புலிகளும் எம்.ஜி.ஆரும் வேறு வேறல்ல! – புகழேந்தி தங்கராஜ்

346 0

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுப்பதைப் போல – என்பது தமிழில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுவந்த உவமை. இப்போதோ எப்போதாவதுதான் அதைக் கேட்கமுடிகிறது. அதனால்தானோ என்னவோ அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்கிறார் நண்பர் அப்புசாமி.
கூரையைப் பிய்த்துக் கொண்டு – என்று ஆரம்பித்தாலே வார்தா தான் ஞாபகம் வருகிறதாம் அப்புசாமிக்கு! இன்னொரு நண்பர் குப்புசாமிக்கு இதைக்காட்டிலும் அதிக ஞாபக சக்தி. கூரை ரூ பிய்த்துக்கொண்டு ரூ என்கிற வார்த்தைகளைக் கேட்டாலே சேலத்திலிருந்து சென்னைக்குப் பணப்பெட்டிகளுடன் வந்த ரயில்தான் ஞாபகம் வருகிறதாம் அவருக்கு!

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி அண்ணன் வைகோ வெளியிட்டிருக்கிற விரிவான அறிக்கையை (மொத்தம் 9 பக்கம்) முழுமையாகப் படித்த பிறகுதான் ‘கூரையைப் பிய்த்துக்கொண்டு’ – என்பதற்கான உண்மையான பொருள் எனக்குப் புரிந்தது. விடுதலைப் புலிகளின் குழு ஒன்று எம்.ஜி.ஆரை முதல்முறையாகச் சந்தித்தது 1984ல்! அன்டன் பாலசிங்கம்தான் குழுவின் தலைவர். அந்த முதல் சந்திப்பிலேயே 2 கோடி ரூபாயை எம்.ஜி.ஆர். தங்களுக்கு வாரி வழங்குவாரென்று அவர்கள் எதிர்பார்க்கவேயில்லை. தனது அறிக்கையில் வைகோ இதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுப்பதைப் போல எம்.ஜி.ஆர். செய்த இந்த உதவியை மூத்த தலைவர் நெடுமாறனும் மூத்த கவிஞர் புலமைப்பித்தனும் ஏற்கெனவே தங்கள் நூல்களில் பதிவு செய்திருக்கின்றனர். என்றாலும் அந்தச் சந்திப்பு குறித்த முதல் தகவல் அறிக்கை – நேரடி சாட்சியமான அன்டன் பாலசிங்கத்துடையது! (அந்த முதல் சந்திப்பிலும் இரண்டாவது சந்திப்பிலும் பிரபாகரன் பங்கேற்கவில்லை.)
‘என்னிடமிருந்து எவ்வளவு தொகை எதிர்பார்க்கிறீர்கள் – என்று சுற்றிவளைக்காமல் எம்.ஜி.ஆர். நேரடியாகக் கேட்டபோது என்ன சொல்வதென்றே எனக்குப் புரியவில்லை. பெருந் தொகை தேவைப்படுகிறது – என்பதைத் தர்மசங்கடத்துடன் தெரிவித்தேன்.

எவ்வளவு தேவை’ என்று அவர் மீண்டும் கேட்க என்னுடனிருந்த சங்கர் ‘குறைந்தது இரண்டு கோடியாவது தேவைப்படும்’ என்று சொல்ல ‘இரண்டுகோடி தானே…. நாளைக்கே கொடுத்துவிடுகிறேன்’ என்றார் எம்.ஜி.ஆர்.’ – இது பாலசிங்கத்தின் நேரடி சாட்சியம். (சொன்னமாதிரியே மறுநாள் பாலசிங்கத்திடம் அதை ஒப்படைத்தார் எம்.ஜி.ஆர்.)
‘அப்போது புலம்பெயர் தமிழ் உறவுகளிடமிருந்து கிடைத்துவந்த சிறிய அளவிலான நிதி உதவிதான் இயக்கத்தின் ஒரே நிதி ஆதாரம். அப்படியொரு நிலையில் இரண்டுகோடி என்பது மிகப் பெரிய தொகை. எம்.ஜி.ஆரின் வடிவில் அதிர்ஷ்ட தேவதை அரவணைப்பாள் என்று நாங்கள் எதிர்பார்க்கவேயில்லை.. பிரபாகரனிடம் இரண்டுகோடி விஷயத்தைத் தெரிவித்தபோது அவர் நம்பவேயில்லை. நாங்கள் பகடி செய்கிறோம் – என்றே நினைத்தார்….’ என்கிறார் பாலசிங்கம்.

அந்த முதல் சந்திப்பிலேயே எம்.ஜி.ஆர். என்கிற மக்களின் முதல்வரிடம் விடுதலைப் புலிகளின் லட்சியம் குறித்து பாலசிங்கம் தெள்ளத்தெளிவாக எடுத்துச் சொன்னது தமிழீழப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனை.
விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்
என்கிற வள்ளுவத்துக்கு பாலசிங்கம் உயிர்கொடுத்த அரிய வரலாற்று நிகழ்வு அது.

‘விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் இல்லை. தங்கள் தாயகத்தின் விடுதலைக்காகப் போராடுகிற விடுதலை வீரர்கள்….. ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காகவும் எளிய மக்களின் நல்வாழ்வுக்காகவுமே நாங்கள் ஆயுதம் ஏந்திப் போராட நேர்ந்தது….

உங்கள் லட்சியமும் எங்கள் லட்சியமும் வேறு வேறு அல்ல! உங்களது திரைப்படங்கள் மூலம் நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதை நிஜத்தில் சாதிக்கத்தான் நாங்கள் போராடுகிறோம்’ என்று பாலசிங்கம் சொன்னது எம்.ஜி.ஆரின் இதயத்தைத் தொட்டிருக்க வேண்டும்.
திரைப்படங்களில் மாவீரனாக ஜொலித்தவர் எம்.ஜி.ஆர்.. அதேசமயம் மற்றவர்களைத் துல்லியமாக மதிப்பிடவும் மதிக்கவும் தெரிந்தவர். பிரபாகரன் என்கிற இளைஞனும் அவனது தோழர்களும் நிஜமாகவே களத்தில் நின்றுகொண்டிருப்பவர்கள் என்பதைப் புரிந்துகொள்ள அவருக்கு அதிக நேரம் தேவைப்படவில்லை. அதைப் புரிந்துகொண்டு 2 கோடி கொடுத்தார். அதன் இன்றைய மதிப்பு 500 கோடி ரூபாய். இத்தனைக்கும் அந்தத் தொகை முதல் தவணைதான்! இப்போது சொல்லுங்கள்…. கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கிறதா இல்லையா!

2 கோடியை வைத்து பிரபாகரன் என்ன வாங்கப் போகிறார் என்பதும் அந்தப் பணம் என்னவாக ஆகப் போகிறது என்பதும் எம்.ஜி.ஆருக்கு நிச்சயமாகத் தெரிந்திருந் திருக்கும். தெரிந்தேதான் உதவினார். ஈழம் எப்படியாவது விடுதலை பெற்றாக வேண்டும் என்கிற வேட்கை பிரபாகரனைப் போலவே எம்.ஜி.ஆருக்கும் நிச்சயமாக இருந்திருக்க வேண்டும். பிரபாகரனால் அதைச் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையும் அவருக்கு இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவ்வளவு பெரிய தொகையை வாரி வழங்கியிருப்பாரா?

விடுதலைப் புலிகளுக்கு உதவியதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பே அகிம்சாவழியில் போராடிய ‘ஈழத்து காந்தி’ தந்தை செல்வாவுக்கு உதவிக்கரம் நீட்ட எம்.ஜி.ஆர். முன்வந்தது குறிப்பிட்டே ஆகவேண்டிய வரலாறு.
1972 பிப்ரவரி மாதம் ஈழத் தமிழர் போராட்டத்துக்குத் தமிழ்மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்காக தந்தை செல்வா தமிழ்நாட்டுக்கு வருகை தந்தார். தமிழகத் தலைவர்களைச் சந்தித்து இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் கொடுமைகளையும் எடுத்துச் சொன்னார். தந்தை பெரியார் பெருந்தலைவர் காமராஜ் முதல்வர் கருணாநிதி முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் முஸ்லிம் லீக் தலைவர் காயிதேமில்லத் உள்ளிட்ட தலைவர்களும் எம்.ஜி.ஆர். சிவாஜி உள்ளிட்ட கலைஞர்களும் செல்வா சந்தித்தவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்.

எம்.ஜி.ஆர். – செல்வா சந்திப்பு குறித்து செல்வாவுடன் நெருங்கிப் பழகிய இலங்கையின் மிக மூத்த பத்திரிகையாளர் த.சபாரத்தினம் (டெய்லி நியூஸ் ஆசிரியர் குழுவில் இருந்தவர்) எழுதியிருப்பதில் ஓரிரு வரிகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை.

‘தமிழ் மக்களுக்கு இழைக்கப்படுகிற அநீதிகளைப் பற்றி தந்தை செல்வா எடுத்துச் சொன்னதும் எம்.ஜி.ஆர். உணர்ச்சிவசப்பட்டார். ‘உங்களுக்கு என்ன வேண்டும்? பணமா ஆயுதமா?’ என்று கேட்டார். அதைக் கேட்டு நெகிழ்ந்துபோன செல்வா உங்களது ஆதரவும் ஆசிகளும் இருந்தாலே போதும் என்றார்’ என்று குறிப்பிடுகிறார் சபாரத்தினம்.
தந்தை செல்வா பிரபாகரன் – இருவருக்கும் உதவ எம்.ஜி.ஆர். முழுமனத்துடன் முன்வந்ததற்குக் காரணம் அவர்கள் இருவருமே உண்மையான போராளிகள் என்பதை அவர் புரிந்துகொண்டது தான்! எம்.ஜி.ஆருக்கு மட்டுமல்ல நமக்குக் கூட செல்வாவும் பிரபாகரனும் வேறு வேறல்ல! இருவரும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். அகிம்சைப் போராட்டங்கள் மூலமே சிங்கள இலங்கையைப் பணியவைத்துவிட முடியுமென்று செல்வா நம்பினார். அந்த நம்பிக்கை பொய்த்துவிட்டபிறகு செல்வாவின் கனவைத் தான் ஆயுதப் போராட்டத்தின் மூலம் நிறைவேற்ற முயன்றார் பிரபாகரன்.

எழுபதுகளின் தொடக்கத்திலேயே இலங்கையில் தமிழருக்குச் சம உரிமை கிடைப்பது சாத்தியமில்லை – என்பதை உணர்ந்த செல்வா தமிழீழம்தான் தீர்வு என்கிற முடிவுக்கு வந்துவிட்டார். அவரது அந்த விடுதலை வேட்கையை மதித்த பிரபாகரன் 1975ல் காங்கேசன்துறை இடைத்தேர்தலில் செல்வா போட்டியிட்டபோது அவரை ஆதரித்து பல கிராமங்களில் பிரச்சாரம் செய்தார். அது அவர் தலைமறைவாக இருந்த நேரம். அந்தத் தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்ற பிறகே செல்வா மறைந்தார். அவரது விடுதலைப் பாதை பிரபாகரனின் பாதையானது.

விடுதலைப் புலிகளை அழித்தொழிக்க இலங்கைக்கு இந்தியா உதவியதைப் பார்த்து தமது இறுதிநாட்களில் வேதனைப்பட்டவர் எம்.ஜி.ஆர். 2009ல் அவர் முதல்வராக இருந்திருந்தால் இனப்படுகொலையைத் தடுத்திருப்பார். ஒரு விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்காக ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்ட கொடுமையை நிறுத்த ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் தெருவில் இறக்கிப் போராடியிருப்பார். நமது துரதிர்ஷ்டம் அப்போது கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தார்!

ஈழப் பிரச்சினையில் எம்.ஜி.ஆரின் அணுகுமுறைக்கும் ஜெயலலிதாவின் அணுகுமுறைக்கும் இருந்த வித்தியாசத்தின் பின்னணியில் இந்திய உளவுத் துறை இலங்கை உளவுத்துறை இரண்டும் இருந்தன. ஜெயலலிதாவுக்கு புலிகளால் ஆபத்து – என்றெல்லாம் புரளி கிளப்பியவர்கள் அவர்கள்தான்! புலிகளால் கருணாநிதிக்கு ஆபத்து ரூ – என்று கதை கட்டியவர்களுக்கு இப்படியெல்லாம் கயிறு திரிப்பது சிரமமா என்ன!
முரண்கள் இருந்தன என்றாலும் 2009 இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி கேட்டு தமிழக சட்டப் பேரவையில் ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானம் எம்.ஜி.ஆரின் உணர்வுதான் அ.தி.மு.க.வை வழிநடத்துகிறது என்கிற உண்மையை வெளிப்படுத்துவதாக இருந்தது.

‘இலங்கை நமது நட்பு நாடு இல்லை – என்று இந்தியா அறிவிக்க வேண்டும்’ என்கிற ஜெயலலிதாவின் தீர்மானம் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் இருந்த எம்.ஜி.ஆர். மனநிலையின் பிரதிபலிப்புதான்! இத்தகைய தீர்மானங்களைத் தி.மு.க.வின் பொதுக்குழுவில் நிறைவேற்றக்கூட கருணாநிதி அஞ்சிய நிலையில் சட்டப் பேரவையிலேயே அப்படியொரு தீர்மானத்தை ஜெயலலிதா நிறைவேற்றியது எம்.ஜி.ஆர். ஆட்சிதான் நடக்கிறது என்பதை உறுதி செய்தது.

2011 தீர்மானம் போன்றே அழுத்தமான இன்னொரு தீர்மானத்தை 2016லும் ஜெயலலிதா முன்வைத்தார். நடப்பது எம்.ஜி.ஆர். ஆட்சிதான் என்பதை மீண்டும் அது உறுதி செய்தது. தமிழகத்தை ஆளுகிற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் முதல்வர் பன்னீர் செல்வமும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஈழப் பிரச்சினையில் கருணாநிதிக்கும் தி.மு.க.வுக்கும் இருந்த கோழைத்தனத்தின் சாயல் கூட இவர்கள் மீது படிந்துவிடக் கூடாது.
ஈழ மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு வாரி வழங்கிய எம்.ஜி.ஆரின் பாதையிலிருந்தும் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு நீதிகேட்ட ஜெயலலிதாவின் பாதையிலிருந்தும் நூலிழை அளவுகூட தமிழக அரசு விலகிவிடக் கூடாது.

இனப்படுகொலையை எதிர்த்துக் குரல் எழுப்ப தமிழகம் தவறியதால்தான் 2009ல் 26வது மைலில் ஒன்றரை லட்சம் தமிழ்ச் சொந்தங்கள் கொத்துக்கொத்தாக உயிரிழக்க நேர்ந்தது. அதற்கு நீதி பெற வேண்டுமென்றால் தமிழகத்தின் குரல் ஓங்கி ஒலிக்கவேண்டும்.

இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி மட்டக்களப்பு நகரில் ஜனவரி 21ம் தேதி நடக்க இருந்த எழுக தமிழ் பேரணி 2 வாரம் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. வடக்கு ரூ கிழக்கு ஆகிய இரு மாகாண முதல்வர்களும் பங்கேற்க வசதியாக பேரணி தள்ளிவைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதை ஒரு வாய்ப்பாகக் கருதி அந்தப் பேரணிக்கு தார்மீக ஆதரவை வழங்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முன்வரவேண்டும். அது எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவுக்குச் செய்கிற உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தொடங்கியுள்ள நிலையில் அந்த மனிதன் நேசித்த ஈழ மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தர தமிழகமும் தமிழக அரசும் முழுமூச்சோடு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். கடலின் மறுகரையில் இனப்படுகொலை நடந்தபோது தமிழகம் செய்த துரோகத்துக்குப் பிராயச்சித்தம் செய்யக் கிடைத்திருக்கிற இந்த வாய்ப்பைத் தவற விடுவதுஇ தமிழகத்தை ஆளுகிற எம்.ஜி.ஆரின் இயக்கத்துக்கு அழகல்ல!