தமிழ்த்தேசியத்தினை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளிற்கு துணை போகவேண்டாம் என அன்பாகக் கேட்டுக்கொள்கின்றோம்.

489 0

நான் கலை, இலக்கியங்களை மதிப்பவன். கலை, இலக்கியப் படைப்பாளிகளை கௌரவிப்பவன்.
கலை கலைக்காக அல்லாமல் மக்களுக்காகவே படைக்கப்படவேண்டும் என்ற கருத்தைக் கொண்டவன்.
-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்கள்.

எமது அன்பிற்கும், பெரு மதிப்பிற்குமுரிய சுவிஸ் வாழ் தமிழீழ தேசபக்த பெருமக்களுக்கு!

மானிடத்தின் விடுதலைக்காக மாபெரும் தியாகங்கள் புரிந்த வரலாற்றுப் பெருமையுடன் அநீதிகளையும், அடக்குமுறையையும் எதிர்த்து நீதிக்கும், சுதந்திரத்திற்குமாகப் போராடிய மானமாவீரர்களை நெஞ்சிலிருத்தி தங்கள் அனைவருக்கும் புரட்சிகரமான வணக்கத்தினை முதலில் தெரிவித்துக்கொள்கின்றோம்.

எமது வீர விடுதலை வரலாற்றின் ஒரு முக்கிய திருப்புமுனையில் நின்றவாறு எமது உரிமைகளிற்காக தொடர்ந்து போராடி வரும் நாம் எமது தேசிய அடையாளத்திற்கு அடித்தளமான மொழி, கலை, கலாச்சார விழுமியங்களை அழியவிடாது பாதுகாக்கும் உன்னத செயற்பாடுகளையும்; முன்னெடுக்க வேண்டியுள்ளது.

வரலாற்று ரீதியாக தமிழினத்திற்கே உரித்தான தமிழ்மொழி, தமிழ்க்கலைகள் என்பன எமது இனத்தின் வாழ்விற்கும், வளத்திற்கும் ஆதாரமானவை. தமிழர் உரிமைப்போராட்ட வரலாற்றில் தமிழ்க்கலைகளின் பங்களிப்பு அளப்பரியது. எமது சுதந்திரப் போராட்டத்தின் தேவையினை, உணர்வினை, வலியினை எமது மக்களிற்கு களத்திலும், புலத்திலும் தமிழ்க்கலைகள் வெளிக்கொணர்ந்தன.
அதன் அடிப்படையில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களின் பிள்ளைகள் ஊடாக எமது இனத்தின் அடையாளத்தினை பாதுகாக்கும் நோக்கில் தமிழ்மொழி, தமிழ்க்கலைகளிற்காக கல்வி நிறுவனங்களை நாம் ஆரம்பித்ததோடு தேர்வுகள், போட்டிகளை நடாத்தி மாணவர்களை ஊக்கப்படுத்தி வளர்ப்பதற்காக பொது அமைப்புகள் பல எம்மால் உருவாக்கப்பட்டன. அவ்வாறான நிலையில் அமைப்பின் தேவைகளிற்காக எம்மால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களுள் ஒன்றே தமிழர்; நலன்புரிச்சங்கம் சொலத்தூண் ஆகும்.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் (உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு) 1992ம் ஆண்டு கல்வி, கலை, அரசியல் தேவைகளுக்காக ஆரம்பித்து வைக்கப்பட்டு, 1997ம் ஆண்டில் சொலத்தூண் மாநிலத்தில் கிறங்கன் துர்க்கையம்மன் கோவில் உருவாக்கத்திற்காக முதல் யாப்பினை உருவாக்கிய தமிழர் நலன்புரிச்சங்கம் சொலத்தூண் தனது செயற்பாட்டின் ஒரு இலக்காக கடந்த பல வருடங்களாக சுவிஸ் நாட்டில் கலை ஆற்றலை வளர்க்கும் நோக்கில் மாணவர்களிற்காக 1998ல் இருந்து நாட்டியமயில் போட்டியினையும் தொடர்ச்சியாக 2004ல் இருந்து இசைக்குயில் போட்டியினையும் ஆரம்பித்து அம் மாணவர்களின் தமிழ்க்கலை வளர்ச்சிக்கு பெரும் சேவையினை வழங்கி வந்தமை தாங்கள் அறிந்ததே.

2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் நடைபெற்ற இசைக்குயில் 2010 நிகழ்வின் போது இந் நிறுவனத்தின் அடையாளத்திலிருந்து தமிழர்களின் தாயகவரைபு அடையாளமான தமிழீழத்தையும், நாட்டியமயில் 2011 நிகழ்வின் போது தாயக எழுச்சிப் பாடல்களிற்கான நெருப்பின் சலங்கை என்ற பரதநாட்டியப் போட்டி நிகழ்வையும் நீக்கிய போதும் எமது கலை மாணவர்களின் வளர்ச்சி கருதி நாம் மௌனம் காத்தோம். இருந்த போதும் 2015ம் ஆண்டு ஆரம்ப காலப்பகுதியிலிருந்து இந்நிறுவனத்தின் உள்ளக நிர்வாக முரண்பாடுகள் காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளால் இரு தரப்பினரும் அமைப்பிடம் பல முறைப்பாடுகளையும், குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தனர்.
இவற்றை நிர்வாகரீதியாக சரிசெய்யும் நோக்கில் புரிந்துணர்வுடன் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக, நாம் பல முயற்சிகளை நேரடிச் சந்திப்புக்களினூடாக இருதரப்பிற்கும் விட்டுக்கொடுப்புகளுடன் முன்னெடுத்தோம். இருந்தும் தமிழர் நலன்புரிச்சங்க நிர்வாகச் செயற்பாடுகளில் இருந்தவர்களில் மூவர் தமக்கு சாதகமான முடிவினை பெற்றுக்கொள்வதற்காக எமக்குள் தீர்க்கப்படவேண்டிய உள்ளக முரண்பாட்டினை கலை ஆசிரியர்களிடம் எடுத்துச் சென்றனர்.

தமிழ்க்கலை ஆசிரியர்களின் பல ஒன்றுகூடல்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள், எடுக்கப்பட்ட முடிவுகள், எவற்றையும் கவனத்திற் கொள்ளாமல் தன்னிச்சையாக நிர்வாகக் கட்டமைப்புக்களை உருவாக்கிச் செயற்பட்டதோடு, எந்த இணக்கப்பாட்டிற்கும் முன்வர விரும்பாத இம் மூவரும் தமிழர் நலன்புரிச்சங்கம் சொலத்தூண் நிறுவனத்தினை கையகப்படுத்தும் நோக்கில் ஏனைய நிர்வாக உறுப்பினர்கள், நலன்புரிச்சங்கச் செயற்பாட்டாளர்கள், சொலத்தூண் வாழ் மக்கள், சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு என்பனவற்றிற்கு தெரியப்படுத்தாமல் தன்னிச்சையாக மூவரையும் கொண்ட நிர்வாகத்தினை 21.09.2015 அன்று சட்டரீதியாக பதிவு செய்துள்ளார்கள்.

இதன் தொடர்ச்சியாக தமிழ்த்தேசியத்தினை பலவீனப்படுத்தும் நோக்கிலும், தமிழ்க்கலை ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே குழப்பத்தினையும், பிரிவினையையும் ஏற்படுத்தும் செயற்பாடுகளிலும் இவர்கள் செயற்பட்டுக் கொண்டிருப்பதை நன்கறிந்தும், தேசிய உணர்வோடு உருவாக்கப்பட்ட நிறுவனத்தின் செயற்பாட்டில் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படக்கூடாது என்பதற்காக பொதுநோக்கின் அடிப்படையில் இணக்கப்பாட்டினை ஏற்படுத்தும் முயற்சிகளை நாம் தொடர்ச்சியாக முன்னெடுத்தோம்.

நடைபெற்று முடிந்த இசைக்குயில் 2016 போட்டியின்போது கூட ஆத்திரமூட்டக்கூடிய பல செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுத்தபோதும் இசைக்குயில் நிகழ்வில் எவ்வித தளர்வுகளும் ஏற்படக்கூடாது என்பதற்காக பல விட்டுக்கொடுப்புக்களையும் நாம் வழங்கி இருந்தோம். சமாதானத்தையும், சமாதான வழி தீர்வு காணவேண்டும் என்பதனையும் நாம் எச்சந்தர்ப்பத்திலும் வலியுறுத்தத் தவறவில்லை.
தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகள் கட்டமைப்பினரும் இம்மூவரின் வேண்டு கோளுக்கிணங்க நல்லெண்ண அடிப்படையில் சமாதான முயற்சிகளை பலதடவைகள் முன்னெடுத்த போதிலும், போராளிகள் கட்டமைப்பினரால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள், அமைப்பினால் உருவாக்கப்பட்டதற்குரிய ஆதாரங்கள் என்பனவற்றை முன்வைத்தபோது அதனை உள்வாங்க மறுத்த இம் மூவரும் சமாதான முயற்சிகளில் இருந்து தன்னிச்சையாக வெளியேறினார்கள்.

இறுதியாக கடந்த 03.11.2016 அன்று சொலத்தூண் மாநில சமாதான நீதவான் ஊடாகவும், அதற்குப் பின்னர் சுவிசின் நடன ஆசிரியர்கள், 23.02.2017 இல் கலை ஆசிரியர்கள் ஊடாகவும் எடுக்கப்பட்ட நல்லெண்ண முயற்சிகளும் பயனளிக்கவில்லை.
அத்துடன் தேசியத்தை விலை பேசுவதுடன், விடுதலை அமைப்பையும் அதற்காக இன்றுவரை உழைப்பவர்களையும் வசைபாடி, நிறுவனத்தினை கையகப்படுத்தும் சுயநலச் செயற்பாடுகளையே தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றார்கள். இதற்கு சுவிசில் உள்ள நடன ஆசிரியர்கள் சிலரும், கடந்த காலங்களில் அமைப்பினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்டவர்கள், முள்ளிவாய்க்கால் பேரவலத்தோடு விலகி தாமாகவே ஒதுங்கிச் சென்ற சில முன்னாள் நிர்வாகப் பொறுப்பாளர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பெரும் துரோகத்தினைச் செய்து தற்போது அரசாங்கத்துடன் கூட்டிணைந்து நிற்கும் புலனாய்வு முகவருடன் நேரடித் தொடர்பில் சுவிஸ் முகவராக இருந்து நயவஞ்சக வேலைகளை செய்து வரும் முன்னாள் ஊடகச் செயற்பாட்டாளர் ஆகியோர் துணை நிற்பதுடன், சிறிலங்காப் பேரினவாதச் சக்திகளின் சிந்தனைகளிற்கு செயல்வடிவம் கொடுப்பவர்களாகச் செயற்படுவதோடு, தமிழீழ விடுதலைப்புலிகளால் கட்டியமைக்கப்பட்ட உப அமைப்புக்கள், நிறுவனங்களின் நிர்வாகச் செயற்பாடுகளை சிதைப்பதற்கு துணைபோவதன் ஊடாக தமிழினத்திற்கும், விடுதலைக்கும், தலைமைக்கும், மாவீரர்களுக்கும், அநீதி இழைப்பவர்களாகவும் செயற்பட்டு வருகின்றார்கள்.

பல தியாகங்களாலும், அர்ப்பணிப்புக்களாலும் கட்டியெழுப்பப்பட்ட விடுதலை அமைப்பு உறுதியோடு போராடிய தலைமை, தளபதிகள், போராளிகள், தேசிய செயற்பாட்டாளர்கள், கலை ஆசிரியர்கள், மற்றும் மூத்த கலை மாணவிகள் எனப் பாகுபாடு இல்லாமல் அவர்கள் மீது ஒழுக்கக்கேடான முறையில் அவதூறுகளையும், பொய்களையும் கட்டவிழ்த்து முகநூல்கள், முகவரி குறிப்பிடப்படாத அநாமதேய கடிதங்கள், தொலைபேசிகள் ஊடாகவும் மேற்கொள்ளப்படும் கீழ்த்தரமான நடவடிக்கைகள் என்பன சிறிலங்கா பேரினவாதத்தின் தேவையை நிறைவு செய்வதற்கு இம்மூவரினது செயற்பாடுகளுடன் அவர்களுக்கு துணைநிற்கும் அனைவரையுமே சாரும் என்பதுடன் இச் செயற்பாடுகளை நாம் வன்மையாகவும் கண்டிக்கின்றோம்.

முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை வெளியிட்டு, பல தடவைகள் கையொப்பமிட்டு அமைப்பிற்குத் தந்த உறுதிமொழிகளையும், முடிவுகளையும் தங்களுடைய தேவைகளிற்காக மாற்றிவரும் நடன ஆசிரியர்கள் சிலர் கலைகள், இனத்தின் அடையாளம் என்பதனை விளங்கிக்கொள்ளாமல் கலைகளில் அரசியல் இருக்கக்கூடாது என்ற தவறான கருத்துக்களையும் காணொளிகள் ஊடாக வெளியிட்டுள்ளார்கள்.
எம்மால் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள், வணக்க நிகழ்வு மேடைகள், எழுச்சி நிகழ்வு மேடைகள் என பல தேசிய மேடைகளைப் பயன்படுத்தி தங்களை அடையாளப்படுத்தியதோடு தங்களிற்கென தனியான இடத்தினை சுவிசிலும், ஐரோப்பாவிலும் பெற்றிருக்கும் இவ் நடன ஆசிரியர்கள் தாயக விடுதலைக்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களினதும், மக்களினதும் தியாகத்தால் கட்டமைக்கப்பட்ட தமிழ்த்தேசிய அரசியலின் ஊடாக தங்களிற்கான இருப்பிடத்தினை தக்கவைத்துக் கொண்டவர்கள் என்பதனை மறந்து கருத்துக்களை வெளியிடுகின்றார்கள்.

தேசிய உணர்வோடு வாழ்ந்துவரும் பெற்றோர்களிற்கும், மாணவர்களிற்கும் தவறான கருத்துக்களை வழங்கி அவர்கள் மீது அழுத்தங்களினைச் செலுத்தி வளர்ந்து வரும் இளம் தலைமுறையினரை தங்களுடைய தனிப்பட்ட தேவைகளிற்காக தவறான வழிக்கு திசைதிருப்ப எத்தனிக்கின்றார்கள். நீதியான முறையில் நடுநிலையாக இருந்து பிரச்சனையை தீர்த்துவைக்கும் நேர்மையும், கொள்கைப்பற்றும் இவர்களிடம் இருந்ததில்லை.
இரு நிகழ்வு அல்லாத உகந்ததான ஒரு நல்லெண்ண சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் என்ற எமது யோசனைகளை ஆசிரியர்களின் வீடுகளிற்கு நேரடியாகச் சென்று, வரப்போகும் சூழலை முன்பே தெரிவித்ததுடன், சுமூகமான நிலைமை ஏற்படும் வரை பெற்றோர், ஆசிரியர் இணைந்தவகையில் பொது அமைப்பினூடாக நிர்வாகக் கட்டமைப்பினை உருவாக்கி நடைபெறவுள்ள நாட்டியமயில் நிகழ்வினை நடாத்துமாறு கேட்டிருந்த போதிலும் ஆக்கபூர்வமான முயற்சிகள் எதனையும் இவ் நடன ஆசிரியர்கள் எடுக்கவில்லை.

இருந்தும் இவ்வருடம் தமிழர் நலன்புரிச்சங்கம் சொலத்தூண் என்னும் பெயரில் நடாத்தப்படவுள்ள நாட்டியமயில் நிகழ்வில் கலந்துகொள்ளாத தங்களின் மாணவர்கள் இனிவரும் காலங்களில் நாட்டியமயில் நிகழ்வில் பங்குபற்ற முடியாது என்று அச்சுறுத்தப்படுவதுடன், சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மீதும் உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை வெளியிட்டும் பெற்றோர்களையும், மாணவர்களையும் தம்வசம் இழுத்து வைத்திருக்க முயற்சிக்கும் ஆசிரியர்களின் பொறுப்பற்ற செயலிற்கு இச்சந்தர்ப்பத்தில் நாம் எமது வன்மையான கண்டனத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மீது அழுத்தம் செலுத்தும் உத்திகளை நடன ஆசிரியர்கள் பாவிப்பதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இந்நிலையில் எமது சட்டவாளரின் பரிந்துரைக்கு அமைவாகவும், எமது மக்கள், போராளிகள், அனைத்துப் பொறுப்பாளர்களின் கருத்துக்களிற்கு அமைவாகவும் இப்பிரச்சனையை நீதிமன்றத்தினூடாக தொடர்ச்சியாக அணுகுவதற்கான முடிவிற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.அமைப்பால் ஆரம்பிக்கப்பட்ட தமிழர் நலன்புரிச்சங்கம் சொலத்தூண் நிறுவனத்தினைத் தனி நபர்கள் கையகப்படுத்தியிருப்பது தொடர்பாகவும், நிறுவனச் செயற்பாடுகளில் நடைபெற்ற நிதிமோசடிகள் தொடர்பாகவும் சட்ட ரீதியாக அணுகுவதற்காக இரண்டு வழக்குகள் நீதிமன்றத்தினூடாக மூவர் மீதும் தொடரப்பட்டுள்ளன என்பதனை தங்கள் அனைவருக்கும் இத் தருணத்தில் அறியத்தருகின்றோம்.
தமிழ்த்தேசியத்தினை பலவீனப்படுத்தும் இம்மூவரினாலும் நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ள நாட்டியமயில் நிகழ்விற்கு ஆதரவு தெரிவித்து நிற்கும் நடன ஆசிரியர்கள் இனியாவது உண்மை நிலையை உணர்ந்து இந்நிகழ்விற்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில் இருந்து விலகிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதுடன் ஏனைய கலை ஆசிரியர்கள், ஆர்வலர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கலைஞர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், வர்த்தகப் பெருமக்கள், இன உணர்வாளர்கள் எவரையும் துணை நிற்கவேண்டாம் எனவும் அன்பாகக் கேட்டுக்கொள்கின்றோம்.

அத்துடன் தமிழர் நலன்புரிச்சங்கம் சொலத்தூண் நிறுவனத்தில் இடம்பெற்ற உள்ளக முரண்பாடுகள் மோசடிகள், அதற்காக மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வுச் செயற்பாடுகள் ஒன்றுகூடல் அறிக்கைகள், நடன ஆசிரியர்களினால் கையொப்பமிட்டு தரப்பட்ட உறுதிமொழிக் கடிதங்கள் என்பன தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தங்கள் பார்வைக்கு சமர்ப்பிப்பதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்பதனையும் தங்கள் அனைவரிற்கும் தயவுடன் அறியத்தருகின்றோம்.

அதேநேரத்தில் தமிழர் நலன்புரிச்சங்கம் சொலத்தூண் என்ற பெயரில் இம்மூவரினாலும் நடாத்தப்படவுள்ள நாட்டியமயில் 2017 நிகழ்விற்கும் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதோடு இதுவரை காலங்களிலும் நிகழ்வின் போது அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வந்த அனைத்து பின்தள செயற்பாடுகளிலும் எங்கள் பங்களிப்பு இருக்கமாட்டாது என்பதனையும் அனைவருக்கும் மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.

தமிழர் நலன்புரிச்சங்கம் சொலத்தூண் என்னும் நிறுவனம் வழக்கில் உள்ளதாலும், தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலைக்கு அமைவாகவும் நாட்டியமயில், இசைக்குயில் போட்டிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்காக சுவிஸ் தமிழர் நலன்புரிச்சங்கம் என்னும் புதிய நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதனை அறியத்தருவதுடன் இந்நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற தங்கள் கருத்துக்கள், ஆலோசனைகளுடன் தேசியத்திற்கான தார்மீக ஆதரவையும் வேண்டி நிற்கின்றோம்.

2017ம் ஆண்டுக்கான சுவிஸ் மாணவர்கள் இடையேயான நாட்டியமயில், ஐரோப்பிய ரீதியில் நடைபெறவுள்ள நெருப்பின் சலங்கை தாயகப் பாடல்களிற்கான பரதநாட்டிய நடனப்போட்டி நிகழ்வு என்பன திட்டமிட்டபடி 15, 16, 17.04.2017 ஆகிய திகதிகளில் பேர்ண் மாநிலத்தில் சுவிஸ் தமிழர் நலன்புரிச்சங்கமும், அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினாலும் இணைந்து நடாத்தப்படவுள்ளது என்பதனை அன்புடன் அறியத்தருகின்றோம்.
நாம் ஒன்றிணைந்த சக்தியாக எமக்கு முன்னால் எழக்கூடிய எல்லாத் தடைகளையும் உடைத்தெறிந்து நேர்மையான வழியில் எமது செயற்பாடுகளை முன்னெடுப்போம். இந்தப் புரிந்துணர்வால் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக உணர்வுமிக்க எமது மக்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், மாணவர்கள், வர்த்தகப் பெருமக்கள், போராளிகள், தேசிய செயற்பாட்டாளர்கள் எனப் பலர் எமக்குப் பக்கபலமாக இருந்து பல்வேறு வழிகளில் ஆதரவு தெரிவித்து வருகின்றார்கள். நாம் நம்பிக்கையுடன் எமது இலட்சியப் பயணத்தை தொடர்வோம். தமிழீழத் தேசியத்தலைவரின் வழிகாட்டலிலும், வீரச்சாவைத் தழுவிய எமது மாவீரர்களின் இலட்சிய உறுதியும், அர்ப்பணிப்புக்களும் எங்களை வழிநடத்தும்.

நன்றி.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

இவ்வண்ணம்

விஐயரட்ணம் சிவநேசன் (இரகுபதி)
நிர்வாகப் பொறுப்பாளர்
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.
பேர்ண், 14.03.2017