கூராய் மற்றும் தென்னியங்குளம் பகுதிகளில் 06 மில்லியனில் நன்னீர் மீன்பிடி அபிவிருத்திகள்

247 0
வடக்கு மாகாணத்தின் நன்னீர் மீன்பிடியாளர்களை வாழ்வாதாரத்தில் உயர்த்தி அவர்களது எதிர்காலத்தை மேம்படுத்தும் பிரதான நோக்கில் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது திட்டத்திற்கு அமைவாக 2017 ஆம் ஆண்டின் மீன்பிடி அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட  மாகாண அபிவிருத்தி நிதியின்கீழ் மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கூராய் கிராமத்தின் நன்னீர் மீன்பிடிசங்கத்திற்கும், முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தென்னியங்குளம் நன்னீர் மீன்பிடி சங்கத்தினருக்குமாக மீன்சந்தைகள் அமைப்பதற்கு இரண்டு கிராமங்களுக்கும் தலா 03 மில்லியன் வீதம் 06 மில்லியன் நிதி  ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் மன்னார் கூராய் கிராமத்திற்கு 16/02/2017 வியாழன் மாலை 1:30 மணியளவில் நேரடி விஜயம் மேற்கொண்ட வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் குறித்த கிராமத்தின் மக்களை அவர்களது சனசமூக நிலையத்தில் சந்தித்து கலந்துரையாடினார் அதனைத்தொடர்ந்து குறித்த மீன்சந்தை அமைக்க மக்களது கருத்துடன் பொருத்தமான இடத்தை தெரிவு செய்யும் வகையில் கூராய் குளத்தையும் அதனை அண்டிய பகுதிகளையும் பார்வையிட்டனர். குறிப்பாக இச் சந்திப்பில் மன்னார் மாவட்ட நன்னீர்மீன்பிடி மேற்பார்வை உத்தியோகத்தர் எஸ்.மைக்கல் கொலின் அவர்களும், திட்டத்தை நடைமுறைப்படுத்தும் மன்னார் மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் எஸ்.ரகுநாதன் அவர்களும் திணைக்கள தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஆகியோர் இணைந்த குழுவினரே அங்கு சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அங்கு அமைச்சர் மக்களுடன் உரையாடுகையில் அவர்கள் தமது வீதி தொடர்பாகவுள்ள பாரிய சிரமத்தை அமைச்சருக்கு தெளிவுபடுத்தினர்,  அச்சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு பதிலளித்த அமைச்சர், வீதிக்கான வேலைகள் ஐ ரோட் திட்டத்தினூடாக எதிர்வரும் சில மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்ததோடு, தம்முடைய அமைச்சின் ஊடாக கடந்த ஆண்டு குறிக்கப்பட்ட குளத்திற்கு 75000 மீன்குஞ்சுகள் மற்றும் 55000 இறால்குஞ்சுகள் என்பன வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், அதே போல கடந்த 2015 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் 06 குல்லாக்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும், முல்லைத்தீவு தென்னியங்குளத்திற்கும் 75000 மீன்குஞ்சுகளும், 02 குல்லாக்களும் வழங்கியுள்ள நிலையில் தொடர்ந்து மீன்பிடியாளர்ளை ஊக்குவிக்கும் செயல்திட்டமாக இரண்டு கிராமங்களுக்கும் தலா 03 மில்லியன் பெறுமதியான மீன்சந்தைகளும்  அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.