சாதாரண மக்கள் எமது பிரச்சினையை விளங்கிக்கொண்ட அளவிற்கு, அரசாங்கமும் அதிகாரிகளும்… .(காணொளி)

270 0

 

சாதாரண மக்கள் எமது பிரச்சினையை விளங்கிக்கொண்ட அளவிற்கு, அரசாங்கமும் அதிகாரிகளும் பிரச்சினைகளை விளங்கிக் கொள்ளாமை கவலைக்குரிய விடயம் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் ரி.கிஷாந்த் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 14ஆவது நாளாகவும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மரண வீடுகள் போன்று சவப்பெட்டிக்கு மாலை அணிவிக்கப்பட்டு, விளக்கு கொழுத்தப்பட்டு வெள்ளைச்சீலை கட்டி தமது சத்தியாக்கிரக போராட்டத்தினை வேலையற்ற பட்டதாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

மாகாண மற்றும் மத்திய அரசாங்கங்கள் தமக்கான நியமனத்தை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி கடந்த இரண்டு வாரமாக குறித்த போராட்டத்தினை வேலையற்ற பட்டதாhரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த போராட்டத்தின்போது, பல்வேறு அரசியல்வாதிகளும் வருகைதந்து வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கூறியிருந்த போதிலும், இதுவரையில் எந்தவித தீர்வும் எட்டப்படாத நிலையில்,

தொடர்ந்து சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2012 மார்ச் 31ஆம் திகதிக்குப் பின்னர் பட்டம்பெற்ற ஆயிரத்து 600இற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் உள்ள நிலையில், கிழக்கு மாகாணத்தில் 4 ஆயிரத்திற்கும் 500இற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வேலையற்ற நிலையில் உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுவரையில் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் உரிய நடவடிக்கையினை எடுக்காமை தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஜனநாயக போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட கிளையை சேர்ந்த உறுப்பினர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டங்கள் மூலம் அழுத்தங்களை வழங்குகின்றபோதிலும், இதுவரையில் தீர்க்கமான முடிவினை வழங்காமல் இருப்பது கண்டனத்திற்குரியதாகும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளதுடன், தமக்கான தீர்வு எட்டப்படுவரையில் தமது போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.