இனவெறி இலங்கையின் படுதோல்வி! – புகழேந்தி தங்கராஜ்!

329 0

dcp647976749764646விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய யூனியன் நீக்க இருப்பது 2 மாதங்களுக்கு முன்பே வெளிவந்துவிட்ட தகவல். தமிழ்மக்களுக்கு மட்டுமில்லாமல் சர்வதேச ஊடகங்களுக்கும் அது முக்கியச் செய்தி. தமிழினத்துக்கு மகிழ்ச்சியைக் கொடுத்த அந்தச் செய்தி இலங்கைக்கு அதிர்ச்சியைக் கொடுத்ததில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. தடைநீக்கத்தைத் தடுக்க எல்லாநிலையிலும் முயற்சி செய்கிறது அது.

புலிகள் மீதான தடை நீக்கத்துக்கு நிறைய காரணங்கள் இருக்கக் கூடும். தடைநீக்கம் – பிரகடனப்படுத்தப்படும்போது அந்தக் காரணங்களை நாம் அறிந்துகொள்ள முடியும். தடைநீக்கத்துக்கான காரணங்களில் முதன்மையானதாக எது இருக்கும் என்பதை மட்டும் இப்போதே நம்மால் யூகிக்க முடிகிறது.

அந்த விடுதலைப் போராட்ட இயக்கத்தைத் தடை செய்வதற்காக பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் ஏஜென்டுகளால் முன்வைக்கப்பட்ட வாதங்களில் பெரும்பாலானவை – பலவீனமானவை உண்மையற்றவை அவதூறானவை என்பதுதான் அந்த முதன்மைக் காரணமாக இருக்கும்.

2009ல் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் துணையுடன் விடுதலைப்புலிகளை வீழ்த்தியதாக அறிவித்தது இலங்கை. 21 நாடுகள் போட்ட அந்தப் பிச்சைக்கு கோதபாயவும் சரத்பொன்சேகாவும் போட்டிபோட்டுக்கொண்டு சொந்தம் கொண்டாடிய கேலிக்கூத்தெல்லாம் நடந்தது. எங்களால்தான் வெற்றி – என்றார்கள் இருவரும்! சர்வதேச அளவில் இலங்கைக்குக் கிடைத்த படுதோல்வி அது என்பதை அவர்கள் இருவரும் அப்போது அறிந்திருக்கவில்லை.

இப்போது மத்தளத்துக்கு இரண்டுபக்கமும் இடி – என்கிற இக்கட்டான நிலை இலங்கைக்கு! அதன் தலைக்குமேல் கத்திபோல தொங்கிக்கொண்டிருக்கிறது ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம். இந்தக் கத்தி உச்சந்தலையில் இறங்காமல் பார்த்துக்கொள்வது முக்கியமா புலிகள் மீது பாய்ச்சிய விஷம் தோய்ந்த கத்தியைச் சாணை பிடித்து மீண்டும் பாய்ச்சுவது முக்கியமா – என்கிற குழப்பத்தில் இருக்கிறது அது.

2009ல் திட்டமிட்டு நடத்திய இனப்படுகொலை போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமைமீறல்களை மறுத்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயம் ஒருபுறம். ‘அப்படியெல்லாம் நடக்கவேயில்லை’ என்கிற பச்சைப் பொய்யைக் கட்டி அழவேண்டிய கட்டாயம். மறுபுறம் விடுதலைப் புலிகள் மீதான பொய்யுரைகளையும் அவதூறுகளையும் நிரூபித்தாக வேண்டும்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் அப்பட்டமான ஒரு உண்மையை ‘அது முழுக்க முழுக்க பொய்’ என்று மறுக்கவேண்டும் ஒரு பச்சைப் பொய்யை ‘அதுதான் நிஜம்’ என்று தலைகீழாக நின்று சாதிக்க வேண்டும்.

இரண்டிலும் கவனம் செலுத்தினால் இரண்டிலுமே படுதோல்வி அடைவதற்கான வாய்ப்புதான் பிரகாசமாக இருக்கிறது. ஏதாவதொன்றில் கவனம் செலுத்தினால் இன்னொன்றில் தெரிந்தே கோட்டை விடவேண்டியிருக்கும். மைத்திரிக்கு உலைவைக்க அது ஒன்றே போதும் ராஜபக்சக்களுக்கு!

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் புலிகள் மீது சுமத்திய இலங்கை சகல ஆதாரங்களுடனும் 2009 இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் தமிழினத்தைப் பார்த்து அஞ்சி நடுங்குகிறது இப்போது! இந்த விஷயத்தில் புலம்பெயர் தமிழ்ச் சொந்தங்களுக்கு இருக்கிற ஓர்மத்தைப் பார்த்து நமக்கு ஏற்படுகிற வியப்பும் அதைப்பார்த்து வியர்க்கிற இலங்கையின் மனநிலையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.

2009ல் ஒரு இனத்தையே அழித்துவிட்டு வெற்றி வெறியாட்டம் ஆடிய இலங்கை அதற்கான விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிற பரிதாபத்தைக் கண்ணெதிரில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஈழம் தொடர்பான ஒரு முகநூல் பதிவுக்காகவே தமிழ் நாளேடு ஒன்றிலிருந்து நீக்கப்பட்டிருக்கும் தம்பி லோகேஷ் சொல்வதைப்போல ‘வெற்றி பெற்று விட்டதாகச் அறிவித்தவர்கள்தான் அமைதியிழந்து நிம்மதியிழந்து நிற்கிறார்கள் இப்போது!’

இந்தச் சிக்கலிலிருந்து விடுபடுவதற்காக தமிழினத்துக்குள்ளேயே மீண்டும் ஆள்பிடிக்கப் பார்க்கிறார்கள் சிங்களப் பேரினவாதிகள். தங்களது பழைய நயவஞ்சகத்துக்கு நவநாகரீக முலாம் பூசி சர்வதேசத்தின் முன்னால் நிறுத்தப் பார்க்கிறார்கள். தமிழினி எழுதியதாகச் சொல்லப்படுகிற புத்தகத்திலிருந்து’புலிகள் விட்ட பிழை’ என்று நமக்கு போதிக்கிற போன்சாய் புத்தர்கள் வரை அத்தனையையும் அத்தனைப் பேரையும் களத்தில் இறக்குகிறார்கள்.

அடிமாடாக அழைத்துச் செல்லப்படுவதைக் கூட அறியாமல் எதிரில் வருகிற பசுமாட்டை மோகத்தோடு முகர்ந்துபார்க்கிற மேதாவிகளைப் பார்த்துப் பார்த்துப் பழகிவிட்டதாலோ என்னவோ இதையும் வேடிக்கை பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

இந்த ஆழிசூழ் பேருலகில் தங்களது சொந்த மண்ணுக்கு விடுதலை கேட்ட அத்தனைப் போராளிகள் மீதும் ‘பிழைவிட்டார்கள்’ என்கிற குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கிறது. காந்தி பிழைவிட்டார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிழைவிட்டார் – என்றெல்லாம் சகட்டுமேனிக்கு சகதி பூசியவர்கள் பிரபாகரனையும் புலிகளையும் மட்டும் விட்டுவைத்து விடுவார்களா என்ன?

சமரசம் செய்துகொள்ள மறுக்கிற சுத்த வீரர்களைப் பார்த்து ‘ஏன் சமரசம் செய்து கொள்ள மறுக்கிறாய்’ என்று நாக்கொழுத்துக் கேட்பவர்கள் குறித்தெல்லாம் வரலாறு கவலைப்படுவதில்லை. அவர்களது கல்லறைகள் எங்கே என்பதையாவது அடுத்த தலைமுறையால் கண்டுபிடிக்க முடிகிறதா?

ஐரோப்பிய யூனியன் புலிகள் மீதான தடையை நீக்கப்போகிறது என்பது இலங்கைக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே தெரியும். அதனால்தான் 400க்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழர்களைக் கருப்புப் பட்டியலில் சேர்த்தது. அவர்களில் பெரும்பாலானோர் ஐரோப்பிய சமூக நாடுகளில் வாழ்பவர்கள். தங்கள் தாய்மண்ணுக்காக தாங்கள் வாழ்கிற நாடுகளில் நியாயம் கேட்டுப் போராடுபவர்கள். அவர்களை மௌனமாக்கத்தான் தடை கிடை என்றெல்லாம் மிரட்டியது இலங்கை.

அந்தப் புலம்பெயர் உறவுகள் தங்கள் சொந்தத் தாய்மண்ணுக்குத் திரும்பவே முடியாது நிலபுலன்களை அனுபவிக்க முடியாது என்றெல்லாம் மிரட்டியது இலங்கை. இந்த அச்சுறுத்தலைக் கண்டெல்லாம் அஞ்சாமல்தான் நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் புலம்பெயர் உறவுகள்.

புலம்பெயர் தமிழர்களின் இந்த ஓர்மத்தை வெகுவாகப் பாராட்டுகிறார் – இடதுசாரிச் சிந்தனையாளர் சுரேந்திர அஜீத் ரூபசிங்க. ‘தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்கமுடியாது என்று இலங்கை பிடிவாதம் பிடித்தால் புலம்பெயர் தமிழர்களின் ஒருமித்த சக்தியால் தமிழீழக் கோரிக்கை மேலும் வலுவடையும் அதைத் தடுக்க முடியாது’ என்கிறார் அவர்.

தமிழீழம் என்பது முழுக்க முழுக்க கனவு என்பது சிலரது சமீபத்திய வாதம். கிழக்கு திமோரிலிருந்து இலங்கை பாடம் கற்காததைப் போலவே இவர்களும் பாடம் கற்க மறுக்கிறார்கள். ஒன்றரை லட்சம் பேர் கொன்று குவிக்கப்பட்ட ஒரு மண் விடுதலை பெறாமல் போய்விடுமா என்ன?

எழுபதாயிரம் பேர்’தான்’ கொல்லப்பட்டார்கள் – என்கிறார்கள் நல்லிணக்கத்தின் ‘நண்பர்கள்’ சிலர். அவர்கள் சொல்வதிலிருக்கும் ‘தான்’ என்கிற வார்த்தையின் பின்னிருப்பது அவர்களது திமிரன்றி வேறெது? எழுபதாயிரம் உயிர்களைக் கிள்ளுக்கீரையாகக் கருதுகிறார்களா? கொல்லப்பட்டவர்களின் சொந்தங்கள் கொன்று குவித்த மிருகங்களுடன் சேர்ந்து கும்மியடித்து குசலம் விசாரித்து குதூகல வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்கிறார்களா? அதுதான் உண்மையான நல்லிணக்கம் என்கிறார்களா?

புலிகளால் தான் பிரச்சினையே வந்தது அவர்கள் தாக்கியதால்தான் இலங்கை ராணுவம் அப்பாவித் தமிழர்கள் மீது பாய்ந்தது மீண்டும் சுயநிர்ணய உரிமை என்றெல்லாம் பேசினால் மிச்சம் மீதி இருப்பதையும் இழக்க நேரிடும் – என்றெல்லாம் பிரச்சாரம் செய்கிற கோஷ்டி ஒன்று இப்போதும் இருக்கிறது. இந்த கோஷ்டிக்கு இக்கினியாகலை கரும்புத் தொழிற்சாலையில் 150 தமிழ்த் தொழிலாளர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள் எப்போது கொல்லப்பட்டார்கள் என்பது தெரியுமா?

இக்கினியாகலை சம்பவம் நடந்தது 1956ல். சிங்கள இனவெறியைத் தூண்டிவிட்டுப் பிரதமரான பண்டாரநாயக்கா சிங்கள மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற ‘சிங்களம் மட்டும்’ சட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதை எதிர்த்துத் தமிழர்கள் போராடினர். கொழும்பில் நடந்த அறவழிப் போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்களும் தமிழ்மக்களும் கடுமையாகத் தாக்கப்பட்டனர். கொழும்பிலுள்ள தமிழரின் கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. தமிழருக்கு எதிரான இனவெறியாட்டம் நாடு முழுவதும் பரவியது.

அம்பாறை மாவட்டத்தில் குடியேற்றப்பட்ட சிங்களவர்களும் வன்முறைகளில் இறங்கினர். இக்கினியாகலை கரும்புத் தொழிற்சாலையில் வேலை செய்துவந்த தமிழ்த் தொழிலாளர்களை சிங்களத் தொழிலாளர்கள் வெட்டி வீழ்த்தினர். அந்த வெறியாட்டத்தின்போது கொல்லப்பட்டவர்களும் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களுமாக சுமார் 150 பேர் கரும்பாலையின் எரியும் நெருப்பில் வீசப்பட்டனர். சுதந்திர இலங்கை வரலாற்றில் பெரும் எண்ணிக்கையிலான தமிழர்கள் ஒரே இடத்தில் கொல்லப்பட்டது அதுவே முதல்முறை.

இக்கினியாகலை சம்பவம் நடந்து சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகுதான் விடுதலைப் புலிகள் என்கிற அமைப்பே உருவானது. பல ஆண்டுகளாக தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வந்த தமிழினத்துக்குப் பாதுகாப்பு அரணாகத் திகழ்வதற்காகவும் சிங்கள இனவெறியைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் திருப்பி அடிப்பதற்காகவும் உருவாக்கப்பட்டதுதான் – விடுதலைப் புலிகள் அமைப்பு.

புலிகள் அமைப்பு உருவானதால்தான் தமிழர்களைச் சிங்களவர்கள் தாக்கினார்கள் என்று வரலாற்றைத் திரிக்கும் அயோக்கியர்களுக்கு முத்துக்குமார் வாயிலாகத்தான் பதிலளிக்க வேண்டியிருக்கிறது. ‘புலிகள் தமிழருக்கு இழைக்கப்பட்ட கொடுமையின் எதிர் விளைவே தவிர இனப் பிரச்சினைக்கான காரணகர்த்தாக்கள் அல்லர்!’

விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்கி பிரபாகரன் ஒரு மக்கள் சக்தியாக வலுப்பெறும் முன் இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலைகளையும் தமிழின விரோத நடவடிக்கைகளையும் விவரிக்க வேண்டுமென்றால் ஒரு தனிப் புத்தகம் தேவைப்படும். ‘புலிகளால்தான்’ என்று கூசாமல் பேசுபவர்கள் வரலாற்றைத் தேடிப்பிடித்துப் படிக்க வேண்டும்.

நாங்கள் சிங்களவருக்கு அடிமைகளாகக் கிடக்கத்தான் விரும்புகிறோம் – என்று அறிவிப்பதற்கான சகல அதிகாரமும் இவர்களுக்கு இருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்த தமிழினமும் அடிமை வாழ்க்கை தான் வாழவேண்டும் என்று வற்புறுத்த இவர்கள் யார்?

புலிகளுக்கு முன் ‘பறத் தமிழன்’ ‘கள்ளத்தோணி’ என்றுதான் அழைத்தது சிங்கள இனம். அப்படித்தான் கேவலப்படுத்தினார்கள் அந்த மண்ணின் மைந்தர்களை! புலிகளின் எழுச்சிக்குப் பிறகுதான் புலிகளை மட்டுமின்றி ஒட்டுமொத்தத் தமிழனையும் ‘கொட்டியா’ (புலி) என்று அழைத்தது சிங்களம். கள்ளத்தோணி – என்று அழைக்கப்பட்டது தான் கௌரவமாக இருந்தது ‘புலிகள்; என்று அழைக்கப்படுவது அகௌரவம் என்கிறார்களா இலங்கையின் ஏஜென்டுகள்?

இவர்கள் ஏற்றாலும் சரி ஏற்காவிட்டாலும் சரி இன்றைக்கு உலகளாவிய அளவில் விடுதலைப் புலிகளும் பிரபாகரனும் தான் தமிழரின் அடையாளம். அந்த அடையாளத்துக்கான தகுதி நம்மில் அனைவருக்குமே இருக்கிறதா இல்லையா என்பது வேறு விஷயம்.

தமிழரின் விரலாலேயே தமிழரின் கண்ணைக் குத்துவது தான் பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் ஆகப்பெரிய சாமர்த்தியம். வீரர்கள் ஒருபுறமும் காட்டிக்கொடுக்கிற விரல்கள் இன்னொருபுறமுமாகக் கிடந்த தமிழ்ச் சமூகத்தில் தனக்கு முதுகு சொரிகிற விரல்களைத் தேடிப்பிடித்துப் பயன்படுத்திக் கொள்வது இலங்கைக்கு ஒருபோதும் சிரமமான காரியமாக இருந்ததில்லை. அந்த விசுவாசமான விஷ விரல்களைக் கொண்டே காய்நகர்த்தியது இந்த இனத்தின் விடுதலைக்காகப் போராடிய ஓர் இயக்கத்தின் மீது உலகெங்கும் அவதூறு பரப்பியது பரப்புகிறது.

அந்த அவதூறுகளின் அடிப்படையில்தான் விடுதலைப் புலிகள் என்கிற இயக்கம் பல நாடுகளில் தடை செய்யப்பட்டது. இன்று அந்தத் தடை நீக்கப்பட இருக்கிறது என்றால் புலிகள் குறித்த பிழையான கருத்துக்களை விதைப்பதில் வெற்றிபெற்ற இலங்கை அந்தப் பச்சைப் பொய்களை நிரூபிப்பதில் படுதோல்வி அடைந்திருக்கிறது என்று அர்த்தம்.

இலங்கையின் இந்தப் படுதோல்விக்காக சிங்கள இலங்கைக்கும் விஷவிரல்களுக்கும் மட்டுமின்றி சு.சுவாமி முதலான அவுட் சோர்ஸிங் ஆசாமிகளுக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்கள்!