சுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அவர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!

380 0

07.02.2005 அன்று வெலிகந்தைப் பகுதியில் சிறிலங்காத் துணைப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட மட்டு. அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் ஆகியோரின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 19.02.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று சப்கவுசன்; மாநிலத்தில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்ட சமவேளையில் சூரியத்தேவனின் வேருகளே மலர்வணக்கப்பாடலைத் தொடர்ந்து கலைஞர்களால கரோக்கே முறையில் எழுச்சிப் பாடல்களும்; வழங்கப்பட்டன.

அரங்கம் நிறைந்து நூற்றுக்கணக்கான சப்கவுசன் மாநில வாழ் தமிழ்மக்கள் கலந்து கொண்ட இவ்வணக்க நிகழ்வின் எழுச்சி நிகழ்வுகளாக எழுச்சிப் பாடல்கள், இளையோர்களின் இன உணர்வு மிக்க எழுச்சி நடனங்கள், பேச்சுக்கள், வில்லுப்பாட்டு, மாவீர வித்துகளின் நினைவுப்பகிர்வுடன், நாடகக் கலைஞர்களால் வழங்கப்பட்ட உறவுக்குக் கை கொடுப்போம் என்ற நாடகமானது மிகவும் உணர்வுபூர்வமாக அமைந்ததுடன் அனைவரினதும் பாராட்டுக்களையும் பெற்றிருந்தது.

அத்துடன் தமிழர் இல்லம் சப்கவுசன் கிளையினால் நடாத்தப்பட்ட கணணி வகுப்புச் செய்முறைத் தேர்வில் தோற்றி சித்திபெற்ற மாணவர்களுக்கான தேர்ச்சிச் சான்றிதழும் வழங்கப்பெற்று மதிப்பளிக்கப்பட்டது.

நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கலுடன், தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் எழுச்சியுடன் நிறைவுபெற்றன.