பாண்டியராஜனை ஆரத்தி எடுத்து வரவேற்ற தொகுதி மக்கள்

217 0

தொகுதி மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து, சசிகலாவுக்கு எதிராக ஓ.பி.எஸ்., அணியில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை ஆவடி தொகுதி மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

ஆவடி சட்டசபை தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மாஃபா பாண்டியராஜன்.

இவர் ஜெயலலிதாவின் ஆட்சியில் பள்ளி கல்வித் துறை மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அ.தி.மு.க., தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி துாக்கினார். சசிகலா குடும்பத்தின் பிடியிலிருந்து கட்சியையும் ஆட்சியையும் மீட்க தனி ஆளாக களமிறங்கி போராடுவேன் என சபதம் ஏற்றார்.

சசிகலாவை எதிர்த்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு 11 எம்.பி.,க்கள், 11 எம்.எல்.ஏ.,க்கள், அ.தி.மு.க., அவை தலைவர் மதுசூதனன், அமைப்பு செயலாளர் பொன்னையன், உட்பட பல மூத்த நிர்வாகிகள் மற்றும் அடிமட்ட தொண்டர்கள் ஆதரவளித்தனர்.

பதவி மற்றும் பணத்திற்காக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் சசிகலா பக்கம் சென்ற போது அமைச்சரவையிலிருந்து முதல் ஆளாக பள்ளி கல்வி துறை அமைச்சராக இருந்த மாஃபா பாண்டியராஜன் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

குறிப்பாக தொகுதி மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக ஓ.பி.எஸ் அணியில் இணைந்ததாக அவர் கூறினார்.

இதையடுத்து சமூக வலைதளங்களில் அவருக்கு பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில்,  அவர் தனது ஆவடி தொகுதிக்கு சென்றிருந்தார்.

அப்போது, தொகுதி மக்கள் பாண்டியராஜனை ஆரத்தி எடுத்து, பூமாலை அணிவித்து, சால்வை போர்த்தி தடபுடலாக வரவேற்றனர்.