முறக்கொட்டாஞ்சேனையில் தீ விபத்தினால் வீட்டை இழந்தவர்களுக்கு உதவித்திட்டம்

252 0

முறக்கொட்டாஞ்சேனையில் அண்மையில் தீக்கிரையான வீட்டின் உரிமையாளர்களுக்கு துணிகளை கொள்வனவு செய்வதற்காக ஒரு தொகை நிதியுதவியும், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள பாடசாலை உபகரணங்களும் முனைப்பு நிறுவனத்தினால் இன்று  வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

முனைப்பின் தலைவர் மா.சசிகுமார் செயலாளர் சி.குகநாதன், பொருளாளர் அ.தயானந்தரவி ஆகியோர் நேரடியாக சென்று உதவியினை வழங்கியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது

அண்மையில் வீட்டு வளவினை துப்பரவு செய்து குப்பைகளை எரிக்கும் போது ஓலையினால் வேயப்பட்ட வீடொன்று தீக்கிரையாகியுள்ளது.

தீயினை கட்டுப்படுத்த முயற்சிகள் எடுத்த போதும் தீயினை கட்டுப்படுத்த முடியாமல் வீடு உடமைகள் அனைத்தும் எரிந்து போயுள்ளன.

இந்நிலையில் இலங்கையில் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இயங்கிவரும் முனைப்பு நிறுவனம் குறித்த உதவி திட்டத்தினை இன்று வழங்கியுள்ளது.

இதேவேளை இந்நிறுவனம் பல்வேறு சமுக மேம்பாட்டு நடவடிக்கைகளை வழங்கிவருவதுடன், கடந்த வருடம் முதல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இறக்கும் ஏழைகளின் சடலங்களை வீட்டுக்கு கொண்டு செல்வதற்கான உதவிகளையும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.