எச்சரிப்பாரா எடப்பாடி? – புகழேந்தி தங்கராஜ்

410 0

இப்போதைக்குக் கூத்து முடிவுக்கு வந்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக நீடிக்கிறார். பிப்ரவரி 18ம் தேதியை அவர் தன்னுடைய வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது. அவரால் மட்டுமல்ல ஸ்டாலினாலும் இந்த நாளை மறக்க முடியாது. பட்டையைக் கிளப்பிய நாளோ சட்டையைக் கழட்டிய நாளோ எதுவாயினும் இந்த நாள் அவரால் மறக்க முடியாத நாள்.

இந்த அக்கப்போர்களுக்கு இடையே 26வது மைலில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைக் கவனிக்க முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் தவறிவிடக் கூடாது. 2009ல் ஒன்றரை லட்சம் உயிர்களைக் கொன்று குவித்த சிங்கள இலங்கை அந்த இனப்படுகொலையை மூடிமறைக்க முயல்வதுடன் தமிழின அழிப்பை வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதற்கு நீதிகேட்க வேண்டியது அவர்களது கடமை.

‘தமிழ் மக்களைக் கொன்று குவித்த இலங்கை நமக்கு நட்புநாடு கிடையாது அது இந்தியாவின் நண்பனில்லை – என அறிவியுங்கள்’ என்று சகோதரி ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அது அ.தி.மு.க.வின் குரல் மட்டுமல்ல தமிழினத்தின் குரல். அதை வலுப்படுத்த தமிழகத் தலைவர்கள் அனைவரும் முயற்சிக்கவேண்டும்.

8 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் இனப்படுகொலை முடிவுக்கு வந்துவிட்டதாக சர்வதேச சமூகம் நம்பியது. ‘அது இனப்படுகொலை இல்லை போர்’ என்று இலங்கை சொன்னதை அரைகுறையாகவும் ‘போர் முடிந்துவிட்டது’ என்கிற பேத்துமாத்தை முழுமையாகவும் நம்பின உலக நாடுகள். அப்படியெல்லாம் நம்புவது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை ஜெயலலிதா அறிந்திருந்தார்.

ஜெயலலிதா தன்னுடைய முந்தைய அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள அதுதான் காரணமாக இருந்தது. ‘அந்த மக்களுக்கு நிரந்தரத் தீர்வு தமிழீழம் மட்டும்தான்’ என்று அவர் வாயாலேயே பிரகடனம் செய்யவைத்தது. உண்மையை உணர்ந்துகொண்டபின் மாற்றி யோசிப்பதில் என்ன பிழையிருக்கிறது?

போர் முடிந்துவிட்டதாக இலங்கை தெரிவித்தது 2009ல்! அதற்குப் பிறகும் தமிழர் தாயகத்திலிருந்து ராணுவம் வெளியேறவில்லை. இதுதான் மற்றெல்லாவற்றையும் காட்டிலும் கொடுமையானது. ராணுவம் அங்கிருந்து வெளியேறவேண்டும் – என்கிற தாயகத் தமிழ் உறவுகளின் குரலை இலங்கை மதிக்கவேயில்லை.

இந்த விஷயத்தில் உயிர் நண்பன் இந்தியா சொன்னதைக் கூட இலங்கை கேட்கவில்லை. சுஷ்மா சுவராஜ் நேரிலேயே போய் இதை எடுத்துச் சொன்னபோது ‘ராணுவத்தை இங்கே நிறுத்தக்கூடாது என்றால் இந்தியாவில் கொண்டுவந்து நிறுத்திக் கொள்ளவா’ என்று நக்கலடித்தது.

இலங்கையின் வடக்கும் கிழக்கும் தமிழரின் தாயகம். ராணுவத்தின் பெரும்பகுதி அங்கே கொண்டுவந்து நிறுத்தப்பட்டு நீண்ட காலம் ஆகிவிட்டது. இலங்கை ராணுவப் பிரிவுகளில் 75 சதவிகிதம் வடக்கில் நிற்கின்றன. அந்தப் பிரிவுகளில் உள்ள படையினரின் எண்ணிக்கை ஏறக்குறைய 2 லட்சம். சுமார் பத்து லட்சம் மக்கள் வாழ்கிற ஒரு பிராந்தியத்தில் இரண்டு லட்சம் ராணுவத்தினரை நிறுத்திவைத்திருக்கிற ஒரே நாடுஇ இலங்கைதான்! 5 பேருக்கு ஒரு சிப்பாய் என்பது உலகில் வேறெங்கும் இல்லாத அரச அராஜகம்.

சர்வதேசம் என்கிற ஜடம் இதையெல்லாம் அறியாததைப் போல் அறிதுயிலில் கிடக்கிறது. ‘நடந்தது போர்தான்… அது முடிந்துவிட்டது’ – என்று இலங்கை சொன்னதை இவர்கள் நம்பியது நியாயமாகவே இருந்துவிட்டுப் போகட்டும்….. இன்றைய நிலையிலாவது – ‘போர் முடிந்தபிறகும் 75 சதவிகிதப் படையினரை வடக்கில் நிறுத்திவைத்திருப்பது ஏன்’ என்று இலங்கையை இவர்கள் கேட்க வேண்டாமா? வாயை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்கிற இவர்களுக்கு வடகிழக்கில் ராணுவம் என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதாவது தெரியுமா?

விடுதலைப் புலிகளின் காலத்தில் வடகிழக்கில்இ போதைப் பொருள் நடமாட்டம் – விபச்சாரம் போன்ற சமூகக் கேடுகள் இல்லை. நச்சுத்தன்மை மிக்க அமெரிக்கக் குளிர்பானங்களையே கூட தடை செய்தவர்கள் புலிகள். இப்போது வடகிழக்கில் போதைப் பொருள் நடமாட்டம் விபச்சாரம் – என்று ஏகப்பட்ட சீரழிவுகள். முன்பு சிங்களத்தைத் திணித்தவர்கள் இப்போது சீரழிவைத் திணிக்கிறார்கள். 5 பேருக்கு ஒரு சிப்பாய் நிற்கிற பிராந்தியத்தில் ராணுவத்தைத் தவிர வேறெவரால் இதைச் செய்ய முடியும்?

இதுகுறித்து சுற்றிவளைக்காமல் நேர்படப் பேசுவது முக்கியம். போதைப் பொருள்கள் – விபச்சாரத்தைத் திணித்து இளைய தலைமுறையைச் சீரழித்து இளைஞர் சக்தியை நீர்த்துப் போகச்செய்யும் சதித்திட்டத்தை நிறைவேற்றவே சிங்கள ராணுவம் வடகிழக்கில் நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டு நூற்றுக்கு நூறு நிஜம். சிங்கள ராணுவம் மாதிரி போதைப் பொருள் விநியோகத்திலும் விபச்சாரத்துக்கு ஆள்பிடிக்கிற வேலையிலும் வேறெந்த நாட்டின் ராணுவமும் இறங்கியதாக நினைவில்லை.

வடகிழக்கில் ராணுவக் குவிப்பால் அப்பாவிப் பெண்கள் எதிர்கொள்கிற பிரச்சினைகள் வெளிப்படையாகப் பேச இயலாதவை. ‘ராணுவக் குவிப்பால் எமது சகோதரிகள் சுய கௌரவத்துடன் வாழ முடியவில்லை’ என்று இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தர் வேதனையோடு குறிப்பிட்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த அவலநிலை இன்றுவரை மாறவில்லை என்பதை சமீபத்தில்கூட சுட்டிக்காட்டியிருந்தார் வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன். தமிழர் தலைவர்களின் இந்த வேதனைக் குரல் இந்தியாவின் காதில் விழுகிறதா இல்லையா?

‘வடக்கில் ராணுவம் குவிக்கப்பட்டிருப்பது வன்முறைக்கு வித்திடுகிறது. மக்களின் நிலங்கள் வளங்கள் வாழ்வாதாரங்கள் வர்த்தகம் ஆகியவற்றைப் பறித்தெடுப்பதுடன் விதவைகள் மற்றும் ஏனையவரின் நல்வாழ்வுக்கு ராணுவத்தினர் அச்சுறுத்தலாக இருந்துவருகின்றனர்’ என்று சென்ற அக்டோபரில் லண்டன் நிகழ்ச்சியில் வேதனையுடன் குறிப்பிட்டார் விக்னேஸ்வரன். இப்படியொரு நிலையில் நல்லிணக்கம் எப்படிச் சாத்தியம் – என்பது அவரது கேள்வி.

நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதுதான் மற்றெல்லாவற்றையும் விட முக்கியம் – என்று தொடர்ந்து பிடிவாதம் பிடிக்கிறது இலங்கை. அப்படி முரண்டு பிடிப்பதற்கு ஒரு உள்நோக்கம் இருக்கிறது. ‘போர்க்குற்ற விசாரணை எங்களுடைய நல்லிணக்க முயற்சிகளைப் பாதிக்கும்’ என்கிற சொத்தை வாதத்தை முன்வைத்து நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி கிடைக்கிற வாய்ப்பை முடக்குவதுதான் அதன் மெய்யான நோக்கம்.

சிங்கள இலங்கை ஒன்றரை லட்சம் தமிழரைக் கொன்ற ராஜபக்சக்களைக் காப்பாற்றும்…. பாலியல் வன்முறையில் ஈடுபட்ட ஒட்டுமொத்த ராணுவத்தையும் காப்பாற்றும்…… பச்சிளம் பாலகன் பாலச்சந்திரனை பாயின்ட் பிளாங்க் ரேஞ்சில் சுட்டுக்கொன்ற மகாதீரர்களைக் காப்பாற்றும்…. எங்கள் சகோதரி இசைப்பிரியாவைச் சீரழித்த சிங்களப் பொறுக்கிகளைக் கூடக் காப்பாற்றும். சர்வதேச நீதிபதிகளைக் கொண்டு விசாரணை நடத்துவதாக ஐநாவில் கொடுத்த வாக்குறுதியை மட்டும்தான் காப்பாற்றாது.

இலங்கையின் இந்தப் பித்தலாட்டத்துக்கு முடிவுகட்ட எல்லாவகையிலும் முயல்கிறார் விக்னேஸ்வரன். சர்வதேச விசாரணைக்கான வழிமுறைகளை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். ‘குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் நல்லிணக்கம் எப்படி சாத்தியம்’ என்று அழுத்தந்திருத்தமாகக் கேட்கிறார். நல்லிணக்கத்துக்கும் போர்க்குற்ற விசாரணைக்கும் சம்பந்தமில்லை – என்கிறார்.

‘வடகிழக்கில் குவிக்கப்பட்டிருக்கும் மிகையான ராணுவம்தான் நல்லிணக்கத்துக்கு இடைஞ்சலாக இருக்கிறதேயொழிய போர்க்குற்ற விசாரணையல்ல’ என்பது முதல்வர் விக்னேஸ்வரனின் வலுவான வாதம். ‘நல்லிணக்கத்துக்கு முட்டுக்கட்டையாக இருப்பது ராணுவம்தான்’ (THE MILITARY IS A STUMBLING BLOCK) என்று லண்டன் நிகழ்ச்சியில் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார் அவர்.

விக்னேஸ்வரன் முன்வைத்த குற்றச்சாட்டை முன்னாள் அதிபர் சந்திரிகா சென்றவாரம் வழிமொழிந்திருக்கிறார். ராணுவத்தினரின் பாலியல் தொல்லைகளால் அப்பாவித் தமிழ்ப் பெண்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிற அவலம் நீடிப்பதை மனசாட்சியுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இந்த விஷயத்தில் கள்ளமௌனம் சாதிக்கிற இந்தியா எப்போதாவது ஒருமுறை வடகிழக்கிலிருந்து ராணுவத்தைத் திரும்பப் பெறும்படி ஒப்புக்கு வலியுறுத்துகிறது. பிரிட்டன் கனடா போன்ற ஒருசில நாடுகள் மட்டுமே இதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

சென்ற செப்டம்பரில் இலங்கைக்கு வந்த (முன்னாள்) ஐ.நா.செயலர் நாயகம் பான் கீ மூன் ‘படைகளை விலக்கிக் கொள்வதன் மூலம் தமிழர் பகுதிகளில் பதற்றத்தைக் குறைக்கவும் நம்பிக்கையை ஏற்படுத்தவும் முடியும்’ என்று எடுத்துச் சொன்னார். ‘தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்களை அவர்களிடம் திருப்பிக் கொடு’ என்று இலங்கை அரசை வலியுறுத்தினார். பான்கீமூன் பேசிவிட்டுச் சென்று 6 மாதமாகிவிட்டது. இலங்கை அசையவே இல்லை.

பான்கீமூனைத் தொடர்ந்து இலங்கைக்கு வந்தவர் ரீட்டா ஐசக். அவர் சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்ற அவர் ‘வடக்கில் படைக்குறைப்பு செய்வதன்மூலம் நல்லிணக்கத்தை முன்னெடுக்க வேண்டும்’ என்று எடுத்துச் சொன்னார். கைப்பற்றிய நிலங்களைஇ உரியவர்களிடம் ராணுவம் ஒப்படைக்க வேண்டும் – என்று அறிவுறுத்தினார். வடகிழக்கிலிருந்து ராணுவத்தை வெளியேற்றுவதன் மூலமே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது ரீட்டா சொன்னதிலிருந்து தெளிவாகிறது.

ஒட்டுமொத்த உலகும் இந்த உண்மையை உணரத் தொடங்கியிருக்கிற நிலையில் எமது தாயக உறவுகள் ராணுவம் அபகரித்த காணிகளுக்காகப் போராடத் தொடங்கியுள்ளனர். தங்கள் காணிகள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிடும் – என்கிற நம்பிக்கையுடன் 8 ஆண்டுகள் காத்திருந்தவர்கள் அவர்கள். இப்போது அவற்றை மீட்க அறவழியில் போராடுகின்றனர். . முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்பிலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் காணி மீட்புப் போராட்டங்கள் உலகின் மனசாட்சியை உலுக்குவதாக இருக்கின்றன.

கேப்பாப்பிலவில் எமது தாயக மக்களுக்குச் சொந்தமான காணிகளைப் பறித்தது – விமானப்படை. ‘கேப்பாப்பிலவு எங்கள் நிலம்’ – என்கிற பதாகைகளுடன் அந்தக் காணிகளை மீட்க ஓராண்டுக்கு முன்பே போராடத் தொடங்கினார்கள் அவர்கள். அதன்பின் ‘ஐ.நா. மூலம் நீதிகிடைக்கும்’ என்று பொறுமை காத்தனர். இன்றுவரை சர்வதேசமும் ஐநாவும் அவர்களது நம்பிக்கையைக் காப்பாற்றவில்லை.

இன்று விமானப்படை முகாமிட்டிருக்கும் தங்கள் நிலத்தின்முன் அமர்ந்து கேப்பாப்பிலவு மக்கள் நடத்துகிற சத்தியாக்கிரகம் சர்வதேசத்துக்கு எதிராக அவர்கள் கொண்டுவந்திருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானம். ‘சுட்டுத் தள்ளுவோம்’ என்று மிரட்டுகிறது விமானப்படை. அவர்கள் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. அச்சம் தவிர்த்து பேராண்மையுடனும் ஓர்மத்துடனும் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களை நகர்த்த முடியவில்லை.

சகோதரி ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் ‘சுட்டுத்தள்ளுவோம்’ என்று இலங்கை மிரட்டுவதை வேடிக்கை பார்த்திருப்பாரா – என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஜெயலலிதா பாதையிலேயே ஆட்சி நடத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் அதிமுக என்ன செய்துகொண்டிருக்கிறது?

தமிழருக்குச் சொந்தமான நிலங்களை இலங்கை உடனடியாகத் திருப்பிக் கொடுக்க அழுத்தம் கொடு – என்று மத்திய அரசைத் தமிழக முதல்வர் வலியுறுத்தவேண்டும். அப்படியொரு கடிதம் எழுதுவதுடன் நின்றுவிடாமல் ‘சொந்த நிலத்துக்காகப் போராடும் தமிழ் உறவுகள் துப்பாக்கிமுனையில் மிரட்டப்படுவதைத் தமிழகம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது’ என்று பகிரங்கமாக இலங்கையை எச்சரிக்க வேண்டும். இந்த இரண்டையும் செய்தால்தான் ஜெ ஆட்சி நீடிக்கிறது என்று அர்த்தம்.

‘கேப்பாப்பிலவிலும் மற்ற பகுதிகளிலும் சொந்தக் காணிகளை மீட்கப் போராடும் எமது தொப்புள்கொடி உறவுகளுக்குத் தமிழகத்தின் தார்மீக ஆதரவு உண்டு’ – என்று தெரிவிக்கும் கடிதம் ஒன்றை வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்குத் தமிழக முதல்வர் அனுப்பிவைப்பதுகூட இந்தத் தருணத்தில் அர்த்தமுள்ள நடவடிக்கையாக அமையும். அந்தக் கடிதத்தை மின்னஞ்சல் வழி விக்னேஸ்வரனுக்கு அனுப்பி வைப்பது மிக மிக எளிதானதுதான் என்றாலும் அந்தக் கடிதம் உணர்த்துகிற செய்தி மிக மிக வலுவானதாக இருக்கும்.

இன உணர்வுள்ள தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்த விஷயத்தில் எமது தாயக மக்களுக்கான ஆதரவைத் தாமதமின்றித் தெரிவிக்க வேண்டும். உடனடியாக இலங்கையைக் கண்டிக்க வேண்டும். விமானப்படை துப்பாக்கிச்சூடு நடத்திய பிறகு கண்டன அறிக்கை கொடுக்கலாம் என்று காத்திருப்பது இரக்கமற்றது.

இப்படியொரு நெருக்கடியான நிலையில் இலங்கைக்குப் போயிருக்கிறார் வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கர். அவர் அங்கிருந்து என்ன செய்தியோடு திரும்பியிருக்கிறார் – என்பதைத் தெரிந்துகொள்கிற கடமையும் உரிமையும் தமிழக அரசுக்கு இருக்கிறது. இதற்காகவே தமிழக எம்.பிஇக்களின் குழு ஒன்றை ஜெய்சங்கரையும் சுஷ்மாவையும் சந்திக்க டெல்லிக்கு அனுப்பலாம். பொன்னாரிடம் சொன்னால் அவரே முன்னின்று அந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யக்கூடும். என்றாலும் அதற்கான முதல் செங்கல்லை எடப்பாடிதான் எடுத்துவைக்கவேண்டும். ஜெனிவாவில் இன்னும் சில தினங்களில்இ இலங்கைப் பிரச்சினை எழுப்பப்பட இருப்பதால் இது மிக மிக அவசரம்.

கேப்பாப்பிலவில் துப்பாக்கிமுனையில் போராடிக் கொண்டிருக்கின்றனர் அப்பாவித் தமிழர்கள். ஜெனிவாவில் போர்க்குற்ற விசாரணையை நீர்த்துப் போகச்செய்ய முயற்சிக்கிறது குற்றவாளி இலங்கை. இந்தநிலையில் ‘இனப்படுகொலைக்கு நீதி கேட்கப் போகிறாயா கடைசி நிமிடம் வரை இழுத்தடித்துக் கடைசி நொடியில் முதுகில் குத்தப் போகிறாயா’ என்று இந்தியாவிடம் நேருக்கு நேர் கேட்க வேண்டியது தமிழக அரசின் கடமை. அந்தக் கடமையை எடப்பாடி நிறைவேற்றப் போகிறாரா இல்லையா?