நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பான கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கைக்கு என்ன நடக்கப்போகின்றது?

310 0

திருமதி மனோரி முத்வெட்டுகம தலைமயில் உருவாக்கப்பட்ட போர்க் குற்றம் தொடர்பான நல்லிணக்க பொறிமுறைகள் கலந்தாலோசனைச் செயலணி தனது அறிக்கையை கடந்த 3 ஆம் திகதி சமர்ப்பித்திருந்தது ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதியோ, பிரதமரோ கலந்து கொள்ளவில்லை, தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரணதுங்காவிடமே அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீரவும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்;ப்பிப்பதற்கு வசதியான நேரத்தை ஒதுக்குவதற்காகவே சமர்ப்பிப்பது காலதாமதப்படுத்தப்பட்டது. எனினும் ஜனாதிபதியோ, பிரதமரோ கலந்து கொள்ளவில்லை. ஜனாதிபதி சுகவீனமுற்றிருப்பதால் கலந்து கொள்ளவில்லையென இறுதி நேரத்திலேயே கூறப்பட்டது. பிரதமர் என்ன காரணத்திற்காக கலந்து கொள்ளவில்லைஎன இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இருவரும் சர்ச்சைகளை தவிர்ப்பதற்காக வேண்டுமென்றே சமூகமளிக்கவில்லை என்றே கூறப்படுகின்றது.

2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இச் செயலணி அமைக்கப்பட்டது. இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சரத்முத்வெட்டுக்கமவின் துணைவியார் மனோரி முத்வெட்டுக்கம தலைமையில் இச் செயலணி அமைக்கப்பட்டது. சிவில் சமூகத்தைச் சேர்ந்த 11 சுயாதீனமான நிபுணர்கள் இச் செயலணியில் அங்கம் வகித்தனர் தமிழ்ப்பிரதிநிதி என்ற வகையில் பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு இதில் அங்கம் வகித்திருந்தார். மாற்றுக் கொள்கைக்கான நிலையத்தின் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்;துவும் அங்கம் வகித்திருந்தார். போர்க்குற்றங்கள் தொடர்பில் எத்தகைய விசாரணைப் பொறிமுறையை அமைத்தல் வேண்டும் என்பது தொடர்பாக மக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காகவே இது அமைக்கப்பட்டது. நாடு பூராகவும் பொதுமக்களுடன் சந்திப்புக்களை நடாத்திய இச்செயலணி 7306 எழுத்து மூல சமர்ப்பணங்களையும் பெற்றுக் கொண்டது. நாடு முழுவதிலும் 16 வலய செயலணிகள் உருவாக்கப்பட்டு கருமங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இச்செயலணியின் சிபார்சுகள் சிங்களப் பெரும்பான்மையின் விருப்பங்களுக்கு இசைவற்றன என்ற காரணத்தினாலேயே ஜனாதிபதியும் பிரதமரும் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. இந்தச் சிபார்சுகளை உடனடியாகவே அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலர் நிராகரித்திருந்தனர். நீதி அமைச்சர் விஜயதாசராஜபக்ஷ செயலணியின் அறிக்கை தேவையற்றது எனக் குறிப்பிடப்பட்டார் இதற்கு மேலாக செயலணியில்; எனக்கு நம்பிக்கையில்லை என்றும் குறிப்பிட்டார்.

அமைச்சர் சம்பிக்கரணவக்க இவ் அறிக்கை போக வேண்டிய இடம் குப்தைத் தொட்டி என்று குறிப்பிட்டார். அறிக்கையைப் பெற்றுக் கொண்ட சந்திரிக்கா சிபார்சுகளை ஏற்றுக் கொள்வது கட்டாயமல்ல பொது விவாதத்திற்குரியவை என சமாழிப்பு செய்தார்.

தாங்களே நியமித்த செயலணியின் அறிக்கைகளை அரசாங்கம் கிடப்பில் போடுவது ஆச்சரியப்படக்கூடிய ஒன்றல்ல. இது வரலாற்று ரீதியாக நடைபெறுகின்ற ஒன்றுதான். விடயப் பொருள்களினால் வரும் உள்நாட்டு, சர்வதேச அழுத்தங்களைக் குறைப்பதற்காகவே அவ்வப்போது ஆணைக்குழுக்களை செயலணிகளை உருவாக்குவது வழக்கம். பின்னர் அவற்றின் சிபார்சுகள் பற்றி கணக்கெடுப்பதில்லை. போர் குற்றம் தொடர்பாக மகிந்தர் உருவாக்கிய நல்லிணக்க ஆணைக்குழுவிற்கும் இதுவே நடந்தது. இவ்வளவிற்கும் இவ்வாணைக்குழுவின் சிபார்சுகள் தமிழ் மக்களுக்குத் தேனையும் பாலையும் கொட்டவில்லை. சில பருக்கைகளையே வழங்க முன் வந்தன. பெருந்தேசியவாதிகள் அதனைக் கூடக் கொடுக்கத் தயாராக இல்லை. தொடர்ச்சியாக பட்டனுபவம் உள்நாட்டு முறைமைகள் என்றைக்குமே தமிழ் மக்களுக்கு உதவப்போவதில்லை என்பதுதான் இந்த அறிக்கை மீண்டுமொருமுறை அதனை வெளிப்படுத்தியுள்ளது.

செயலணியின் சிபார்சுகளில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் பொது மக்களின் காணிகளை விடுவித்தல், இராணுவ மயமாகலால் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணல், காணாமல்போனோர் சம்பந்தமாக நடவடிக்கை எடுத்தல், போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதாரங்களைத் தேடிக் கொடுத்தல், போர்க்குற்ற விசாரணையை உள்நாட்டு நீதிபதிகளையும், வெளிநாட்டு நீதிபதிகளையும் உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் மூலம் மேற்கொள்ளல், குறைந்த பட்சம் நீதிமன்றத்தின் ஒவ்வொரு அமர்விலும் ஒரு வெளிநாட்டு நீதிபதியாவது பங்கெடுத்தல் (இது விடயத்தில் ஆரம்பத்தில் வெளிநாட்டு நீதிபதிகளையும் உள்ளடக்கியதாகத் தொடங்கிவிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை வந்தபின் வெளிநாட்டு நீதிபதிகளை விடுவிக்கலாம் எனவும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டிருந்தது.)

சிவில் விவகாரங்கள், பொருளாதார இராணுவச் செயற்பாடுகளிலிருந்து இராணுவத்தை முற்றாக நீக்குதல் படைகளில் ஆட்குறைப்புச் செய்தல் படையினருக்கான புனர்வாழ்வு போன்றன அடங்கியிருந்தன.

இதில் மிகவும் சர்ச்சைக்குள்ளான விடயம் கலப்பு நீதிமன்றமும் படையினர் விவகாரமும் தான். வெளிநாட்டு நீதிபதிகளை ஏற்றுக் கொள்ள முடியாது என ஜனாதிபதி, பிரதமர் என பலரும் தெளிவாகவே கூறியுள்ளனர். இந்தச் சிபார்சுகள் வெளிவந்ததும் சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜிதசேனாரத்னா விசேட நீதிமன்றத்தில் ஒரு வெளிநாட்டு நீதிபதி கூட இருக்கமாட்டார். நிபுணத்துவ உதவிகளைப் பெறுவதற்காக சர்வதேச சட்டநிபுணர்களை மட்டும் அழைக்க முடியும் எனக் குறிப்பிட்டார். ஜனாதிபதியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான லஷ்மன் யாப்பா அபேவர்தனா போர்க்குற்ற விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்றார்.

படையினர் விவகாரத்தைப் பொறுத்தவரை சிவில் விவகாரங்கள், மற்றும் பொருளாதார நிர்வாகச் செயற்பாடுகளிலிருந்து இராணுவத்தை முற்றாக நீக்குதல், இராணுவ மயநீக்கம் படைகளில் ஆட்குறைப்புச் செய்தல், படையினருக்கான புனர்வாழ்வு என்பன செயலணியின் சிபார்சுகளில் அடங்கியிருந்தன. இவற்றில் சிவில் நிர்வாகப்பணிகளில் இருந்து இராணுவத்தை நீக்குதல், இராணுவ மயநீக்கம் என்பன போர்முடிந்த காலத்திலிருந்து பேசப்பட்டு வரும் விடயங்கள்தான். ஐநா மனித உரிமையாளர் பணியகத்தினால் வெளியிடப்படும் அறிக்கைகளிலும் இவை கூறப்பட்டிருந்தன.

ஆனால் இராணுவத்தைப் பொறுத்தவரை இந்த நான்கு விடயங்களையும் ஏற்பதற்குத் தயாராக இல்லை. இவை அரசாங்க முறைமையில் இராணுவம் ஒரு அழுத்த சக்தியாக இருப்பதற்கு வாய்ப்புக்களை கொடுத்திருந்தன. அதனைக் குறைக்க இராணுவம் விரும்பவில்லை. போர் தொடங்கிய பின்னர் இராணுவமும் அரசியல் சக்தியாக எழுச்சியடைந்தது. யுத்த நிறுத்த ஒப்பந்தம், சமாதானப் பேச்சுவார்த்தை என்பவற்றில் இராணுவத்தின் சம்மதமில்லாமல் எதுவும் செய்யமுடியாத நிலை ஆட்சியாளர்களுக்கு இருந்தது. அரசு மேற்கொண்ட யுத்த நிறுத்த உடன்படிக்கை ஏற்பாடுகளில் பலவற்றை இராணுவம் நடைமுறைப்படுத்த முன்வரவில்லை. அரசும் அதற்கான அழுத்தத்தைக் கொடுக்கவில்லை. அல்லது கொடுக்க முடியாத நிலை இருந்தது.

இந்தச் செயலணி உருவாக்கப்பட்ட போது இராணுவ அதிகாரிகளையும் உள்ளடக்க வேண்டும் என்ற கோரிக்கையை பலாலி முகாமில் நடைபெற்ற கலந்துரையாடலில் மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே முன்வைத்திருந்தார். இது பற்றி வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடனும் முரண்பட்டார். இதனால் அவர் உடனடியாகவே 51 ஆவது டிவிசன் தளபதிப் பதவியிலிருந்து தூக்கப்பட்டு காலாற்படைப்பிரிவு பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். பொறுப்புக் கூறல் விடயத்திலும் சர்வதேசப் பங்களிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன் எல்லா விடயங்களையும் எல்லா நிலைகளிலும் உள்ள படையினருடன் தகவல்கலைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் படைத்தரப்பில் விடப்பட்டது.

இந்த விடயங்களில் மிகவும் சர்ச்சைக்குரிய விடயம் இராணுவ ஆட்குறைப்பும், புனர்வாழ்வும்தான் இராணுவத்தின் எண்ணிக்கை அரசின் கொள்ளளவிற்கும் மேலானது. இரண்டு இலட்சத்து முப்பதினாயிரம் இராணுவத்தினர் உள்ளனர். விமானப்படையையும், கடற்படையையும் சேர்த்தால் இது மூன்று இலட்சத்திற்கு மேலானது. போர் இல்லாத நிலையில் இவ் எண்ணிக்கை தேவையற்றது. இராணுவத்திற்கான பணிகளும் குறைந்து விட்டது. இதனால்தான் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளிலும் அரசு இராணுவத்தை இறக்கியுள்ளது. இது இராணுவத்தின் கௌரவத்தை குறைத்துள்ளதோடு வேறு பல பிரச்சினைகளையும் உருவாக்கியுள்ளது.

போரில்லா நிலையில் இலங்கைக்கு முப்பதினாயிரம் இராணுவம் தாராளமாக போதுமானது. போர் தொடங்கியபோது பதினைந்தாயிரம் இராணுவம் மட்டுமே இருந்தது. குறைந்தபட்ச பணிக்காலத்தையொட்டி அவர்களுக்கு ஓய்;வு கொடுத்து அவர்களை சமூகத்துடன் இணைக்கும் திட்டங்களை அரசு வரைய வேண்டும் என செயலணி சிபார்சு செய்துள்ளது.

அடுத்தது புனர்வாழ்வு. இராணுவத்தினருக்கு புனர்வாழ்வு கொடுப்பது புலிகளின் தரத்திற்கு அவர்களை இறக்கி கொச்சைப்படுத்துகின்றது என்பது படையினரின் வாதம். முன்னாள் கடற்படை தலைமை அதிகாரி அட்மிரல் சரத் வீரசேகர இதற்காக கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார். ஆனால் இராணுவத்தினரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுக்கும் புனர்வாழ்வு தேவை என்பது செயலணியினரின் வாதம். உளச்சிகிச்சை மேற்கொள்ளப்படாவிட்டால் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பர் எனவும் செயலணி வாதிடுகின்றது.

சிங்கள அரசியல் சக்திகள் என்போர் மூன்று பிரிவினர் சிங்கள மக்கள், பௌத்த நிறுவனங்கள், படையினர் இந்த மூன்று சக்திகளும் செயலணியின் சிபார்சுகளை அறவே விரும்பவில்லை. சுருக்கமாகக் கூறினால் சிங்களக் கூட்டுமனம் இவற்றை அறவே விரும்பவில்லை இந்நிலையில் சிபார்சுகள் நடைமுறைக்கு வரும் என்பதில் எவ்வித உத்தரவாதமும் கிடையாது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை சிபார்சுகளில் புதிதாக ஒன்றும் இல்லை. ஏற்கனவே பேசப்பட்ட விடயங்கள் தான் வந்திருக்கின்றன. வந்தவைகூட திருப்திகரமானது எனக் கூறமுடியாது. பொதுமக்களின் காணிகளை விடுவித்தல், இராணுவ மயநீக்கம், காணாமல் போனோர் விவகாரம், போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதாரங்களைத் தேடிக் கொடுத்தல் என்பன தமிழ் மக்களுக்கு நன்மை தரக்கூடியவைதான். ஆனால் இவற்றில் திட்டவட்டமான உறுதித்தன்மை கிடையாது. காணிகளை விடுவித்தல், இராணுவ மயநீக்கம், என்பன மட்டும் தமிழ் மக்களுக்கு போதுமானதல்ல. இராணுவம் தமிழ் பிரதேசங்களிலிருந்து அகற்றப்படல் வேண்டும். என்பதே தமிழ் மக்களின் கோரிக்கை. இராணுவம் தமிழ்ப்பிரதேசங்களில் நிலைத்திருப்பது சிங்கள பௌத்த அதிகாரத்தை தமிழ் மக்களின் மீது திணிப்பதற்கு சமனாகும். தற்போதுள்ள இராணுவம் பல்லின இராணுவமல்ல. மாறாக சிங்கள இராணுவமே. சிறீலங்கா அரசு என்பதும் பல்லின அரசல்ல. மாறாக அது சிங்கள மக்களுக்கு மட்டுமான சிங்கள அரசே!

இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு இலங்கை அரசு பல்லின அரசாக மாறியபின் தமிழ்ப்பிரதேசங்களில் தமிழ்;ப்பிரதேச அடையாளங்களுடன் பல்லின இராணுவம் இருப்பதில் தமிழ் மக்களுக்கு ஆட்சேபனை கிடையாது. பலநாடுகளில் மாநில அடையாளமே மாநிலத்திலுள்ள இராணுவத்தினர் கொண்டிருக்கின்றனர். உண்மையில் இராணுவத்தினருக்கான ஆட்சேர்ப்பு மாநிலங்களில் அந்த மாநில ஆட்களைக் கொண்டு நிரப்புவதே நல்லது. இதைவிட தனியார் காணிகளைக் கொடுத்துவிட்டு அரச காணிகள் என்ற பெயரில் தமிழ்;ப்பிரதேசங்களில் குடியிருப்பதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

இராணுவ எண்ணிக்கையைக் குறைத்தல்;, இராணுவத்தினருக்கான புனர்வாழ்வு என்பன சிங்கள தேசத்தின் பிரச்சினைகள். அதனை அவர்கள் தீர்த்துக் கொள்ளட்டும். பல்லின இராணுவமாக இருந்தால் தமிழ்த் தரப்பு கருத்துக்களைக் கூறலாம். சிங்கள இராணுவம் பற்றிய விவகாரங்களில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் எவ்வாறுதான் கருத்துக்களைக் கூறமுடியும்.

காணாமல் போனோர் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும். பலர் இது விடயத்தில் கண் கண்ட சாட்சிகளாக உள்ளனர். சர்வதேச விசாரணை ஒன்றின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும். இலங்கை நீதிமன்றங்களின் இலட்சணங்கள் ரவிராஜ் கொலை வழக்குத் தீர்;ப்பிலும் குமாரபுரம் கொலை வழக்குத் தீர்ப்பிலும் நன்கு தெரிந்தவையே. போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்தவர்கள் பற்றி செயலணி எதனையும் குறிப்பிடவில்லை. இது செயலணியும் வேறு ஏதாவது நிகழ்ச்சி நிரலுக்குட்பட்டு செயற்படுகின்றதா? என்ற சந்தேகத்தை எழுப்புகின்றது.

போரினால் பரிக்கப்பட்டவர்களுக்கான வாழ்வாதாரங்களைத் தேடிக் கொடுத்தல் விடயத்தில் மேலோட்டமான சிபார்சுகள் போதுமானவையல்ல. என்ன திட்டத்தின் அடிப்படையில் எவ்வளவு காலத்திற்குள் மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான யோசனைகள் தேவை. போர்முடிவடைந்து ஏழு வருடங்களுக்கு மேலாகியும் இது விடயத்தில் பெரிய முன்னேற்றங்கள் எதுவுமில்லை. நல்லிணக்கம் பற்றி பேசுகின்ற அரசு இது விடயத்திலாவது தனது நேர்மையை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட இராணுவத்தினருக்கு கிடைத்த சிறு வீதம் கூட போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை.

பொறுப்புக் கூறல் விடயத்தில் கலப்பு நீதிமன்றம் தமிழ் மக்களது கோரிக்கையல்ல. அது ஐ.நா மனித உரிமைகள் சபையின் தீர்மானமே. தமிழ் மக்கள் முழுமையான சர்வதேச விசாரணைணையே கோரிநின்றனர். அரசு குற்றம் செய்த தரப்பு. அதனை நீதி வழங்கும் விடயத்தில் எவ்வாறு பங்காளியாக்க முடியும். இங்கே ஒன்றை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் இலங்கையில் நடைமுறையில் இருப்பது சிங்கள பௌத்த அரசு. அதனைச் செயற்படுத்துவது சிங்கள பௌத்த அரசாங்கம். இதனால் முழு அரசு இயந்திரமுமே சிங்கள பௌத்த மேலாதிக்க கருத்து நிலைக்கு உட்பட்டதாக உள்ளது. நீதிமன்றங்கள் இதற்கு விதிவிலக்கானதல்ல. ரவிராஜ் கொலை வழக்கு இதற்கு மிகப் பெரிய சான்று. இந்த நிலையில் கலப்பு நீதிமன்றத்திற்குரிய தகைமை இலங்கை நீதிமன்றங்களுக்குக் கிடையாது.

இதைவிட செயலணியின் சிபார்சு கலப்பு நீதிமன்றத்திற்குரியதல்ல. சம அளவில் சர்வதேச நீதிபதிகளையும், உள்நாட்டு நீதிபதிகளையும் கொண்ட நீதிமன்றத்தை கலப்பு நீதிமன்றம் எனக் கூறலாம். நீதிமன்ற இயங்கு விதிகளும் இரு தரப்பாலும் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இங்கே செயலணியின் சிபார்சில் ஒரு வெளிநாட்டு நீதிபதியாக இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அங்கு அவர் பார்வையாளராக இருக்க முடியுமே தவிர பங்காளராக இருக்க முடியாது. அதனையும் படிப்படியாக நீக்கலாம் என்ற சிபார்சும் முன்வைக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் செயலணியின் சிபார்சுகள் தமிழ் மக்களின் அபிலாசைகளிலிருந்து வெகு தூரத்தில் உள்ளது என்றே கூற வேண்டும்.

செயலணியின் அறிக்கையைப் பொறுத்தவரை தற்போதுள்ள அரசாங்கத்தால் எதுவும் நடக்கப்போவதில்லை. அரசாங்ககம் தற்போது மகிந்தர் அணிக்கு முகம் கொடுக்க முடியாமல் தற்காப்பு நிலைக்கே சென்றுள்ளது. மகி;ந்தர் அணியின் கை மேலோங்கி வருகின்றது. மகிந்தர் மிகச் சாதுரியமாக காய் நகர்த்தி மேல்நிலைக்கு வந்துள்ளார். அதனூடாக சிங்கள பொதுக்கருத்தை தமக்குச் சார்பாக திருப்பியுள்ளார். முன்னரே கூறியது போல சிங்களத்தரப்பின் மூன்று பெருஞ் சக்திகளான சிங்கள மக்கள், பௌத்த நிறுவனங்கள், இராணுவம் ஆகிய மூன்றும் மகிந்தருக்குப்பின்னாலேயே நிற்கின்றது. மகிந்தர் தனக்குச் சார்பான ஒவ்வொரு விடயத்தையும் மிகக் கவனமாக அரசியலாக்குகின்றார். தனக்கான பாதுகாப்பு அரணையும் மிகக் கவனமாகக் கட்டியெழுப்பியுள்ளார்.

தற்போது மகிந்தரையோ அல்லது அவரது குடும்பத்தினரையோ கைது செய்ய முடியாது. இதனால்தான் மகிந்தர் குடும்பத்தை விட்டு விட்டு விமல்வீரவன்சவைக் கைது செய்து அரசாங்கம் சிறையில் அடைத்துள்ளது. இது சுறாக்களை விட்டுவிட்டு சூடைகள் பிடிக்;கின்ற செயல். இது பெரிய பயன்களைத் தரப்போவதில்லை.

தென்னிலங்கையில் இடம்பெற்ற கூட்டுறவுச் சங்கத் தேர்தல்களில் மகிந்தர் அணி வெற்றி பெற்றுள்ளது. இது அவர்களுக்கு வலுவான ஊக்கத்தைக் கொடுத்துள்ளது. மகிந்தர் அணியின் பலம் அதன் உள்;ர்த்தலைவர்கள்தான். உள்;ராட்சிசபைத் தேர்தல்கள் இடம்பெற்றால் மகிந்தர் அணி மேலும் பலமடையும். சீனாவின் அதிகரித்த பிரசன்னத்தால் இந்தியாவும் அதிதிருப்பதியடைந்துள்ளது. மகிந்தர் இந்தியாவின் உறவினை மேன்மைப்படுத்தும் முயற்சிகளிலும் இறங்கியுள்ளார்.

உள்;ராட்சிசபைத் தேர்தல்களை மைத்திரி அரசினால் நீண்டகாலம் பின்தள்ளிப் போட முடியாது. இந்த வருட நடுப்பகுதிக்குள் நடாத்த வேண்டிய கட்டாய நிலை அரசிற்கு உண்டு. அந்தத் தேர்தல் நடை பெற்றால் மைத்திரி அரசின் வீழ்ச்சி மேலும் தீவிரமடையும். மைத்திரி அரசிற்கு பின்னால் நிற்கும் இந்தியா, அமெரிக்கா சக்திகளுக்கும் மைத்திரி அரசினைப் பாதுகாக்க முடியாத நிலை ஏற்படலாம். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ட்ரம்ப் இலங்கை விடயத்தில் ஒபாமாவைப் போல அக்கறை காட்டுவார் எனக் கூறமுடியாது.

இந்த நிலையில் செயலணியின் அறிக்கையை மைத்திரி ரணில் அரசாங்கம் ஏறெடுத்தும் பார்க்காது. ஆனால் அமெரிக்கா, மேற்குலக சக்திகள் மகிந்தரைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த அறிக்கையையும் கருவியாகப் பயன்படுத்தலாம். இந்த வல்லரசுகள் ஜெனீவாக்களத்தை மூடிவிடாமல் பாதுகாப்பதும், கலப்பு நீதிமன்ற முறையை தீர்மானமாக எடுத்ததும் மகிந்தர் ஆட்சிக்கு வந்தால் அவரைக்கட்டுப்படுத்துவதற்காகத்தான். ஆனால் மகிந்தர் ஆட்சிக்கு வரும் வரை அமெரி;க்க, மேற்குலக சக்திகளும் இந்த அறிக்கையை கணக்கெடுக்கப்போவதில்லை. வேண்டுமானால் அடுத்த மாதம் தொடங்க இருக்கும் ஜெனீவாக்களத்தில் அறிக்கைக்காக இலங்கைக்கு நற்சான்றிதழ் கொடுக்க முன்வரலாம்.

தமிழ் மக்களுக்கு அரசியல் பரப்பில் இந்த அறிக்கை அதிகம் உதவலாம். சர்வதேச மட்டத்தின் தமிழ் மக்களின் நியாயப்பாடுகளைக் கொண்டு செல்வதற்கு இது பெரிதும் உதவக்கூடியதாக இருக்கும். இந்த குறைந்த பட்ச சிபார்சுகளைக் கூட நடைமுறைப்படுத்த முடியாத சிறீலங்கா அரசோடு எப்படி சேர்ந்து வாழ முடியும் என்ற நியாயத்தை சர்வதேச மட்டத்தில் எழுப்பமுடியும். குறிப்பாக சர்வதேச சிவில் சமூகத்தின் மனச்சாட்சியை பலமாகக் தட்டியெழுப்ப முடியும். சர்வதேசப் பாதுகாப்புடன் கூடிய இடைக்கால தீர்வு நோக்கியும் மெதுவாக நகரமுடியும்.

இது முழுக்க முழுக்க தமிழ்த் தரப்பின் சர்வதேசப்பரப்புடையுடன் தொடர்புடையது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வல்லரசுகளின் கைதியாக இருப்பதினால் இவற்றை தற்போதைக்குச் செய்யப்போவதில்லை. சிவில் நிறுவனங்கள்தான் அதிக அக்கறை செலுத்த வேண்டும். தமிழ் மக்கள் பேரவை இது விடயத்தில் கூடிய அக்கறை கொள்வது நல்லது. புலம்பெயர் மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் இது விடயத்தில் பாரிய பொறுப்பு உண்டு. ஆனால் தளத்தில் ஒரு வலிமையான அரசியல் இயக்கம் இல்லாமல் புலத்திலும், தமிழகத்திலும் பெரிய செயற்பாடுகளை எதிர்பார்க்க முடியாது.
மொத்தத்தில் பலமாக சிந்திக்க வேண்டிய தருணம் இது.
சி.அ.யோதிலிங்கம்