2016 டிசம்பர் 31,… தீர்வு நாள்!

457 0

sampanthan-60000-1“தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு, 2016ஆம் ஆண்டுக்குள் தீர்வு காணப்பட்டுவிடும். அதற்கான முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவித விட்டுக் கொடுப்புமின்றி முன்னெடுத்து வருகின்றது. ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட சிங்களக் கடும்போக்குத் தளங்களுடன் கூட நாம் பேசி வருகின்றோம். இந்த ஆண்டுக்குள் தீர்வு கிடைக்கவில்லை என்றால், தமிழ் மக்களுக்கு என்றைக்குமே தீர்வு கிடைக்காது. அதற்கான வாய்ப்புக்களும் எதிர்காலத்தில் அமையாது.”

கனடாவில் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் (ஜனவரி மாதத்தில்) ஊடகவியலாளர்கள் சிலருடனான சந்திப்பொன்றின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கடந்த சில ஆண்டுகளாக, “2016ஆம் ஆண்டுக்குள் (சர்வதேச ஒத்துழைப்போடு) தீர்வு பெற்றுக் கொள்ளப்படும்.“ என்று கூறி வந்த பின்னணியில், அது பற்றி ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, சுமந்திரன் சற்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில் மேற்கண்ட பதிலை வழங்கியதாக சந்திப்பில் கலந்து கொண்ட ஊடக நண்பர் குறிப்பிட்டார்.

இன்று 2016ஆம் ஆண்டின் இறுதிநாள்! சம்பந்தன்- சுமந்திரன் கூற்றுப்படி தீர்வுக்கான நாள்!! அதுபோல, சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல தளங்களிலும் இயங்கும் அரசியல் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் போராளிகளின் காத்திருப்புக்கான கடைசி நாள்!!!

சம்பந்தன், 2017 தீபாவளியை தீர்வுக்கான கால எல்லையாக அண்மையில் நீடித்துவிட்டார். சுமந்திரனோ, வரும் ஆண்டின் முதல் காலாண்டை தீர்வின் அடிப்படைகளை அறிந்து கொள்வதற்கான காலமாக அறிவித்துவிட்டார். ஆனால், செயற்பாட்டாளர்களும், போராளிகளும் தங்களின் கால எல்லையை நீடித்துக் கொள்வதற்கு தயாராக இல்லை. இன்று நள்ளிரவுக்குள் தீர்வைப் பெற்றுக் கொண்டுவிட வேண்டும் என்கிற பெரும் அங்கலாய்ப்போடு இருக்கின்றார்கள். அவர்களின் ஆசையை அவர்கள் நம்பும் இறைவன் சாத்தியப்படுத்த வேண்டும்.

நிற்க,

கடந்த வடக்கு மாகாண சபைத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு வாக்குறுதிகளை தமிழ் மக்களை நோக்கி வழங்கியிருக்கின்றது. அந்த வாக்குறுதிகளின் அடைவு தொடர்பிலான ஏற்பாடுகளில் கூட்டமைப்பு அவ்வளவு முன்னேற்றகரமான அடைவுகளை இதுவரை பதிவு செய்திருக்கவில்லை. கூட்டமைப்பின் முடிவுகளுக்கு பொறுப்பானவர்கள் என்று கூறப்படும் சம்பந்தனும், சுமந்திரனும் கூட மிகப்பெரிய ஏமாற்றங்களை தனிப்பட்ட ரீதியில் சந்தித்திருக்கின்றார்கள். தனிப்பட்ட உரையாடல்களின் போது, அவர்களும் தங்களுடைய ஏமாற்றங்கள் பற்றி பேச எத்தணித்திருக்கின்றார்கள். (ரவிராஜ் படுகொலை வழக்குத் தீர்ப்புக்குப் பின்னரான நாட்களில் சுமந்திரன் பெரும் ஏமாற்றமடைந்த தொனியை ஊடகங்களிலும் வெளிப்படுத்தி வந்திருக்கின்றார்.)

ஆனால், ஒப்பீட்டளவில் பொது உரையாடல் தளத்துக்கு வருகின்ற போது சம்பந்தனும் சுமந்திரனும் தங்களின் அரசியல் நிலைப்பாடுகள் சார்ந்து அளவுக்கு மீறிய நம்பிக்கைககளை அளித்து வந்திருகின்றார்கள். அதை உறுதியானது என்றும் வரையறுத்து வந்திருக்கின்றார்கள்.

உண்மையில் இது சம்பந்தனும் சுமந்திரனும் ஆரம்பித்து வைத்த ஒன்றல்ல. தமிழ்த் தேசிய அரசியல் தோற்றம் பெற்ற காலம் முதல் இருப்பதுதான். அப்போதைக்கு கோலொச்சும் தரப்புக்களும், முடிவுகளை எடுக்கும் நிலையில் இருக்கின்றவர்களும் இப்படி நடந்து வந்திருக்கின்றார்கள். இப்போது அதைக் கொண்டு சுமப்பவர்களில் முக்கியமானவர்களாக சம்பந்தனும் சுமந்திரனும் இருக்கின்றார்கள். இவர்களின் காலத்துக்குப் பின்னும் இவ்வாறான நிலைப்பாட்டோடு புதிதாக யாராவது வருவார்கள். அதில் மாற்றம் ஏற்பட வேண்டும். ஆனாலும், அது சாத்தியமில்லை என்றே நம்புகிறேன். ஏனெனில் தேர்தல் அரசியல் என்பது பெரும் பொய்மைகளினாலும், ஒருவிதமான நம்பிக்கையூட்டல்களினாலும் ஆனது.

சரி, 2016க்குள் தீர்வு கிடைத்துவிடும் என்று சம்பந்தன் கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் கூறிய போது அதனை, எத்தனை வீதமான தமிழ் மக்கள் நம்பிக்கொண்டு கூட்டமைப்புக்கு வாக்களித்தார்கள் என்கிற கேள்வி எழுகின்றது. ஏழு தசாப்தங்களைத் தாண்டிய தங்களின் அரசியலுரிமைப் போராட்டத்திற்கு ஒரு வருட கால எல்லைக்குள் சம்பந்தனாலோ அல்லது வேறு எந்தவொரு கொம்பனாலே இறுதித் தீர்வு பெற்றுக்கொடுத்துவிட முடியும் தமிழ் மக்கள் யாரும் நம்பவும் இல்லை. அதற்காக வாக்களிக்கவும் இல்லை. அப்படியாயின் ஏன் வாக்களித்தார்கள் என்றால், பதில் வேறு தரப்புக்களையும், கட்சிக்காரர்களையும் குறை கூறுவதிலும், அவர்களின் ஆளுமைக் குறைபாட்டினை விமர்சிப்பதிலும் போய் முடியும். (இந்தப் பதிலின் நோக்கம் அதுவல்ல.) அவைதாண்டி, இருப்பதில் எது சிறந்தது என்கிற அடிப்படையே கூட்டமைப்புக்கு வாக்களிக்க வைத்தது. அதுதான் பட்டாவர்த்தனமான உண்மை. அதுதான், ஏற்றாலும் இல்லையென்றாலும் முகத்தில் அறையும் யதார்த்தமும்.

ஆனால், தமிழ் மக்களின் ஏக அங்கீகாரத்தினைப் பெற்றிருக்கின்றவர்கள் என்கிற நிலையில், தேர்தல் அரசியல் நிலைப்பாடுகள், கோசங்கள், சண்டைகள் சச்சரவுகள் தாண்டி ஒரு தார்மீகம் சம்பந்தனுக்கும், சுமந்திரனுக்கும், கூட்டமைப்புக்கும் உண்டு. ஏனெனில், அரசியல் தீர்வு தொடர்பிலான தென்னிலங்கையுடனான உரையாடல்களில் உண்மையில் என்ன நடக்கின்றது, என்பதை அறிந்து கொள்வது தொடர்பில் மக்கள் ஆர்வமாக இருக்கின்றார்கள்.

கூட்டமைப்பு ஆயுதப் போராட்டத்தினை முன்னெடுக்கவில்லை. அவர்களுக்கு இராணுவ இரகசியங்கள் அளவுக்கு பேணப்பட வேண்டிய இரகசியங்கள் என்று பெரிதாக ஒன்றும் இருக்க முடியாது. அதுவும், தீர்வு விடயத்தில் இராணுவ இரகசியம் என்கிற அளவுக்கு எதுவும் இருக்க முடியாது. ஏனெனில், தீர்வு என்பது இறுதியில் மக்களிடம் வரவேண்டிய அவர்கள் சார்ப்பு விடயம். ஆக, தெளிவான விளக்கங்களை மக்களை நோக்கி வழங்க வேண்டிய கட்டப்பாடு கூட்டமைப்புக்கு உண்டு. “இதுதான் நடைபெறுகின்றது… இப்போதைக்கு இதுதான் சாத்தியம்” என்பது தொடர்பிலாவது பேச வேண்டும்.

ஒவ்வொரு கட்டங்களையும் போக்கினையும் மக்கள் அறிந்து கொள்ளுதல் என்பது அவர்கள் தங்களை தயார்ப்படுத்திக் கொள்ளவும், இன்னொரு அணுகுமுறை தொடர்பில் சிந்திக்கவும் உதவும். அது உரிமைகளுக்காக போராடிக்கொண்டிருக்கின்ற இனத்தினர் என்கிற ரீதியில் தமிழ் மக்களுக்கு முக்கியமானது.

தமிழ்த் தேசியப் போராட்டம் இன்றோ, நாளையோ முடிந்து போகும் ஒன்றல்ல. காலாகாலத்துக்கும் நீளப்போகின்ற ஒன்று. ஏனெனில், பூவிசார் அரசியலின் போக்கில் தமிழ் மக்களின் வாழ்விடம் பெற்றிருக்கின்ற முக்கியத்துவம் அப்படிப்பட்டது. ஆக, முடிந்தவைகள், அடைந்தவைகள் தொடர்பில் சம்பந்தனும் சுமந்திரனும் பேச வேண்டும். கட்சி தேர்தல் அரசியலுக்கும் அப்பால் தார்மீகம் ஒன்று உண்டு. அதனைக் கோருவதற்கான உரிமை வாக்களித்தவன் என்கிற ரீதியிலும் தமிழ் மகன் என்கிற ரீதியிலும் எனக்கும் உண்டு.