சிறிலங்காவை சுற்றிய கடலில் சீனாவுடன் போட்டி போடும் ஜப்பான்!

274 0

கடந்த 65 ஆண்டுகளாக நீடிக்கும் ஜப்பான் – சிறிலங்கா ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவு, இவ்விரு நாடுகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகக் காணப்படுகிறது. குறிப்பாக இந்திய மாக்கடலின் கடல்சார் பாதுகாப்பு உறவானது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இவ்விரு நாடுகளும் இணைந்து கடல்சார் பாதுகாப்பு மற்றும் ஏனைய கடல்சார் விவகாரங்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றை ஜனவரி மாதம் ஆரம்பித்தன.  சிறிலங்காவின் கடல் சார் பாதுகாப்பு மற்றும் குற்றங்களை எதிர்ப்பதற்கான திறனை வளர்த்துக் கொள்ளல் போன்ற விடயங்களுக்காக ஜூன் 2016 அன்று ஜப்பானால் சிறிலங்காவிற்கு 16.3 மில்லியன் டொலர் பெறுமதியான உதவித் திட்டம் வழங்கப்பட்டதை அடுத்தே இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்திய மாக்கடலானது நிலைத்தன்மையுடம் சட்ட ஆட்சி மூலம் ஆளப்படுகின்ற ஒன்றாகவும் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தியே இப்பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக கொழும்பிலுள்ள ஜப்பானியத் தூதரகம் தெரிவித்தது. ‘இவ்வாறான ஒத்துழைப்பை மேலும் முன்னேற்றுவதற்கான முக்கியதொரு நகர்வாகவே இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது’ என ஜப்பானியத் தூதரகம் கூறியிருந்தது.

இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில் சிறிலங்காவுடனான கடல்சார் பேச்சுவார்த்தை மூலம் ஜப்பான் தனது இருப்பை இந்திய மாக்கடல் நிலைப்படுத்திக் கொள்வதற்கான ஒரு மூலோபாய நகர்வாக இதனை முன்னெடுத்துள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

japanese warship

சிறிலங்காவில் அதிகரித்து வரும் சீனாவின் முதலீடுகள் மற்றும் சிறிலங்கா அரசாங்கம் மீதான சீனாவின் செல்வாக்குகள் தொடர்பாக ஜப்பான் அதிருப்தி அடைந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக புதுடில்லியைத் தளமாகக் கொண்டியங்கும் அவதானிப்பு ஆய்வு நிறுவனத்தின் கடல்சார் கோட்பாட்டிற்கான தலைவர் அப்ஜித் சிங் தெரிவித்தார்.

சிறிலங்காவைப் பொறுத்தளவில் அதற்கான வெளிநாட்டு உதவிகள் வரவேற்கத்தக்கன. சிறிலங்காவைச் சூழவுள்ள அதன் கடல்பகுதியானது சிறிலங்காவின் நிலப்பகுதியை விட 27 மடங்கு அதிகமானதாகும். ஆகவே இந்தப் பகுதியை விரிவாக்குவதற்கான எத்தகைய திட்டத்தையும் சிறிலங்கா பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையுள்ளதாக சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியராச்சி தெரிவித்தார்.

‘ஜப்பான் போன்ற நாடுகளிடமிருந்து அனைத்துலக உதவிகளை நாங்கள் கோரி நிற்கிறோம். இதன்மூலம் எமது கடல்சார் எல்லைகளை பலப்படுத்திக் கொள்ளவும் பாதுகாப்பதற்காகவும் நாங்கள் ஜப்பான் போன்ற நாடுகளின் உதவிகளைப் பெறுகிறோம். அத்துடன் கடல்சார் தேடுதல்கள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் எம்மை மேலும் வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பையும் பெறுகிறோம்’ என கருணாசேன ஹேற்றியாராச்சி கூறினார்.

ஆட்கடத்தல், போதைப் பொருள் கடத்தல் போன்றன சிறிலங்காவில் மிகப் பாரிய பிரச்சினைகளாக உள்ளன. சிறிலங்காவிலிருந்து கடல் வழியாக அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு ஆட்கடத்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.  2009 தொடக்கம் சட்ட விரோதமாக 49 கப்பல்களில் நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முயற்சித்த 4500 வரையான இலங்கையர்களை சிறிலங்கா காவற்துறையினர் மற்றும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் இடைமறித்ததாக சிறிலங்கா காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து போதைப் பொருட்களும் கடத்தப்படுகின்றன. மார்ச் 2016ல், சிறிலங்காவிற்குள் 101 கிலோ எடையுள்ள போதைப் பொருட்களைக் கடத்துவதற்காக போதைப் பொருள் வியாபாரிகளால் மீன்பிடிக் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன.

கடல்சார் பாதுகாப்பிற்கு அப்பால், சிறிலங்காவின் சமூக பொருளாதாரத் திட்டங்களிலும் ஜப்பான் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக கட்டுமான அபிவிருத்திகள், மின்சாரம் மற்றும் தூயநீர் வழங்கல் போன்ற திட்டங்களிலும் ஜப்பான் ஈடுபட்டுள்ளது. 2013 தொடக்கம் 2015 வரையான காலப்பகுதியில், சிறிலங்காவின் அபிவிருத்தித் திட்டங்களுக்காக 143.5 மில்லியன் டொலர் நிதியை ஜப்பான் வழங்கியிருந்தது.

ஆனால் சிறிலங்காவின் மிகப் பெரிய முதலீட்டாளராக தற்போதும் சீனாவே காணப்படுகிறது. 2005 தொடக்கம் 2015 வரையான காலப்பகுதியில், உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவி மற்றும் நேரடி வெளிநாட்டு முதலீடு போன்றவற்றின் மூலம் சீனாவால் சிறிலங்காவிற்கு 15 பில்லியன் டொலர் நிதி வழங்கப்பட்டது. சிறிலங்கா இராணுவத்தினர் யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கான இராணுவ உதவிகளையும் சீனா வழங்கியிருந்தது.

அம்பாந்தோட்டையில் புதிய துறைமுகம், விமானநிலையம் மற்றும் மாநாட்டு மண்டபம் போன்றவற்றை சீனா அமைத்ததுடன் தற்போது 1.4 பில்லியன் டொலர் பெறுமதியான அனைத்துலக நிதி நகரத் திட்டம் ஒன்றை கொழும்புத் துறைமுகத்தில் மேற்கொண்டு வருகிறது. மொனாக்காவை விட பாரியதொரு கரையோர  நகரம் ஒன்றைக் கட்டுவதும் 13 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டுவதும் இதன் நோக்காகும்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன 2015ல் ஜப்பானின் நகோயாவிற்குப் பயணம் செய்த போது, 338.4 மில்லியன் டொலரை சிறிலங்காவிற்குக் கடனாகத் தருவதாக ஜப்பானியப் பிரதமர் சின்சோ அபே வாக்குறுதி வழங்கியிருந்தார். இக்கடனானது வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மின்வழங்கல் மற்றும் நீர் வசதிகளை மேற்கொள்வதற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்காவுடன் நெருக்கமான உறவைப் பேண வேண்டிய அவசியத்தை ஜப்பான் கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சிறிலங்காவின் கேந்திர முக்கியத்துவம் மிக்க அமைவிடமானது, கடல் சார் தொடர்பாடல் வழிகளைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை ஜப்பான் முன்னெடுப்பதற்கான முக்கிய கூறாக அமைந்துள்ளதாக 1987-1990 வரையான காலப்பகுதியில் சிறிலங்காவில் இந்திய அமைதி காக்கும் படை பணியில் ஈடுபட்ட போது இந்தியப் புலனாய்வுப் பிரிவின் தலைவராகப் பணியாற்றியவரும் இந்தியாவின் ஓய்வுபெற்ற இராணுவப் புலனாய்வு வல்லுனருமான கேணல் ஆர். ஹரிகரன் குறிப்பிட்டுள்ளார்.

‘சீனாவின் அதிகரித்து வரும் செல்வாக்கின் காரணமாக ஜப்பான் சிறிலங்காவுடன் உறவைப் பேணவேண்டிய தேவை காணப்படுகிறது. அத்துடன் இந்த உறவுநிலைக்கு கடல்சார் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு போன்றன மிக முக்கிய அம்சமாகக் காணப்படுகிறது. ஜப்பானியப் பாதுகாப்புப் படைகளும் தற்போது சிறிலங்காவிற்கு வருகை தருவது அதிகரித்துள்ளது’ என கேணல் ஹரிகரன் தெரிவித்தார்.

2009 தொடக்கம் ஜப்பானிய கடல்சார் பாதுகாப்புப் படைகள் மற்றும் ஜப்பானிய கரையோர பாதுகாப்புக் கப்பல்கள் போன்றன 55 தடவைகள் கொழும்பில் தரித்து நின்றுள்ளன. திறந்த கடல் பரப்பில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுவதற்கான போதியளவு கண்காணிப்பு படகுகளை சிறிலங்கா கொண்டிருக்கவில்லை என ஜப்பானியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் கரையோரப் பாதுகாப்புப் பணிக்காக மேலும் இரு கண்காணிப்புப் படகுகளை வழங்குதல் மற்றும் ஏனைய படகுகளைத் திருத்துதல் மற்றும் கரையோரப் பாதுகாப்புப் படையினருக்குப் பயிற்சி வழங்குதல் போன்றன ஜப்பானின் 2016 உதவித் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

‘இவ்வாறான உதவித் திட்டங்கள் மூலம் கடல் சார் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான திறன் மேலும் அதிகரிக்கப்படுவதுடன் சிறிலங்கா கடற்பாதுகாப்புப் படையினர் ஆட்கடத்தல்களைக் கட்டுப்படுத்துவதற்கும் ஏனைய கடல்சார் குற்றங்களைத் தடுப்பதற்குமான திறனைப் பெற்றுக் கொள்வதுடன், கப்பல்களிலிருந்து எண்ணெய்க் கசிவுகள் ஏற்படுவதைத் தடுப்பதற்குமான திறனை விருத்தி செய்து செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது’ என ஜப்பானியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

‘சிறிலங்காவானது சீனாவின் முதலீடுகள் மற்றும் கடன்கள் போன்றவற்றிலிருந்து நன்மை பெறுவது முக்கியத்துவம் மிக்கது. அதேவேளையில் சிறிலங்காவானது இந்தியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுடனான தனது பாரம்பரிய நல்லுறவுகளைச் சமப்படுத்திக் கொள்வதும் முக்கியத்துவம் மிக்கதாகும்’ என கொழும்பிலுள்ள ஆசியக் கட்டுமான கொள்கை வகுப்பு மையத்தின் நிறுவுனர் றொகான் சமரஜீவ தெரிவித்தார்.

சீனாவின் ஒரு பாதை ஒரு அணை என்கின்ற திட்டத்தின் மூலம் சிறிலங்கா தனக்குக் கிடைக்கக் கூடிய திட்ட வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் எனவும் இதன் மூலம் சிறிலங்காவானது தனது பாரம்பரிய வர்த்தக உறவுகள் மற்றும் வழிகளை மேலும் பலப்படுத்திக் கொள்ளும்.  ‘சீனாவின் முதலீடுகளை சிறிலங்கா வரவேற்காவிட்டால், இந்த முதலீடுகள் வேறு நாடுகளைச் சென்றடைந்து விடும்’ எனவும் இவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆங்கிலத்தில்  – MUNZA MUSHTAQ
வழிமூலம்        – Nikkei Asian Review
மொழியாக்கம் – நித்தியபாரதி