வாழ்நாள் முழுமைக்குமான இடம்பெயர்வு

259 0

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக, 26 ஆண்டுகளுக்கு முன்னர், வடக்கிலிருந்த தனது வீட்டிலிருந்து துரத்தப்பட்ட பூபாலச்சந்திரன் வதனா தனது அனுபவம் தொடர்பாக விபரிக்கிறார்.

வதனா ஒளிப்பதிவுக் கருவியின் முன்னால் புன்னகையுடன் பேசுவதற்கு முயற்சித்தார். ஆனால் உண்மையில் அது அவருக்கு மிகவும் கடினமானதாக இருந்தது. தனது நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் என ஒருவர் கூட இல்லை என செப்ரெம்பர் 2013ல் சிறிலங்கா அரசாங்கம் எனப் பிரகடனப்படுத்தியதன் மூலம் தன்னைத் தானே பாராட்டிக் கொண்டது.

இவ்வாறு சுய பிரகடனம் ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டதன் மூலம், வடக்கில் தனிநாடு அமைக்கப்பட வேண்டும் எனக் கோரி தமிழீழ விடுதலைப் புலிகளால் ஆரம்பிக்கப்பட்டு மூன்று பத்தாண்டுகளாகத் தொடரப்பட்ட யுத்தத்தின் அத்தியாயத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.

இந்த அறிவித்தல் விடுக்கப்பட்ட பின்னர், நாட்டிலிருந்து வெளியேறுமாறு அனைத்துலக தன்னார்வத் தொண்டர் அமைப்புக்களுக்கு சிறிலங்கா அரசாங்கத்தால் ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த அமைப்புக்கள் சிறிலங்காவில் பணியாற்றுவதற்கான தேவையில்லை எனவும் அரசாங்கம் தெரிவித்தது.

இதன் பின்னர் தமது வாழ்வு மேலும் நெருக்கடியைச் சந்திக்கும் என்பதை பூபாலச்சந்திரன் உணர்ந்து கொண்டார். இவர் யாழ்ப்பாண நகர மையத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு நாளாந்தக் கூலிக்காக இதில் ஈடுபடுகிறார். இவரது சகோதரர் ஒருவரும் கூலி வேலையில் ஈடுபடுகிறார். இவரது வாழ்வாதாரம் மீன்பிடியாகக் காணப்பட்டது. ஆனால் தற்போது யாழ். குடாநாட்டில் சீமெந்துப் பைகளை இறக்கும் வேலையைச் செய்கிறார்.

பூபாலச்சந்திரன் வதனாவின் கணவர் கூட தனக்கெனச் சொந்தமாக மீன்பிடிப் படகொன்றை வைத்திருந்தார். இதன்மூலம் மூன்று பிள்ளைகளைக் கொண்ட இவரது குடும்பமானது 1990 வரை நல்லமுறையில் வாழ்ந்து வந்தனர். 1990 ஒக்ரோபரில் இவர்களின் சொந்த இடத்தில் யுத்தம் ஏற்பட்டதன் காரணமாக இவர்கள் தமது சொந்த வீடு மற்றும் மீன்பிடிப் படகு மற்றும் ஏனைய உடமைகளை இழந்து இடம்பெயர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

பெரும்பாலான தமிழ் மக்கள் இந்துக்களாவர். இதேபோன்று பெரும்பாலான சிங்களவர்கள் பௌத்தர்களாவர். இந்த சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களே சிறிலங்கா இராணுவத்தில் அங்கம் வகிக்கின்றனர். சிறிலங்கா இராணுவத்தினருக்கும் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் தீவிரம் பெற்றதால் 1990ல் பூபாலச்சந்திரனின் குடும்பமும் யுத்தம் காரணமாக தனது இல்லிடத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

தனது சொந்த இடத்தை விட்டு இடம்பெயர்ந்து ஆறு ஆண்டுகள் வரை பல்வேறு இடங்களிலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்ததுடன், கணவர் மற்றும் மகன் ஒருவர் யுத்தத்தில் கொல்லப்பட்ட பின்னர் இறுதியில் பூபாலச்சந்திரன் வதனா யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார். இவர் மற்றைய இரு பிள்ளைகளுடனும் கதைக்காததால் தனிமையில் இடம்பெயர்ந்த முகாமில் வசித்து வருகிறார். இந்த முகாமில் 120 இடம்பெயர்ந்த குடும்பத்தினர் வாழ்கின்றனர். இவர்கள் வாழும் கூடாரங்கள் தகரம் மற்றும் பனைமட்டைகளால் அமைக்கப்பட்டுள்ளன.

‘இந்த முகாமில் பத்து மலசலகூடங்கள் மாத்திரமே உள்ளன. ஆனால் மழை கடுமையாகப் பெய்தால் இவற்றைப் பயன்படுத்த முடியாது. வெள்ளம் நிரம்பியிருக்கும். இதேபோன்று எமக்கென பத்து நீர்க்குழாய்கள் உள்ளன. ஆனால் அவற்றில் பெறப்படும் நீரைக் குடிப்பதற்குப் பயன்படுத்த முடியாது’ என திருமதி பூபாலச்சந்திரன் விளக்கினார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றால் வழங்கப்படும் 15 கிலோ அரிசியை பூபாலசிங்கம் பெறுகிறார். இவர் வாழும் இடத்தில் இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் முஸ்லீம்கள் என பலதரப்பட்டவர்களும் வாழ்கின்ற போதிலும் மத அமைப்புக்களிடமிருந்து தான் எதையும் எதிர்பார்க்கவில்லை என பூபாலசிங்கம் தெரிவித்தார்.

‘மத அமைப்புக்கள் எனது வழிபாடுகளில் மட்டுமே எனக்கு உதவுகிறார்கள். நான் அரைவாசி இந்துவாகவும் அரைவாசி கத்தோலிக்கராகவும் வாழ்கிறேன்’ என இவர் கூறினார். பல ஆண்டுகளாக தனது வாழ்வை துன்பத்துடன் கழிக்கும் பூபாலச்சந்திரன் தனது சொந்த இடத்தில் தான் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறார். கடலுக்கு அண்மையில் அமைந்துள்ள தனது சொந்த இடத்தில் மிகவும் சந்தோசமாக தான் வாழ்ந்ததாகவும் இது தற்போது சிறிலங்கா கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் பூபாலச்சந்திரன் வதனா கூறுகிறார்.

வடக்கிலுள்ள 20 சதவீத நிலங்கள் இன்னமும் அவர்களது உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவில்லை என கொழும்பிலுள்ள மனிதாபிமானப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.

‘கடலிலிருந்து இரண்டு கிலோமீற்றர் தொலைவில் எனக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. அதற்கான நிலப் பத்திரமும் என்னிடம் உள்ளது. நான் எனது சொந்த நிலத்தைப் பார்ப்பதற்காகப் பலதடவைகள் சென்றுள்ளேன். கம்பி வேலிகளுக்கு அப்பால் தொலைவில் நின்றவாறு நான் அதனை ஏக்கத்துடன் பார்த்துவிட்டு திரும்பி வருவேன். எனது வீடு இராணுவத்தால் அழிக்கப்பட்டுள்ளது’ என பூபாலச்சந்திரன் வதனா தெரிவித்தார்.

இந்த நிலங்களை சிறிலங்கா இராணுவத்தினரோ அல்லது கடற்படையினரோ கைவிடுவதற்குத் தயாராக இல்லை. இந்தியா மற்றும் சிறிலங்காவிற்கு இடையில் போதைப் பொருட்களைக் கடத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதால் தம்மால் இந்த நிலங்களைக் கையளிக்க முடியாது என சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் கூறுகின்றனர்.

பூபாலச்சந்திரன் வதனா தங்கியுள்ள இடம்பெயர்ந்த முகாம் அமைக்கப்பட்டுள்ள நிலமானது யுத்தத்தின் காரணமாக பிரான்சிற்குத் தப்பிச் சென்ற தமிழர் ஒருவருக்குச் சொந்தமானதாகும். யுத்தம் முடிவடைந்த பின்னர் நாட்டிற்குத் திரும்பி வந்த இவர் தனது சொந்த நிலத்தைத் தன்னிடம் தருமாறு கோரியுள்ளதால் பூபாலச்சந்திரன் வதனா மற்றும் ஏனையோர் தங்கியுள்ள இடம்பெயர்ந்த முகாமில் கூட அவர்களால் நீண்ட நாட்களுக்குத் தங்கமுடியாத நிலை காணப்படுகிறது.

இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் ஒருவரின் தலைமையில் பூபாலச்சந்திரனும் இவர் போன்று இடம்பெயர்ந்து வாழும் 2000 பேரும் தமது நிலங்களை மீளக் கையளிக்க வேண்டும் எனக் கோரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். ‘நாங்கள் எமது நிலங்களுக்கு மீளச் செல்ல முடியும் எனவும் ஆனால் இராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் இதற்கு இடையூறாக உள்ளதாகவும் இந்த இடையூறு விலகும் பட்சத்தில் நாங்கள் எமது நிலங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியும் என நீதிமன்றில் கூறப்பட்டது. ஆகவே இதற்கு நீண்ட காலம் எடுக்கும்’ என பூபாலச்சந்திரன் வதனா தெரிவித்தார்.

ஆங்கிலத்தில் – Pierre Cochez, Jaffna
வழிமூலம் -.la-croix international
மொழியாக்கம் – நித்தியபாரதி (Puthinappalakai.com)