யானைகளின் தொல்லையால் நெடுங்கேணியில் 4 மணியுடன் மூடப்படும் வைத்தியசாலை

230 0
 யானைகளின் தொல்லையால் நெடுங்கேணி வைத்தியசாலையை இயக்குவதில் பெரும் நெருக்கடியும் அச்சமும் ஏற்பட்டுள்ளதால் உடன் நடவடிக்கை எடுக்காத சந்தர்ப்பத்தினில் உயிரிழப்புக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதனால் மாலை 4 மணியுடன் வைத்தியசாலை மூடப்படவுள்ளதாக எழுத்தில் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டம் நெடுங்கேணிப் பகுதியில் தினமும் அதிகரிக்கும் யானைகளின் ஊடுருவல் காரணமாக இப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் , தங்குமிடம் என்பன பாதிப்படைந்திருந்தன. இருந்தபோதிலும் இது தொடர்பினில் அப் பகுதி மக்கள் உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றபோதும் எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.
இந்த நிலையில் தற்போது காட்டு யானைகள் நெடுங்கேணி வைத்தயசாலைக்குள் புகும் சம்பவங்களும் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்ககாட்டப்படுகின்றது. நேற்றைய தினம் வைத்தியசாலைக்குள் புகுந்த யானை வைத்தியர் விடுதிக்குள் நுழைய முற்பட்டமையினால் வைத்தியர் ஓடி உயிர் தப்பியுள்ளார்.
இது தொடர்பில் நெடுங்கேணி வைத்தியரை தொடர்பு கொண்டு கேட்டபோது ,
எமது வைத்தியசாலைக்குள் இதற்கு முன்பும் பல தடவைகள் யானை உட்புகுந்த சம்பவங்கள் உண்டு அது தொடர்பில் நாம் பிரதேச செயலாளர் , வனவளத் திணைக்களம் , பொலிசார் உட்பட சகல தரப்பிற்கும் தெரியப்படுத்தினோம். இருப்பினும் இதுவரையில் எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
தற்போது யானைகள் வைத்தியசாலை வளாகத்திற்குள் மட்டுமன்றி கட்டிடங்களுக்குள் நுழையும் தருவாயில் வருகின்றன.்இதன் காரணமாக இரவில் தங்கி நிற்கவே அச்சமாகவுள்ளது. அத்துடன் வைத்தியசாலை வாகனங்கள் உட்பட வளாகத்தில் வைத்திருக்கும் சமயத்தில் அசம்பாவிதங்கள் நிகழ்ந்திடுமோ என்ற ஏக்கம் ஒரு பக்கம் உள்ளது.
இவை அனைத்தையும் தாண்டி இரவில் நோயாளர் விடுதியில் இருப்பின் இயங்க முடியாத நோயாளியை காப்பாற்றுவதா அல்லது வைத்தியர் , ஊழியர் தனது உயிரைப் பாதுகாப்பதா என்ற திரிசங்கு நிலமை வேறு இங்கு உள்ளது. இதன் காரணத்தினால் இந்த யானை விடயத்திற்கு தீர்வு வழங்கும் வரையில் மாலை 4 மணிக்கு பிற்பாடு வைத்தியசாலையை இயக்க முடியாது . என எழுத்தில் பிரதேச செயலாகம் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றிற்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. என்றார்.
குறித்த கடிதம் வனஜீவராசித் திணைக்களம் , சுகாதாரத் திணைக்களம் போன்றவற்றிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த வைத்தியசாலையில் வைத்தியர்கள் தாதியர்கள் சாரதி ஆகியோர் இரவுக் கடமையாற்றுவதோடு விடுதியில் நோயாளர்களும் தங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.