தீவிரவாதி ஹபீஸ் சயீத் மீதான பாகிஸ்தான் அரசின் நடவடிக்கைக்கு இந்தியா வரவேற்பு

250 0

தீவிரவாதி ஹபீஸ் சயீத் மீது தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதை இந்தியா வரவேற்று உள்ளது.

தீவிரவாதி ஹபீஸ் சயீத் மீது தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதை இந்தியா வரவேற்று உள்ளது.

லஷ்கர்-இ-தொய்பா, ஜமாத்-உத்-தவா என்ற பெயர்களில் அமைப்புகளை நிறுவி, தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருபவர் ஹபீஸ் சயீத். மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட இவரை இந்தியா தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் வாழும் இவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்த நாட்டை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் ஹபீஸ் சயீத் மீது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு நடவடிக்கை எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹபீஸ் சயீத் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளியான குவாசி காஷிப் ஆகியோரை தீவிரவாத தடுப்பு சட்டத்தின் 4-வது அட்டவணையின் கீழ் கொண்டு வந்துள்ளது.

இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தீவிரவாத தடுப்பு துறைக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக ஹபீஸ் சயீத் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேர் கடந்த 30-ந்தேதி முதல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

தீவிரவாதி ஹபீஸ் சயீத் மீது எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையை இந்தியா வரவேற்று உள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஹபீஸ் சயீத் ஒரு சர்வதேச தீவிரவாதியும், மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவரும் ஆவார். லஷ்கர்-இ-தொய்பா, ஜமாத்- உத்-தவா மற்றும் அவற்றை சார்ந்த இயக்கங்கள் மூலம் பாகிஸ்தானின் அண்டை நாடுகள் மீது பயங்கரவாத செயல்களை கட்டவிழ்த்து விட்டு வருகிறார்.

சர்வதேச அளவில் அவர் மீதும், அவருடைய இயக்கங்கள் மற்றும் கூட்டாளிகள் மீதும் எடுக்கப்பட்டுள்ள இந்த பயனுள்ள நடவடிக்கை அவர்களை நீதியின் முன் கொண்டு வருவதற்கான முதல் படி ஆகும். இதன் மூலம் தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாத வன்முறை ஆகிய இரட்டை அச்சுறுத்தலை இந்த பிராந்தியத்தில் இருந்து ஒழித்துக்கட்ட முடியும்.இவ்வாறு விகாஸ் ஸ்வரூப் கூறினார்.