தமிழீழ விடுதலை வானில் கலங்கரை விளக்கமாக நம்பிக்கை ஒளியேற்றியிருக்கும் கேப்பாபிலவுப் போராட்டம்! – இரா.மயூதரன்!

347 0

பரம்பரை பரம்பரையாக எமது பூர்வீக நிலத்தில் வாழ்ந்துவந்த எம்மை எமது சொந்த நிலத்தில் இருந்து விரட்டியடித்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக அலையவிடும் கொடுமை முடிவின்றித் தொடர்ந்துவருவதன் அண்மித்த சாட்சியாகவும் நல்லாட்சி அரசெனும் சவப்பெட்டி மீதறையும் கடைசி ஆணியாகவும் கேப்பாபிலவு மக்களின் போராட்டம் அமைந்துள்ளது.

சிறிலங்காவின் ஆட்சிபீடமேறும் அனைவரும் அடிப்படையில் தமிழர் விரோத நிலைப்பாட்டில் ஊறித்திழைத்தவர்களாக இருப்பதே இனப்பிரச்சினையின் நீட்சிக்கு காரணமாகும். தற்போதைய நல்லாட்சியின் பெயரிலான தேசிய அரசாங்கத்தின் மூலவர்களாகிய ரணில்-மைத்திரி-சந்திரிக்கா ஆகிய மூவரும் மனித மிருகம் ராசபக்சேவிற்கு சளைத்தவர்கள் இல்லை என்பதன் சூட்சுமமும் இதுவேதான்.

எழுபது ஆண்டுகால தமிழின அழிப்பு வரலாற்றின் இரத்த சரித்திரத்தில் குறிப்பிடத்தக்க வகிபாகத்தினை தம்மகத்தே தக்கவைத்திருக்கும் இம்மும் மூர்த்திகளின் ஆட்சியில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வினைப் பெற்றுவிடலாம் என்று கனவிலும் பிதற்றிவரும் சம்பந்தன்-சுமந்திரன் போன்றோரின் பொய்பிரச்சாரங்களை தோலுரித்து தொங்கவிட்டுள்ளது கேப்பாபிலவு மக்களின் போராட்டம்.

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் பின்னரான கடந்த எட்டு ஆண்டுகளில் சிங்கள தேசத்தின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தவிர்த்து வேறு எந்த காட்சி மாற்றமும் ஏற்படவில்லை என்பதுடன் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் சிங்கள சிறிலங்காவின் அரசியலமைப்பிற்குட்பட்டு நிறைவேற்றப்படப்போவதில்லை என்பதையும் தெட்டத்தெளிவாக்கியுள்ளது.

இனப்படுகொலைக் குற்றத்தில் இருந்து சிங்களத் தரப்பு தம்மை தற்காத்துக் கொள்வதற்கான முன்னெடுப்புகளின் முத்தாய்ப்பாகவே ஆட்சி மாற்றம் நிகழ்த்தப்பட்டது என்பதனை நிரூபிப்பதாகவே காட்சிகள் கடந்து செல்கிறது. அனைத்துலக நாடுகளின் சுயநலன் சார் நிலைப்பாட்டை சாதகமாக்கி ஐநா மன்றத்தில் தம்மை பிணையெடுக்கவே சிங்களத் தரப்பு மும்முரம் காட்டிவருகின்றது. அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் துணைபோவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும்.

இந்நிலைப்பாட்டினை நன்குணர்ந்து கொண்டதன் வெளிப்பாடாகவே தாயகத்தில் நடைபெற்றுவரும் வெகுசனப் போராட்டங்கள் அமைந்துள்ளது. வித்தியா படுகொலைக்கு நீதிகேட்டு நடத்தப்பட்ட போராட்டம் முதற்கொண்டு தற்போதைய கேப்பாபிலவு நில மீட்புப் போராட்டம் வரை அதன் வெளிப்பாடேயாகும்.

சிறிலங்கா அரசு மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதான நம்பிக்கையீனமே மாற்று அரசியல் தலைமையின் கீழ் மக்களை ஒன்றிணைத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடிபணிவு அரசியலின் வெளிப்பாடாக தாயக அரசியல் வெளியில் ஏற்பட்ட வெற்றிடத்தில் உருவாக்கப்பட்ட ‘தமிழ் மக்கள் பேரவை’ தாயக மக்களின் ஏகோபித்த ஆதரவினைப் பெற்றுவருவதன் மூலம் இது நிரூபிக்கப்பட்டு வருகிறது.

அரசியல் பிரவேசமேதுமற்ற வளர் நிலையில் நின்று தமிழ் மக்கள் பேரவையினால் அழைப்புவிடுக்கப்பட்டிருந்த ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணியில் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் உணர்வெழுச்சியுடன் பங்கேற்று தமது அரசியல் அபிலாசைகளை யாழ் முற்றவெளியில் முரசறைந்திருந்தார்கள் என்றால் மக்களின் உணர்வுகளுக்கு சமாந்தரமாக தமிழ் மக்கள் பேரவையின் பயணம் அமைந்திருப்பதே காரணமாகும்.

தொடர்ந்து கடந்த 10 ஆம் திகதி மட்டக்களப்பில் நடத்தப்பட்டிருந்த ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணியில் பத்தாயிரத்திற்கும் அதிகமான தாயக மக்கள் அணிவகுத்து இணைந்த வடக்கு-கிழக்கே தமிழர்களின் தாயகம் என்பதை இடித்துரைத்துள்ளார்கள். தமிழர் தாயகத்தின் அத்திவாரமாக வடக்கு-கிழக்கு அமைந்துள்ள நிலையில் நிர்வாக ரீதியில் வடக்கு, கிழக்கு என இரு மாகாணங்களாக்கி அதனடிப்படையில் நிரந்தரமாகவே கூறுபோடும் சிங்களத்தின் நாசகரத் திட்டத்திற்கு விழுந்த சம்மட்டி அடியாகவே ‘மட்டு எழுக தமிழ்’ எழுதல் அமைந்துள்ளது.

அடிபணிவு அரசியலின் பெயரால் இணக்க அரசியல் செய்துவரும் கூட்டமைப்பினர் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்குள் இனத்தின் இறமையினை அடமானம் வைத்துவிட்ட நிலையில் எங்களது தன்னுரிமையினை நாங்களே போராடிப் பெற்றுக்கொள்கின்றோம் என்ற தாயக மக்களின் தீர்க்கமான நிலைப்பாட்டின் வெளிப்பாடுகளே ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணியின் அணிசேர்க்கையும் தன்னெழுச்சிப் போராட்டங்களும் ஆகும்.

சிறிலங்கா அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் மறுக்கப்பட்டு வரும் நீதியினை பெறுவதற்குமாக தமிழர் தாயகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றுவந்த போராட்டங்களின் நீட்சியாக யாரும் எதிர்பாராத வகையில் நவம்பர்-27 எழுச்சி அமைந்திருந்தது. மண்ணுறங்கும் மாவீரத்தை போற்றி வணங்கும் நிகழ்வாக தாயகத்தில் உள்ள காவிய நாயகர்கள் துயில்கொள்ளும் மாவீரர் துயிலுமில்லங்கள் துரிதகதியில் சீரமைக்கப்பட்டு இளைஞர்கள் முன்நின்று மாவீரர் நாளை நடத்தியிருந்தமை எதிர்பாராத திருப்பமாகும்.

கடந்த ஏழு ஆண்டுகளில் நவம்பர்-27 ஆனது யாழ் பல்கலைக் கழகத்தில் தடைகளையும் நெருக்கடிகளையும் மீறி உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டதுடன் முகம் காட்டாத மர்ம நிகழ்வுகளாக புலிக்கொடி பறக்க விடுதல்களும் விளக்கேற்றல்களுமாக நடைபெற்றுவந்த நிலையில் 2009 மே-18 இற்கு முன்னரான காலச் சூழமைவை கண்முன்னே விரியச்செய்யும் வகையிலான எழுச்சி பூர்வமான மாவீரர் தினக்கொண்டாட்டங்கள் அதுவும் இனவழிப்பு இராணுவத்தின் கொலை வலையத்திற்குள்ளாக இருந்துகொண்டே நடத்தியிருப்பது வரலாற்றுத் திருப்பு முனையாகவே அமைந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் பணியில் தமது உடல்-பொருள்-ஆவி அனைத்தையும் உவந்தளித்து தியாக வேள்வி நடத்திய வேளையில் மதிப்பு மரியாதையுடன் கொண்டாடப்பட்டிருந்த போராளிகள் ஆயுத மௌனிப்பின் பின்னரான சூழமைவில் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கப்பட்டு ‘முன்நாள் போராளிகள்’ என்ற கடைநிலை சமூகப் பிரிவாக்கப்பட்டிருந்த வேதனைமிகு தருணத்தில்தான் தமது சக தோழர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வரலாற்றுக் கடமையினை முன்நின்று நடத்தி வரலாற்றை மாற்றியெழுதியுள்ளார்கள்.

தேர்தலில் வாக்குகளை கபளீகரம் செய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் அள்ளிவீசப்பட்டிருந்த வாக்குறுதிகள் காற்றோடு கரைந்து போயிருந்த நிலையில் அதனை செயலில் காட்டி ‘சொல்லுக்கு முன் செயல்’ என்ற தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்து வருகிறார்கள் முன்நாள் போராளிகள். கூடிக் கலையும் வழக்கமான அரசியல் சடங்காக முடித்துவிடாது தொடர்ந்தும் அதே தடத்தில் பயணிப்பதன் வெளிப்பாடாகவே கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மேற்கொள்ளப்பட்ட பொதுக்கல்லறை அமைக்கும் முயற்சி அமைந்துள்ளது.

கார்த்திகை வீரர்களுக்கு வணக்கம் செலுத்தி தலைநிமிர்ந்து நின்ற மக்களின் உணர்வுகளை தமது அரசியல் சுயலாபத்திற்காக மடைமாற்றும் கைங்கரியங்களில் வெட்கமே இல்லாமல் கூட்டமைப்பினர் ஈடுபட்டமை அருவருப்பான நிகழவாகும். தமிழ்நாட்டு அரசியலுக்கு இணையாகவே தன்னெழுச்சியான மக்களின் போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்யும் இழிசெயலையும் இவர்கள் செய்துவருவதுடன் குட்டையைக் குழப்பி ஆதாயம் தேடுவதும் கேடுகெட்ட செயலாகும்.

நூற்றாண்டு கடந்த தமிழர்களின் பூர்வீக வாழ்விடத்தை சிறிலங்கா விமானப்படை முகாமிற்காக வல்வளைப்பு செய்துகொண்டு அங்கு வாழ்ந்துவந்த மக்களை அகதிகளாக விரட்டியடிக்கப்பட்டதை கண்டித்து முல்லைத் தீவு மாவட்டம் கேப்பாபிலவு மக்கள் மேற்கொண்டுவரும் தொடர் போராட்டம் இராணுவத்தின் பிடியில் இருக்கும் எழுபதாயிரத்திற்கு அதிகமான ஏக்கர் நிலங்களை மீட்கும் மக்கள் போராட்டமாக விரிவடைந்து வருகிறது.

தமது நிலங்களை மீட்கும்வரை ஓயோம் என்ற திடமான உறுதியுடன் கடந்த 31 ஆம் திகதி ஆரம்பித்த போராட்டம் 17 ஆவது நாளைக் கடந்து உலகத் தமிழர் பெருவெளியில் பயணித்து வருகிறது. நீடித்த மக்கள் போராட்டமாகத் தொடர்ந்துவரும் இப்போராட்டத்தில் நடந்தேறிவரும் பற்பல நிகழ்வுகள் அதன் மகத்துவத்தை வெளிபடுத்துகிறது.

கைக் குழந்தைகள் முதற்கொண்டு வயோதிகர்கள் வரை சொந்த நிலத்தில் குடியேறும்வரையான போராட்டத்தில் வெய்யில், மழை, பனி என்பவற்றை பொருட்படுத்தாது வீதியையே வாழ்விடமாக்கியுள்ளார்கள். தொடர் போராட்டத்தால் சிறுவர்களின் கல்வி பாதிக்கப்படுமென்பதால் சில ஆசிரியர்கள் போராட்டம் நடக்குமிடத்திற்குச் சென்றே கல்வியை கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இதுவொரு அதிசயம் தான். அத்தோடு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முதியவர் சுகவீனமுற்றதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதும் போராட்ட களம் திரும்பி தமது உறவுகளுடன் இணைந்து போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.

சொந்த நிலத்தின் மீதான உரிமையை மீட்பதற்காக கேப்பாபிலவு மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. எதிர்வரும் நாட்களில் இனவழிப்பு இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் தமது சொந்த நிலங்களை பறிகொடுத்த ஏனைய பிரதேச மக்களும் போராட்டதில் குதிக்க உள்ளனர்.

இதேவேளை புலம்பெயர் தேசங்களிலும் கேப்பாபிலவு மக்களுக்கு ஆதரவான போராட்டங்கள் நடந்தவண்ணமுள்ளது. தமிழர்களைப் பொறுத்தவரை விட்டுக்கொடுப்பு என்ற பேச்சிற்கே இடமில்லை. தனது இராணுவ மேலாதிக்கத்தினை எமது மண்ணில் நிலை நிறுத்துவதற்காக எம்மை அகதிகளாக்கிவிட்டு எமது சொந்த நிலத்தை பறிப்பது எந்த விதத்தில் நியாயம்…?

ஆனால் சிங்கள அரச தரப்போ நியாயத்தை வழங்குவதற்கு பதில் தமிழ் அரசியல் பிரமுகர்களை தூதனுப்பி பொய் வாக்குறுதிகளை வழங்கி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவே குறுக்கு வழியில் முயற்சிக்கின்றது. உலகத் தமிழர் பெருவெளிக்கு நகர்த்தப்பட்டுள்ள நிலையில் ஆக்கிரமித்துள்ள நிலங்களை விடுவித்து போராட்டத்தை வெற்றியாக்க சிங்கள அரசு முன்வரப்போவதில்லை. ஏனெனில், இதனை முன்மாதிரியாகக் கொண்டு ஏனைய விடயங்களை முன்னிறுத்தி நாம் போராட்டத்தை பல்வேறு முனைகளில் ஆரம்பித்துவிடுவோம் என்ற அச்சம்தான் காரணம்.

இவைகளை உற்று நோக்கும் போது தமிழீழ விடுதலை வானில் நம்பிக்கை ஒளியேற்றும் கலங்கரை விளக்கமாக கேப்பாபிலவு போராட்டம் உருவெடுத்துள்ளது. இப்போராட்டம் தோற்கில் தமிழர்கள் தரப்பில் இனியொரு போராட்டம் கருவாகும் சூழமைவு பட்டுப்போகும். ஆகவே அனைவரும் ஒன்றுபட்டு போராடுவது காலத்தின் கட்டாயமாகும்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிபலிக்காத மென்போக்கு சாத்வீக வழிமுறையிலான அரசியல் போக்கின் மீதான நம்பிக்கையீனமே மூன்று தசாப்தங்களுக்கு மேலாகத் தொடர்ந்து வந்திருந்த அரசியல் போராட்டத்தை விடுத்து புரட்சிகர வழிமுறைக்கு இளைய தலைமுறையை உந்தித்தள்ளியது.

அவ்வாறானதொரு கையறு நிலைக்கே, இன்றைய இளைய தலைமுறையினரையும் தமிழ் அரசியல் தலைமைகளின் அடிபணிவு அரசியல் தள்ளியுள்ளது. நடந்துவரும் நிகழ்வுகள் அதனையே கட்டியம்கூறுகின்றது.

‘அரசியல் என்பது மக்களுக்குச் சேவை புரியும் பணி; மக்களின் நல்வாழ்வுக்கு ஆற்றப்படும் தொண்டு.’ என்ற தேசியத் தலைவரின் சிந்தனைக்கு நேரெதிர் பாதையில் பயனிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இனியும் நம்பிநின்றால் மானத்தை மறைத்துக் கொண்டிருக்கும் கோவணத்தையும் உருவி அம்மணமாக்கிவிடுவார்கள்.

இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள் என்ற தேசியத் தலைவரின் கூற்றின் வழித்தடத்தில் உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபடுவது ஒன்றே எம்மை நாமே காத்துக்கொள்ள் ஒரே வழியாகும்.

‘தமிழரின் தாகம் தமிழீத் தாயகம்.’

இரா.மயூதரன்.
(mythrn@yahoo.com)