தமிழர்களின் தன்னுரிமைப் பறிப்பின் குறியீடே பெப்ரவரி-4!குறியீடு இணையம்!

619 0

வட-கிழக்கு உள்ளடங்கிய வரலாற்று வழிவந்த மரபுவழித் தாயகத்தில் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனக் கட்டமைப்பாக தம் சார்ந்த அரசர்களால் ஆளப்பட்டுவந்த நிலையில்தான் இலங்கைத் தீவு அந்நிய படையெடுப்பிற்குள்ளானது.

போர்த்துக்கேயர், ஒல்லாந்தரைத் தொடர்ந்து இலங்கைத் தீவை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருந்த பிரித்தானியர்கள் அவர்களின் நிர்வாக வசதிக்காக மொழி, இனம், சமயம், பழக்க வழக்கங்கள் மற்றும் பண்பாட்டு ரீதியில் முற்றாக வேறு வேறான தனித்துவத்தைக் கொண்டிருந்த இரு தேசிய இனங்களையும் ஒற்றையாட்சி அமைப்பிற்குள் ஒன்று சேர்த்திருந்தார்கள்.

பிரித்தானியர்களின் ஒற்றையாட்சிக்குள் இருந்த போதிலும் தமிழ் மக்கள் தமது அறிவாற்றல் மற்றும் கல்வித் தகுதி மூலம் அரச நிர்வாகத்தில் மேலாதிக்கம் செலுத்தி வந்திருந்த நிலையில் 1948 ஆம் ஆண்டு இன்றைய நாளில் (பெப்-04) ஆட்சி, அதிகாரம் கைமாற்றலானதோடு நிலமை தலைகீழ் மாறுதலுக்குள்ளாகியது.

தனித்தான ஆட்சி அதிகாரத்தின் கீழ் இருந்த தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தால் புறக்கணிக்கப்பட்டே ஒற்றையாட்சி திணிப்பும் சிங்களர்களிடம் ஆட்சி அதிகாரக் கையளிப்பும் நிகழ்ந்தது.

சுதந்திரத்தின் பெயரால் இலங்கைத் தீவின் ஆட்சி, அதிகாரம் சிங்களர்களிடம் கையளிக்கப்பட்டவுடன் தமிழர்கள் மீதான அடக்குமுறைகள் பல்வேறு வழிமுறைகளில் விசுவரூபம் எடுத்திருந்தது. சிங்கள பௌத்த பேரினவாத மேலாதிக்கத்தின் வெளிப்பாடாக தமிழர்கள் மீது அரச வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது.

தமிழ் மக்களின் திரட்சியை விரும்பாத சிங்களம், குடியுரிமைச் சட்டத்தின் மூலம் பத்து லட்சம் மலையகத் தமிழர்களை ஒரே நாளில் நாடற்றவர்களாக்கியது. இதனால் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு நிலவுரிமையும் பறிக்கப்பட்டு எதுமற்றவர்களாக்கி மூலையில் முடக்கிப்போட்டது சிங்கள பௌத்த பேரினவாதம்.

பெரும்பான்மையாக தமிழ் மக்கள் வாழ்ந்த இடங்களில் அரசின் நேரடி முன் முயற்சியின் மூலம் சிங்கள மக்கள் வலுகட்டாயமாக குடியேற்றம் செய்யப்பட்டார்கள். சடுதியான சிங்கள மக்களின் உள் நுழைப்பால் குடிப்பரம்பலில் பாரிய மாறுதல் ஏற்படுத்தப்பட்டது.

அதுவரை பெரும்பான்மையாக இருந்த தமிழ் மக்கள் தமது பூர்வீக மண்ணில், அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள் மூலம் சிறுபான்மையினாராக்கப்பட்டார்கள். இவ்வாறு எல்லையோரக் கிராமங்களில் இருந்து ஆரம்பித்த சிங்களக் குடியேற்றம் முக்கிய நகரங்களுக்கும் விரிவாக்கம் கண்டது. இன்று ஆக்கிரமிப்பு இராணுவத்தின் பெயரால் உயர்பாதுகாப்பு வலையம் என்ற போர்வையில் தமிழர்களின் பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் வல்வளைப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழர் திரட்சியை தடுத்து பாரம்பரிய நிலத்தை கபளீகரம் செய்த சிங்கள பௌத்த பேரினவாதம் உயிருக்கு நிகரான மொழியில் கைவைத்தது. ‘சிங்களம் மட்டும் சட்டம்’ மூலம் 1956 இல் பெரும் அரச ஒடுக்குமுறை தமிழர்கள் மீது திணிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1970 இல் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வித் தரப்படுத்தல் மூலம் தமிழர்களுக்கு உயர் கல்வி வாய்ப்பு திட்டமிட்டே தடுக்கப்பட்டது.

ஆட்சி, அதிகார, நிர்வாக ரீதியில் மேற்கொள்ளப்பட்டுவந்த அடக்கு முறைகள் வன்முறை வடிவமெடுத்தன. 1956, 1958, 1961, 1974, 1979, 1981 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் இனக் கலவரத்தின் பெயரில் இன அழிப்பு நடவடிக்கை கட்டவிழ்த்துவிடப்பட்டது. இதன் போது ஆயிரக்கணக்கில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் கணக்கிலடங்காத சொத்துகளும் அழித்தொழிக்கப்பட்டது.

சிங்களத்தின் குரூரமான இச்செயற்பாட்டின் நீட்சி தமிழர்களின் கைகளில் ஆயுதங்களை திணித்தது. அகிம்சை வழியில் உரிமை கேட்டுப் போராடிய போது அடி உதை மூலம் பதிலளித்த சிங்களத் திமிரை அடக்குவதற்கு வேறு வழியின்றி தூக்கப்பட்ட ஆயுதமே தமிழர்களின் உயிர்காக்கும் வேலியாகியது.

சுதந்திரத்தின் பெயரால் நடைபெற்ற ஆட்சி, அதிகார கையளிப்பின் மூலம் பெற்றுக்கொண்ட கட்டுக்கடங்காத அரச அதிகாரங்களை தமிழர்களை அழித்தொழித்து அடிமைப்படுத்துவதற்கே சிங்கள அரசு முழுக்க முழுக்க பயன்படுத்தி வருகிறது.

சிறிலங்கா அரசியலமைப்பு சட்டத்தின் ஒவ்வோர் வரிகளும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் தமிழர் விரோத நிலைப்பாட்டின் வெளிப்பாடாகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டிருந்த அரசியலமைப்பில் சிங்கள அரசுகளால் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் கூட அந்நிலையினை மேலும் வலுப்படுத்துவதாகவே அமைந்திருந்தது.

இவ்வாறே, 1972, 1978 ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்டிருந்த இரு வேறு அரசியலமைப்புகள் நிறைவேற்றப்பட்ட போதிலும் அவற்றுக்கு தமிழர் தரப்பின் ஆதரவு கிடைத்திருக்கவில்லை. இரு அரசியலமைப்புகளுமே இனப்பிரச்சினை தொடர்பான தீர்வை எட்டும் முயற்சிகளுக்கு இடமளிக்காது, அதை மேலும் சிக்கலாக்கும் விதிகளையே கொண்டிருந்தன. அதனாலேயே தமிழ் மக்களால் அவை முற்றிலும் நிராகரிக்கப்பட்டது.

1983 ஜூலை 23 இன அழிப்பு கொடூரத்தின் பின்னர் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தீவிரம்பெற்ற புறச்சூழலில் அரசியலமைப்பின் 6 ஆவது சரத்தில் கொண்டுவரப்பட்டிருந்த திருத்தத்தின் மூலம் பிரிவினைக்கு ஆதரவான அரசியல் செயற்பாடுகள் சட்டத்திற்கு புறப்பானதாக வரையறுக்கப்பட்டது. இத்திருத்தம் இருக்கும்வரை தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது.

ஆக மொத்தத்தில் நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்பு சிங்கள பௌத்த பேரினவாத பேயாட்சியின் கவசமாகவே திகழ்ந்துவருகிறது. அதற்கு கீழாக தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு என்றும் தீர்வு கிட்டப்போவதில்லை. அதனை நன்கறிந்தே தமிழர்கள் சிறிலங்காவின் அரசியலமைப்பை என்றும் ஏற்றுக்கொண்டதில்லை.

இணக்க அரசியலின் பெயரால் அடிபணிவு அரசியல் செய்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளினதும், சில புலம்பெயர் செயற்பாட்டாளர்களினதும் பங்கேற்புடன் கொண்டுவரப்பட உள்ள அரசியலமைப்பு திருத்தம் கூட வரலாற்றின் வழியே தமிழர்களின் உரிமைகளைப் பறிப்பதாகவே இருக்கப்போகின்றது.

வார்த்தை அலங்காரங்களுக்குள்ளே விசமம் செய்யும் தந்திரத்தில் பெயர்போன சிங்களத் தரப்பின் ஏமாற்று நாடகத்தை தெரிந்து கொண்டே மக்களை முட்டாள்களாக்கும் தேசத்துரோக செயற்பாட்டில் அடிபணிவு அரசியல் தலைமைகளும் செயற்பாட்டாளர்களும் ஈடுபட்டுவருகிறார்கள்.

அன்பான தாயக மக்களே! இந்த கயமைத் தனத்தை நன்குணர்ந்து எமது அரசியல் அபிலாசைகளை குழிதோண்டிப் புதைக்கும் சதிச்செயலுக்கு துணைபோக வேண்டாமென அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.

‘பெப்-4’ என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரை கறுப்பு நாளாகும். எமது தன்னுரிமைப் பறிப்பு நடைபெற்ற நாளாகும். எமது முந்தைத் தமிழ் மன்னர்களின் தலைவணங்கா வீரத்தின் மூலம் நிலைநாட்டப்பட்ட அரசாட்சியின் கீழ் நல் வாழ்வு வாழ்ந்து வந்த எம்மை ஆண்டு அடிமைப்படுத்திய பிரித்தானிய ஏகாதிபத்தியம் சிங்கள பௌத்த பேரினவாத பேய்களிகடம் அடிமைப்படுத்திய கறுப்பு நாளே ‘பெப்-4’.

அடக்குமுறைகளின் வெடிப்பே விடுதலைப் போராட்டம். ஏலவே தரை பிளந்து தலை தூக்கி கிளை பரப்பி பெரு விருட்சமாகி உலகத் தமிழர்களின் மனமெங்கும் வியாபித்திருக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டம் முடிந்துவிடவில்லை.

களச்சூழமைவிற்கேற்ப காரணத்தோடு மௌனிக்கப்பட்டுள்ள போராட்டம் தக்க தருணத்தில் உயிர்பெறும். அதுவரை சலுகைகளுக்கு விலைபோகாது, வெற்று வாக்குறுதிகளுக்கு மயங்காது இலட்சிய உறுதியோடு ‘தாயகம்-தேசியம்-தன்னாட்சி உரிமை’ ஆகிய மூலாதாரக் கோட்பாட்டினை வலுப்படுத்தும் விதமாக தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெறும் போராட்டங்களில் பங்கேற்று பலம் சேர்க்குமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம்.

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.’

ஆசிரியர்.
குறியீடு இணையத்தளம்.