பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினரால்…  (காணொளி)

277 0

கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாக இன்றும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை இராணுவத்தினர் புகைப்படம் எடுத்ததுடன், அச்சுறுத்தலும் விடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது.

பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்கு முன்பாக நேற்று காலை முதல் பொதுமக்கள் தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்காக, கடந்த ஏழு வருடங்களாக கையகப்படுத்தப்பட்டிருக்கும் தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, கடந்த ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி முதல் 17 குடும்பங்கள் இராணுவ முகாமுக்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

ஏழு நாட்களாக போராட்டம் தொடர்ந்த போதிலும், மக்களின் காணிகளை விடுவிக்க எந்தவொரு தரப்பினரும் முன்வராததை அடுத்து அப்பகுதி மக்கள் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

இதற்கமைய போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு நேரடியாக சென்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் இந்த விடயம் தொடர்பில் பேசியுள்ளதாகவும், இரண்டு வாரங்களுக்குள் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் உறுதியளித்திருந்தார்.

எனினும் இரண்டு வாரங்களுக்கு தமது போராட்டத்தை மக்கள் ஒத்திவைத்திருந்த நிலையில், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியின் பிரகாரம் மூன்று ஏக்கர் காணி மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய 15க்கும் அதிகமான குடும்பங்களுக்கான 10 ஏக்கர் காணி விடுவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எஞ்சிய 10 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி பரவிப்பாஞ்சான் மக்கள் மீண்டும் போராட்டத்தை முன்னெடுத்த நிலையில், போராட்டம் இடம்பெற்ற பகுதிக்குச் சென்ற சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் 03 மாத காலப்பகுதிக்குள் இராணுவத்திடம் உள்ள காணிகள் விடுவிக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.

கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் திகதி, விஜயகலா மகேஸ்வரன் அளித்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், மீண்டும் அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தை நேற்று காலை முதல் ஆரம்பித்துள்ளனர்.