வினா எம்மைத் தொடர்கிறது.

மா.பாஸ்கரன்
லண்டவ்
யேர்மனி