நிலை மாறும் உலகில் – சர்வதேச மனிதாபிமான தலையீடு

352 0

கடந்தகால  சிறீலங்கா அரசாங்கங்கள் காலம் தாழ்த்தல், மென்மைப்படுத்துதல், நீர்த்துப்போகச் செய்தல் போன்ற உத்திகள் ஊடாக உள்நாட்டு பேரினவாத சனநாயக பொறிமுறைகளை கையாண்டு சர்வதேச மனிதாபிமான தலையீட்டிலிருந்து தமது நிலைகளை தக்கவைத்து கொண்டு வந்திருக்கின்றன.

சிறீலங்கா அரசின் இந்த தந்திரங்களை தெரிந்திருந்தும் சர்வதேச மனித உரிமை சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இறுதியாக மிகக் குறைந்த வலுக்கொண்டது என்று தெரிந்திருந்தும், சர்வதேச நீதிபதிகளுடனான கலப்பு நீதியை ஒரு நியாயமான நீதியை தமிழ் மக்கள் நாடிநிற்கின்றனர்.

இதனால் தமிழ் மக்களது பிரச்சனை இன்று முன்னணி சர்வதேச நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளின் கையில் தங்கி நிற்கிறது. ஆனால் சர்வதேச நாடுகளின் போக்கை சரியாக புரிந்து கொண்டு நிலை மாறும் அரசியல் போக்கிற்கு ஏற்ப செயற்படுவதன் ஊடாக சிறீலங்கா அரசு இலகுவாக வென்று செல்கிறது.

கடந்த சர்வதேச மனித உரிமை கூட்டதொடரில் அரசியல் சட்ட சீர்திருத்தம் சமூக பொருளாதார முன்னேற்றங்கள் என ஏதேதோ காரணங்களை சர்வதேச நாடுகளுக்கு காட்டியதன் மூலம் தனது நன்மதிப்பை பெற்றுக் கொண்டு, சர்வதேச அழுத்தங்களில் இருந்து சிறீலங்கா அரசு தப்பி கொண்டது. இந்தநிலையில் மீண்டும் மனித உரிமை சபை கூட்டம் ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கிறது.

சர்வதேச மனிதாபிமான தலையீடு என்பது இனத்தின் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளை நிறுத்தும் பொருட்டு அல்லது முன்தடையாக வல்லரசுகளால் எடுக்கப்படும் அரசியல், இராணுவ நடவடிக்கைகளே!.

இங்கே எட்டு வருடங்களாகிவிட்ட படுகொலைகள் தொடர்ச்சியாக இன ரீதியாக, திட்டமிட்ட அரசைஅநீதியிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் சர்வதேச நாடுகளின் மனிதாபிமான தலையீடு எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் சர்வதேச நாடுகள் எப்பொழுது மனிதாபிமானத்துடன் ஒரு நாட்டின் பிரச்சினையில் தலையிட்டனவா என்பது கேள்விக்குரிய விடயமாகும். கொசோவோ, ருவாண்டா போன்ற நாடுகளில் சர்வதேச தலையீடுகள் இடம்பெற்றன. அவற்றின் தற்போதைய நிலைகள் என்ன என்பன இங்கு முக்கியமாக பார்க்கக் கூடியனவாகும்.

அதேவேளை மனிதாபிமான தலையீட்டிற்கும், இறையாண்மைக்கும் இடையில் இருக்கும் முரண்பாட்டை சிறிய நாடுகள் பயன்படுத்துகின்றன. இறையாண்மையை பாதுகாக்க 370ஆண்டு கால மேலைத்தேய கிறிஸ்தவ அரசுகளுக்கிடையிலான West ஒப்பந்தம் சர்வதேச தலையீட்டை தடுப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.

1994ஆம் ஆண்டு ருவாண்டாவில் இனப்படுகொலைகள் இடம்பெறுவதற்கு முன்னரே ஐக்கிய நாடுகள் சபை தடுத்திருக்கக்கூடிய நிலை இருந்த போதும், பிரான்ஸின் தலையீட்டால் குட்டு இனத்தவர்கள் ஆங்கில மொழி பேசும் ருட்சி இனத்தோரை இனப்படுகொலை செய்ய வாய்ப்பு ஏற்பட்டது என்பது இன்னமும் ஒர் வாதமாகும்; காலாகாலமாக பிரெஞ்சு மொழி பேசும் குட்டு இனத்தவருடன் நல்லுறவை பேணி வந்த பிரான்ஸ் வெளியுறவு அதிகாரிகள், ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கைகளை திசை திருப்பியமை, கொலையாளிகளுக்கு பாதுகாப்பு வழங்கியமை. இனஅழிப்பு காலங்களில் திட்டமிட்டு “உள்நாட்டு யுத்தம்” என்ற சொற்பதத்தை பாவித்ததன் மூலம் கொலைக்களத்தை பாதுகாத்தது மட்டுமல்லாது சர்வதேச மனிதாபிமான தலையீட்டையும் தடுத்தனர் என்பது ருவாண்டா படுகொலைகள் குறித்து  பிரான்ஸ் மீதிருக்கும் குற்றச்சாட்டுகளாகும்

அதேபோல கொசோவோ மக்களின் படுகொலைகளின் போது வான் தாக்குதல் மட்டும் நேட்டோ படைகளால் மேற்கொண்டமையானது சேர்பிய இராணுவத்தினர் கொசோவோக்களை மேலும் பன்மடங்கு கொலை செய்வதற்கு வழி வகுத்ததான குற்றச்சாட்டு இன்னமும் உள்ளது. தரைப்படைகளை பயன்படுத்தியிருந்தால் இந்த படுகொலைகள் அனைத்தையும் தடுத்திருக்கலாம் என்பது கொசோவோ ஆதரவு விமர்சகர்களது கருத்தாகும். ஆனால் 1998ஆம் ஆண்டு சேர்பியப் படைகள் கட்டுக்குமீறி இனஅழிப்பை மேற்கொண்ட வேளை சுதந்திர கொசோவோ உரிமை வழங்கப்பட்டு ஐக்கிய நாடுகள் சமாதானப்படைகள் இறக்கப்பட்டது. இதன்பின் 78 நாட்கள் சமாதானப் படை நடவடிக்கைகளின் பின்னரே சேர்பியா யுத்தநிறுத்த உடன்பாட்டிற்கு வந்தது.

ஆக இந்த இரு நாடுகளிலும் சொந்த நலன்களின் அடிப்படையிலான மேலைத்தேய தலையீட்டின் காரணமாகவே இனப்படுகொலைகள் அதிகரித்திருந்ததை சுட்டிக்காட்டும் ஆய்வாளர்கள் கொசோவோவிலும் ருவாண்டாவிலும் இன்னமும் தொழில் வாய்ப்பின்மையால் பொருளாதார முன்னேற்றம் இல்லாத நிலையும், வறுமையும், இதனால் நாட்டை விட்டு மக்கள் வெளியேறும் நிலை அதிகம் காணப்படுவதையும் சுட்டிக்காட்ட தவறவில்லை.

இதேபோல 2011 ஆம் ஆண்டு லிபிய மக்கள் கொல்லப்பட்ட போதும் சர்வதேசம் லிபிய மக்களின் தேவைக்கு ஏற்றாற்போல் மனிதாபிமான தலையீடு செய்யவில்லை என்பது குற்றச்சாட்டாக உள்ளது.

ஆக மனிதாபிமான சர்வதேச தலையீடு என்பது எப்பொழுதும் பாதிக்கப்படும் மக்களை காப்பாற்றும் பொருட்டு இருந்ததில்லை. பதிலாக பலம் பொருந்திய மேலைத்தேய நாடுகளின் நலன்களின் பால் சம்பந்தப்பட்டதாகவே இருந்து வந்திருக்கிறது.

இந்தநிலையில் தமிழ் மக்களது ஆகக்குறைந்த எதிர்பார்ப்பான கலப்பு நீதிமன்றம் அமைத்து நீதி விசாரணை செய்தல் என்ற விடயம் இங்கே எத்தகைய நிலையில் உள்ளது என்பதை சர்வதேச அரசியல் ஊடாக அறிந்து கொள்ளலாம்.

சிறீலங்கா அரசு தாராள சனநாயகவாத சர்வதேச ஆட்சி அணியை சார்ந்ததாக தன்னை வெளிப்படையாக காட்டி கொண்டு பிராந்திய ஆதிக்கப் போட்டியில் பேரம் பேசும் போக்கை கடைப்பிடிப்பதன் ஊடாக பல வெற்றிகளை பெற்று வருகிறது.

தாராள சனநாயகவாத ஆட்சி அணியில் ஐக்கிய அமெரிக்காவின் தலைமையில் பிரித்தானியா, மற்றும் ஐரோப்பிய நாடுகளும் ஒத்திசைவுடனும் கூட்டுறவுடனும் இயங்கி வருகின்றன. இங்கே ஒத்திசைவு என்பது நாடுகளிற்கிடையே முற்றுமுழுதான வெளிப்படைத்தன்மை கொண்ட நலன்களின் மேலான புரிதலும், இதற்கு உதாரணமாக அமெரிக்கா, பிரித்தானியா  கூட்டுறவு என்பது சில விடயங்களில் எதிர்ப்புபோக்குகள் இருப்பினும் பொது நலன் கருதி  இனங்கிப்போகும் தன்மையுமாகும்.

இதற்கு உதாரணமாக ரஷ்ய, சீன நாடுகள் அமெரிக்காவுடன் கொண்டுள்ள உறவை காட்டலாம். ஆனால் மேலும் சில நாடுகள் அடிப்படையில் தாராள சனநாயக ஆட்சி அணியிலிருந்து எதிர்போக்கை கொண்டு செயல்பட வல்லன. உதாரணமாக வடகொரியா இன்று ஒட்டுமொத்த எதிர்ப்பை மேற்குலகிற்கு காட்டி வருவதை கொள்ளலாம்.

இந்த சர்வதேச அணி ஒழுங்கு நிலைமைகளை புரிந்து அதன் வெட்பதட்ப நிலைமைகளுக்கு ஏற்ப சிறிய நாடுகள் தமது வெளியுறவு கொள்கைகளை வகுத்து கொள்கின்றன.

சில வருடங்களுக்கு முன் தென்கிழக்காசிய நாடுகள் மத்தியில் வலிமை மிகுந்த சிறிய நாடான சிங்கப்பூரின்  (முன்னை நாள்) வெளியுறவு அமைச்சர் சண்முகம் அவர்கள் 2014ஆண்டு இடம்பெற்ற ஒரு கலந்துரையாடல் நிகழ்வில் பேசிய போது, சிங்கப்பூரின் வெளியுறவு கொள்கை குறித்த கருத்தை இங்கே காண்பது பொருத்தமானதாகும்.

நாம் மிகவும் சிறிய ஒரு தேசம் எமது எல்லைப்புற மற்றும் பிராந்திய நலன்கள் பல நாடுகளுடன் முரண்பட்டது அல்ல. அடிப்படையில் உலகை நோக்கிய நடைமுறைக்கு ஒவ்வாத பார்வையை கொண்டிருப்பதிலும் பார்க்க எமது தலைமைத்துவம் உலகின் ஒட்டத்துடன் இணைந்த கொள்கைகளை வகுத்து கொண்டுள்ளது. ஆகவே எமது பிராந்தியத்தில் நாம் எங்கே இருக்கிறோமோ அந்த பிராந்தியத்தின் போக்கிற்கு ஏற்ப வாழப்பழகி கொண்டுள்ளோம். நடைமுறைக்கு சாத்தியமான அணுகுமுறைகளை கொண்டு எமது பிரச்சினைகளை தீர்க்கும் பொறிமுறைகளை கொண்டிருப்பது முக்கியமானது.

இது முரண்பாடுகளை தீர்த்துக் கொள்வதற்குரிய தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது. ஆனால் நிச்சயமாக அடிப்படையில் எம்மை பாதுகாத்து கொள்ளக்கூடிய நிலையிலேயே உள்ளோம் என்று கூறி இருந்தார்

சிங்கப்பூரைப் போலவே, சிறீலங்காவும் உலகின் வலிய நாடுகளுடன் உறவுகளை வகுத்து உள்ளது. இரு பகுதிக்கும் வளைந்து கொடுத்து வல்லரசுகள் முரண்பட்டுக் கொள்ளும் நிலையை கவனித்து செயற்படுகிறது. முரண்பட்ட அணிகளை கையாளும் வல்லமை கொண்ட நாடாகவே சிறீலங்கா இருந்து வருகிறது. தனது அரசியல் போக்கின் திறமையூடாக புவியியல் கேந்திர நிலையை கருவியாக்கி மனிதாபிமானவாதத்தை மேற்குலகு மேலாதிக்கவாதத்திற்கு எதிரான பேரம்பேசும் மூலோபாயமாக பிரயோகிக்கும் பண்பை சிறீலங்கா உணர்ந்து கொண்டுள்ளது.

தக்கதருணங்களில் நடைமுறைக்கு சாத்தியமான சனநாயகவாத அணுகுமுறைகளை பிரயோகித்து சர்வதேச மனித உரிமை சபையின் நிறுவன அரசியல் களம் அறிந்து பிரையோகிப்பதன் மூலம் தனது இறையாண்மையின் பலத்தை கட்டிக்காத்து வருகிறது.

சர்வதேச வழக்கப்படி சமாதானத்திற்கு குந்தகம் விளைவிக்கும் தேசங்கள் மீதும், உள்நாட்டில் கொடுமைகள் புரியும் நாடுகள் மீதும் சர்வதேச நாடுகள்  தலையீடு செய்யலாம் என்ற கருத்துகள் இருந்தபோதிலும், மனித உரிமைச்சபை போன்ற இடங்களில் தீர்மானங்கள் கொண்டு வரும்போது பங்குபற்றும் நாடுகள் தமது நாட்டு இறையாண்மையில் இன்னுமொரு நாடு தலையிட இடமளிக்கக் கூடாது என்ற வகையில், மனித உரிமை குற்றசாட்டுகளை கொண்ட நாடுகளையும் அவற்றின் இறையாண்மைக்குள் தலையீடு செய்ய கூடாது என்ற வகையிலேயே தீர்மானங்களை முன்மொழிவது வழக்கம்.

இறையாண்மை இன்றைய சர்வதேச அரசியல் களத்தில் மனிதாபிமான தலையீட்டிற்கு எதிரான ஆயுதமாக அரசுகளால் பயன்படுத்தப்படுவது கவனிக்கத்தக்கது. 1648ஆம் ஆண்டு செய்யப்பட்ட Westphalia உடன்படிக்கைக்கு இணங்க நாடுகள் தமது எல்லைக்குள் உட்பட்ட பகுதிக்குள் சுதந்திரமாக நடவடிக்கைகளில் ஈடுபடலாம். இதே உடன்படிக்கை 1945 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை சரத்து 2.(7) கூட இதே Westphalia உடன்படிக்கையை வலியுறுத்தி ஒரு தேசத்தின் உள்நாட்டு அதிகாரத்தில் எவரும் தலையிட முடியாது என்று வலியுறுத்தி உள்ளது.

இதனால் சிறீலங்கா போன்ற நாடுகள் இழைத்த மனித உரிமை மீறல்களை மூடிமறைக்க ஏதுவாக இறையாண்மையின் பாதுகாப்பு என்றதன் பெயரால் சலுகைகளை பெற்றுகொள்ள கூடியதாக உள்ளது.

தமிழ் சமுதாயத்திற்கு மேலும் சர்வதேச அரங்கில் இடம்பிடிப்பதில் தடைக்கல்லாக இருப்பது சனநாயக போர்வை அற்ற தன்மையாகவே தெரிகிறது. சனநாயக விழுமியங்களின் வளர்ச்சி என்பதை பொறுத்தவரையில் சிறீலங்கா அரச தரப்பில் அதிகமாக சனநாயகம் தம்மால் பேணப்படுவதாக சித்தரிக்கப்படுகிறது.

அதேவேளை தமிழர் தரப்பில் உள்ள நிறுவனங்களை சனநாயக விழுமியங்களைப் பேணுவதில் தரம் தாழ்ந்தது என்பதை பிரச்சாரப்படுத்துவதில் மிகமுக்கிய கவனம் செலுத்தப்படுகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த பிரதிநிதித்துவத்தையும் சிறீலங்கா அரசே கையகப்படுத்திக் கொள்ளும் தன்மையை பேணக்கூடிய நிலை உள்ளது.

இதற்காக சனநாயக போராட்டங்கள் நடத்தி நாட்டை பிரித்து கேட்பது என்பது அல்ல. பிரிவினைவாதம் Secessionism என்பது மேலைத்தேய அரசுகளால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கருத்தாக பார்க்கப்படுகிறது. தமது நாடுகளில் ஏற்படக்கூடிய பிரிவினை சிந்தனைகளை மறுத்து நிற்கும் வளர்ந்து வரும் நாடுகள் இந்த சிந்தனையை சற்றும் ஏற்றுக்கொள்ள கூடிய நிலை இன்றைய உலக அரசியல் போக்கில் இல்லை.

தமிழ் மக்கள் தம்மை ஒரு சுய அரசியல் அலகாக தமது அடையாளத்தை நிலைநிறுத்தும் செயற்பாடுகளை கொண்டிருப்பதுடன் மனதளவில் தாம் ஒரு தனித்தேசமாக சிந்திக்க வேண்டிய தேவை அவர்கள் மத்தியில் உள்ளது.  ஏனெனில் தமிழ் மக்களது ஏக்கங்களை இன்று தமது நலனுக்காக பயன்படுத்தும் சர்வதேச நாடுகள் இன்னமும் தமிழர்கள் தமக்குத் தேவையான ஒரு தரப்பாகவே பார்க்கின்றன.

இந்த சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாயின் தமிழ் மக்கள் தம் மத்தியில் ஒரு அரச கட்டுமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய தேவையில் உள்ளனர்.

எண்பதுகளில் உதவி வழங்கும் நாடுகள் தமது பொருளாதார பரிந்துரை மூலம் வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார கொள்கைகளில் தலையீடு செய்வதை ஒரு பொறிமுறையாக கொண்டிருந்தன. இதில் பிரதானமாக வாஷிங்டன் கருத்தொற்றுமை உடன்பாடு Washington Consensus மூலம் அரசியலுக்கு அப்பால் தலையிட்டு கட்டுப்படுத்தும் தன்மையை கொண்டிருந்தன. சிறீலங்காவில் எண்பதுகளின் ஆரம்பத்தில் திறந்த பொருளாதார கொள்கை அறிமுகம் செய்யப்பட்ட தன்மையை உதாரணமாக காணலாம்.

ஆனால் கடந்த இருபது வருடங்களில் நிலைமை அரசுகள் ஊடாக செயற்படுவதே மைய அபிவிருத்தி  நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. தற்பொழுது அரசியல் நடவடிக்கைகளே அபிவிருத்தியாக பார்க்கப்படுகிறது. அபிவிருத்தி குறித்த ஐக்கிய இராச்சியத்தின் அறிக்கையில் அரசியலும் பாதுகாப்பும் அபிவிருத்தியிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாதவையாக உள்ளன என்று குறிப்பிடப்படுகிறது.

வளர்ந்துவரும் பொருளாதாரம் அரச கட்டமைப்புகளின் வளர்ச்சி இன்றி வெற்றி காணாது என்பது அபிவிருத்தி பொருளாதார ஆய்வாளர்களின்  பார்வையாக உள்ளது. இதனால் வளர்ச்சி அடைந்த நாடுகளின் சந்தைப்பலத்தை உறுதிப்படுத்தும் வகையில் புதிய கருத்தொற்றுமை உடன்பாடு ஒன்றின் அவசியம் உணரப்பட்டுள்ளது. இது அரச கொள்கையும் சர்வதேச தலையீடும் முக்கிய இடம்பிடிக்கும் என்பது ஆய்வாளர்கள் பார்வையாகும்.

ஆக மனிதாபிமான தலையீடு என்பதிலும் பார்க்க இனி வரும் காலங்கள் யுத்தத்தின் பின்பு கட்டு குலைந்த அரசுகள் மீது பொருளாதார அபிவிருத்தி அரச கட்டமைப்பு போன்ற விடயங்களூடான தலையீடுகளே அதிகம் காணப்படும் என்பது பார்வையாக உள்ளது. இதற்காக தமிழர்கள் நீதிக்கான போராட்டத்தை கைவிட வேண்டும் என்பது அர்த்தமில்லை.

அடுத்து வாஷிங்டன் கருத்தொற்றுமை உடன்பாடு பற்றி பார்க்கலாம்

– லோகன் பரமசாமி

இந்தக் கட்டுரையாருடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள loganparamasamy@yahoo.co.uk மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.