ஜல்லிக்கட்டு: வீரமா? விளையாட்டா? – புகழேந்தி தங்கராஜ்!

329 0

imagesசமூகவலைத்தளத் தொடர்புகள் மூலம் சுமார் 25 ஆயிரம் இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்காக சென்னையில் திரண்டதுதான் இந்த வாரத்தின் ஹாட் டாபிக். தமிழகக் காவல்துறையோ மத்திய அரசின் உளவுத்துறையோ இப்படியொரு திடீர் எழுச்சியை எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

இதுகுறித்து தமிழ் ஹிந்து நாளேட்டில் வெளியாகியுள்ள வா.மணிகண்டன் என்கிற நண்பரின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது.

‘தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனநிலை கொண்டவன் நான். ஆனால் சமீபமாக எதைப் பற்றியும் அலட்டிக்கொள்ளாத எமது தமிழ்ச் சமூகத்தை அது அணிதிரளச் செய்யுமாயின் கண்களை மூடிக்கொண்டு ஆதரிக்கிறேன்’ என்பது அவரது வாதம். ஏறத்தாழ அவரது நிலையில்தான் நானும் இருக்கிறேன்.

இன்று நேற்றல்ல நீண்ட நெடுங்காலமாக சுயநலம் சார்ந்த ஒரு கோழைத்தனம்தான் நமது அடையாளமாக இருக்கிறது பெரும்பாலும்!. இந்த உண்மை வேதனையளித்தாலும்இ இதுதான் யதார்த்தம்.
‘நமக்கெதுக்கு வம்பு ரூ என்பதுதான் இந்த நாட்டின் உண்மையான தேசியகீதம்’ என்று மூத்த இயக்குநர் ஆர்.சி.சக்தி அடிக்கடி குறிப்பிடுவார். ‘நமக்கெதுக்கு வம்பு ரூ என்கிற நமது பொறுப்பின்மை தான் 26வது மைலில் பல்லாயிரம் தமிழ்ச் சொந்தங்களைக் கொன்று குவித்தது’ என்று 2010ல் அவர் கண்கலங்கச் சொன்னதை இப்போதும் என்னால் மறக்க முடியவில்லை.

2009ல் இங்கிருந்து இருபத்தாறாவது மைலில் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் பேரும் நமது சொந்தங்கள்…. நமது நேரடி உறவுகள். கடலின் அந்தப்புறம் அவர்கள் விரட்டி விரட்டிக் கொல்லப்பட்டதை நாம் அறிந்தே இருந்தோம். ஆனால் சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் நமது சிந்தை இரங்கவில்லை. உண்மையில் நம்முடைய கோழைத்தனமும் சேர்ந்தேதான் கொன்றது அவர்களை!
இன்றைக்கு ஜல்லிக்கட்டு என்கிற விளையாட்டுக்காக மல்லுக்கட்டும் தமிழக இளைஞர்கள் 2009ல் சொந்த இனம் கொல்லப்பட்டபோது எங்கே போயிருந்தார்கள்? இன்று கல்லூரிகளைப் புறக்கணித்துவிட்டு நடுவீதிக்கு வந்து நிற்கிற தமிழ் மாணவர் சமூகம் அன்று என்ன செய்து கொண்டிருந்தது? இப்படியெல்லாம் எழுகிற கேள்விகளுக்கு யாரால் பதில் சொல்ல முடியும்!

‘ஆபத்தில்லாத போராட்டமென்றால் பலரும் அதில் பங்கேற்க முடியும்…. 2009ல் அத்தகைய நிலை இல்லை… போராடிய மாணவர்களையும் இளைஞர்களையும் அரசு தீவிரமாகக் கண்காணித்தது…. அச்சத்தைத் தவிர்த்து
ரிஸ்க் எடுத்துப் போராடும் துணிவு பலருக்கு இல்லை. முத்துக்குமாரின் உயிர்த்தியாகம் அந்த அச்சத்தைத் தகர்த்த நிலையில் மாணவர்கள் ஒன்றுபடுவதைத் தடுக்க கல்லூரி விடுதிகளை ஒரே இரவில் பூட்டியது தமிழக அரசு. போராடியவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது….! அரசின் அடக்குமுறைகள் ஒருபுறம் அரசியல் கட்சிகளின் ஈகோ இன்னொரு புறம். தமிழன் துணியவும் இல்லை ஒன்றுபடவும் இல்லை…. அதனால்தான் இனப்படுகொலையைத் தடுக்க முடியவில்லை’ என்கிறார்கள் நண்பர்கள் சிலர். இது ஓரளவு உண்மை.

இன்று ஜல்லிக்கட்டுக்காகப் போராடும் மாணவர்களால் திருச்சி மாதிரி ஒரு பெருநகரின் சாலைப் போக்குவரத்து சிலமணி நேரம் ஸ்தம்பித்து விடுகிறது. அன்றைய நிலை இப்படியில்லை.
முத்துக்குமாரின் உடலை இந்த வழியாகத்தான் எடுத்துச் செல்வோம் ரூ என்று முன்னதாகவே தெரிவித்தும் கடைசி நொடியில் அந்தப் பாதையைக் காவல்துறை வலுக்கட்டாயமாக மாற்றியது. மக்கள் நடமாட்டமில்லாத ஒரு மாற்றுப் பாதையில் அதை மாற்றிவிட்டது. ஈழத்தில் இனப்படுகொலை நடந்து கொண்டிருந்தபோது சென்னையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்ட ஒரே நிகழ்வு முத்துக்குமாரின் இறுதிப் பயணப் பேரணி என்பதுதான் அதற்குக் காரணம்.

லண்டனில் 2009ல் லட்சம் தமிழர்கள் திரண்டு போராட முடிந்தது. கனடாவிலும் அது சாத்தியமாயிற்று. பெங்களூருவில் தமிழ் அமைப்புகளும் இயக்குநர் கணேசன் போன்ற கலைஞர்களும் சேர்ந்து முப்பதாயிரம் தமிழரைத் திரட்டிப் போராட முடிந்தது. 8 கோடி தமிழரின் தலைநகரான சென்னையிலோ போராடியவர்களின் எண்ணிக்கை ஓரிரு ஆயிரத்தைத் தாண்ட முடியவில்லை.
எளிதில் ஒன்றுசேரக் கூடிய வாய்ப்புள்ள மாணவர்கள் நடத்திய போராட்டங்களிலும் அதே நிலை. எஸ்.ஆர்.எம்.கல்லூரி மாணவர்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் தம்பி பூபேஷ் சிவா உள்ளிட்ட ஐவர் தான் பங்கேற்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கக் கூட மாணவர்கள் திரண்டுவிடவில்லை. கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப் போவதாக வெளியான தகவல் அவர்களை அச்சுறுத்தியது. தங்கை கிருத்திகா உள்ளிட்ட மாணவிகள் தான் அதற்கெல்லாம் அஞ்சாமல் வந்து ஆதரவு தெரிவித்தனர்.

போராட்டத்தில் இறங்கிய பல கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டன. செங்கல்பட்டு சட்டக் கல்லூரியும் அப்படித்தான் மூடப்பட்டது. அந்தக் கல்லூரியைச் சேர்ந்த விஜயகுமார் அன்பரசு உள்ளிட்ட சுமார் 20 பேர் உண்ணாவிரதம் இருந்தபோது கல்லூரி மூடப்பட்டது. அதைவிடக் கொடுமைஇ தேர்வுக்கான ‘ஹால் டிக்கெட்’ வாங்க வந்த சக மாணவர்கள் பலர் உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்காதது!
அன்றைய அரசின் அடக்குமுறைகளுக்கும் ஆதரவு தரக்கூடப் பயந்த சக மாணவர்களின் ஒத்துழைப்பின்மைக்கும் இடையேதான் 2009ல் இனப்படுகொலையை எதிர்த்து அந்த மாணவர்கள் போராடினர். அவர்களது எண்ணிக்கை குறைவானதாக இருந்தாலும் அவ்வளவு நெருக்கடிக்கு இடையிலும் போராடிய சிவா பூபேஷ் கிருத்திகா அன்பரசு விஜயகுமார் போன்றவர்களையும் சேலத்து மாணவர்களைத் திரட்டிப் போராடிய கார்க்கி போன்றவர்களையும் மறக்க முடியவில்லை. அவர்கள்தான் உண்மையான போராளிகள்…. இன்றைக்கு ஜல்லிக்கட்டுக்காகக் கூட்டம் கூட்டமாகத் தெருவில் இறங்கியுள்ள மாணவர்கள் அல்ல! ரிஸ்க் எடுத்துப் போராடிய அவர்களோடு இவர்களை ஒப்பிடுவதே கூட தவறு!

ஆக மாணவர்களும் இளைஞர்களும் போராடலாமா வேண்டாமா என்பதை அரசின் கிடுக்கிப்பிடி தான் தீர்மானிக்கிறது என்பது தமிழினத்தின் மீது திணிக்கப்பட்டிருக்கும் ஆகப்பெரிய அவமானம். அன்று சொந்த இனத்தின் உயிர்களைக் காக்க ஒன்றுபடாத ஓர் இனம் இன்று மாடுபிடிப்பதற்கான உரிமைக்காகப் போராடத் திரள்கிறது.
மணிகண்டன் மாதிரி நாமும் ‘இப்படியாவது திரள்கிறார்களே’ என்று சந்தோஷப்பட்டாலும் இந்த குறைந்தபட்ச மகிழ்ச்சிக்கிடையே ‘எது வீரம்’ என்கிற கேள்வி மனத்தை உறுத்துகிறது. மாடு பிடிப்பதன் மூலம் தமிழன் வீரத்தை நிரூபிக்க முடிந்தது ரூ என்று முழங்குகிற நண்பர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.

பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருக்கிற ஒரு திடலுக்குள் ஒரு குறுகிய வாயில் வழியாக வலுக்கட்டாயமாக அனுப்பப்படும் ‘மாடு’ என்கிற உயிரின் நிலையிலிருந்து பார்க்கிற எவரும் நமது வீரத்தை நிரூபிப்பதற்கான வழிமுறைகள் குறித்து வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கும். இன்னொரு உயிரை நாம் எப்படியெல்லாம் கேவலப்படுத்துகிறோம்!ஒரு மிகப்பெரிய கூட்டத்தின் ஆரவாரம் பீதியை ஏற்படுத்த அஞ்சி ஓடுகிறது அந்த உயிர். வீராவேசத்துடன் அதை விரட்டுகிறோம் நாம். ஒரு ஒற்றை உயிரை ஓராயிரம் உயிர்கள் விரட்ட எப்படி நடுங்கும் அந்த உயிர்? இதுகுறித்து எவரும் கவலைப் படுவதில்லை.

இவ்வளவுக்கும் பிறகு அந்த உயிரை விரட்டிப் பிடித்துச் சாய்த்தால் பிடிப்பவன் வீரன். சரி….! அதைப் பிடிக்க முடியாவிட்டால் யார் வீரன்?
எந்த விளையாட்டிலும் இருவரில் ஒருவர் வெற்றி பெற்றாக வேண்டுமே! யாரிடமும் பிடிபடாமல் ஒரு மாடு தப்பித்துவிட்டால் அதற்குப் பயிற்சி கொடுத்தவர்தான் வெற்றி பெற்றவர் என்று அர்த்தமா? அதுதான் உண்மையெனில் அதற்குப் பயிற்சி கொடுத்தவரே அந்தக் குறுகலான பாதையின் வழியாக வந்து வெளியே காத்திருப்பவர்களுடன் மோதி வீரத்தை நிரூபிக்கலாமே! ஒரு அப்பாவி விலங்கைப் பீதிக்குள்ளாக்கித் தன்னை வீரனாகக் காட்டிக் கொள்வது என்ன நியாயம்?

வீரம் என்பதற்கான உண்மையான விளக்கத்தை அறிந்தவர்கள் என் கேள்வியைப் புரிந்துகொள்வார்கள். அந்த நம்பிக்கையுடன் தான் இதைக் கேட்கிறேன்.
சிங்கள இலங்கை போராயுதங்களைக் கொண்டே தமிழர்களைப் பணிய வைத்தது. அவற்றைக்கொண்டு தமிழினத்தைக் கொன்றுகுவித்து நடுக்கத்திலேயே வைத்திருந்தது. அந்த நிலையில்தான் தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்தத் தொடங்கினர். 20 இளைஞர்களுடன் இயங்கத் தொடங்கிய பிரபாகரன் என்கிற உன்னதமான வீரன் இளைய தலைமுறையினரின் விடுதலைப் போராட்டத்தில் திருப்பு முனையாக மாறினான்.

அலங்காநல்லூரில் பல்லாயிரக்கணக்கான மனிதர்களின் வெறிக்கூச்சலால் பீதியடைந்து ஓடுகிறது ரூ வாடிவாசல் வழியே வெளியே வருகிற மாடு. இலங்கையில் இந்தக் கதையை மாற்றி எழுதியவர் பிரபாகரன். அளவில் பெரிய இலங்கைப் படையிடம் அளவுக்கதிகமான ஆயுதங்கள். பிரபாகரனுடன் இருபது முப்பது இளைஞர்களும் மிக மிகக் குறைந்த ஆயுதங்ளும்! ஆனாலும் இவர்களைப் பார்த்து ஓட்டம் பிடித்தது ராணுவம்.
ஜல்லிக்கட்டில் பல்லாயிரம் பேரைப் பார்த்து மாடு ஓடுவதும் இலங்கையில் இருபது முப்பது இளைஞர்களைப் பார்த்து ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் ஓடியதும் முற்றிலும் முரணான யதார்த்தம். இங்கே மிரண்டு ஓடுபவை மாடுகள் அங்கே மிரண்டு ஓடியவை சிங்கங்கள்!

பிரபாகரன் உள்ளிட்ட இளைஞர்களைப் பார்த்து சிங்கங்கள் சிதறி ஓடியதைத்தான் வீரத்தின் இலக்கணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கு மாறாக ஆயிரம் பேரின் சத்தத்தால் மிரண்டு ஓடுகிற ஒரு மாட்டை விரட்டிப் பிடிப்பதை வீரமாகக் காட்ட முயல்வது தமிழினத்தின் பாரம்பரிய வீரத்தையே கேள்விக்குறியாக்கிவிடும். இதுதான் பாரம்பரிய வீரமெனில் நமது பாரம்பரியம் குறித்தே ஐயம் எழும்.
மாடு பிடித்தல் ஏறு தழுவுதல் ரூ என்பதெல்லாம் வீர விளையாட்டுகள் அல்ல….

வெறும் வேடிக்கை விளையாட்டுகள்.
வீரம் எப்படி விளையாட்டாக முடியும்?

நாடுகளைப் பிடிப்பதற்காகப் போர்களை நடத்திய ராஜராஜன்களையும் ராஜேந்திரன்களையும் பற்றிப் பேசுகிறது வரலாறு. தங்களது ஆட்சி அதிகாரத்தை விரிவு படுத்தும் நிலப் பேராசையுடன் பெரும் படை மற்றும் கொலை ஆயுதங்கள் மூலம் மற்ற இன அப்பாவி மக்களிடம் தங்கள் வீரத்தைக் காட்டிய அவர்களது கோழைத்தனத்தைப் பாராட்டுவது நேர்மையற்றது.
ராஜேந்திரன்களிலிருந்து வேறுபடு கிறார்கள் பிரபாகரனும் தோழர்களும்! சிங்கள இனத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தாய்மண்ணை மீட்பதற்காக அவர்கள் போரிட்டனர். அது நாடு பிடிக்கும் போரல்ல…. நாட்டை மீட்பதற்கான போர்.
புலிகள் நடத்தியது விடுதலைப் போர். ராஜேந்திரன்கள் நடத்தியது ஆக்கிரமிப்புப் போர். தாய்நாட்டுக்காக தேசபக்தியுடன் போரிட்டவர்கள் வீரர்களா தங்கள் வீரதீரப் பிரதாபத்தைப் பறைசாற்றப் படையெடுத்தவர்கள் வீரர்களா? எது தமிழினத்தின் வீரத்துக்கு உண்மையான அடையாளம்? இதை நமக்கு நாமே கேட்டுக் கொள்வதற்கான வாய்ப்பை ஜல்லிக்கட்டு வழங்கியிருக்கிறது.

ஜல்லிக்கட்டு என்கிற விளையாட்டுக்காக வீதிகளில் இறங்கியிருக்கும் தமிழகம் தமது தாய்மண்ணை மீட்கப் போராடிய மாவீரர்களும் அவர்களை நேசித்த பல்லாயிரம் சொந்தங்களும் கொன்று குவிக்கப்பட்ட போது எங்கே போயிருந்தார்கள் ரூ என்கிற கேள்வி நேர்மையானது. செய்த தவறுக்காக நாம் தலைகுனிந்தாக வேண்டும். என்றாலும் இழைத்த பிழைக்குப் பிராயச்சித்தம் செய்ய இப்போதும் வாய்ப்பிருக்கிறது நமக்கு!
2009ல் இலங்கை நடத்திய இனப்படுகொலைக்கு சர்வதேசத்தின் மூலம்தான் நீதி பெற முடியும். அதற்காகக் குரல்கொடுக்க நாம் வீதியில் இறங்கினால் ஈழத்துச் சொந்தங்களுக்கு நிச்சயமாக நீதி கிடைக்கும். ஜல்லிக்கட்டு தான் தமிழனின் பாரம்பரிய வீரம் என்று நினைத்துத் தெருவில் இறங்குகிற நம்மால் நிஜமான வீரர்களான புலிகளுக்கும் அவர்களை நேசித்ததாலேயே கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் உறவுகளுக்கும் நீதி தேடித்தர வீதிக்கு வரமுடியாதா?

இது விளையாட்டுக்காரர்களின் மண்ணல்ல…. வீரர்களின் மண்…..
ஆங்கிலேயரின் தூக்கத்தைத் தொலைத்த ஊமைத்துரையும் அந்த வீரனுக்கு அடைக்கலம் கொடுத்தால் தூக்கு நிச்சயம் என்பது தெரிந்தே அவனை அரவணைத்த மருது சகோதரர்களும் உலவிய மண். அந்த மாவீரர்களின் பாரம்பரியத்தில் வந்த நாம் மெய்யான வீரத்தைப் போற்றாமல் பொய்மைகளைப் போற்றுவது பொருளற்றது.