மயில்வாகனம் நிமலராஜன் அர்ப்பணிப்பு நிறைந்த தொழில் நேர்த்தியைக் கொண்ட ஒரு துணிச்சல் மிக்கவராவார்

445 0

மயில்வாகனம் நிமலராஜன் என்ற பெயரானது மத்திய லண்டனில் உள்ள பி.பி.சி தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் வெவ்வேறு நிலையிலுள்ள பணியாளர்களால் ஒவ்வொரு நாளும் பேசப்படும் ஒரு பெயராக மாறியுள்ளது. மயில்வாகனம் நிமலராஜன் அர்ப்பணிப்பு நிறைந்த தொழில் நேர்த்தியைக் கொண்ட ஒரு துணிச்சல் மிக்கவராவார்.

கிட்டத்தட்ட இரண்டு பத்தாண்டுகளுக்கு முன்னர் இவருக்கும் பி.பி.சிக்கும் இடையிலான உறவு ஆரம்பமாகியது.

16 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நாள் காலை வேளை,  நான் எனது வீட்டிலிருந்து எவ்வாறு அலுவலகத்திற்குச் சென்றேன் என்பதை என்னால் நினைவுபடுத்த முடியவில்லை. ஆனால் Bush House  இன் ஏழாவது மாடியிலிருந்த எனக்குப் பொறுப்பாகவிருந்த பிராந்திய ஆசிரியரின் அலுவலகத்தைச் சென்றிருந்தேன் என்பதை என்னால் தற்போதும் நினைவுபடுத்த முடிகிறது.

‘சாம். இது என்னுடைய பொறுப்பு, நான் தோல்வியடைந்து விட்டேன்’ என்பதை மட்டுமே என்னால் அவரிடம் கூறமுடிந்தது. இவ்வாறு கூறியதன் பின்னர் நான் ஒரு சிறுவனைப் போல வீறிட்டு அழுதேன்.

எனது நண்பனும் சகபாடியுமான மயில்வாகனம் நிமலராஜன் கொல்லப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துவிட்டது. தற்போதும் நானே இவனது கொலைக்கும் அதன் பின்னர் இடம்பெற்ற அனைத்திற்கும் நானே பொறுப்பாளி என உணர்கிறேன்.

nimal-funeral

நிமலராஜன், பி.பி.சி சிங்கள சேவைக்கு செய்திகளை வழங்கும் பணியை 1990களின் ஆரம்பத்தில் ஆரம்பித்தான். விரைவில் அவர் சந்தேசய நிகழ்ச்சியின் வழக்கமான பங்காளிப்பாளராக மாறினார். அக்காலப்பகுதியில், இவர் சிங்கள மற்றும் தமிழ் பத்திரிகைகளிலும் எழுதிக்கொண்டிருந்தார்.

எனினும், பி.பி.சி சிங்கள சேவைக்கான இவரது பங்களிப்பானது குறிப்பிடத்தக்கதாகக் காணப்பட்டது. இவரது பல செய்தி அறிக்கைகள் மொழிபெயர்க்கப்பட்டு பி.பி.சி உலக சேவையின் உலகச் செய்தியில் இணைக்கப்பட்டன.

இவரைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு என்னுடையது என்பதை நான் உணர்ந்து கொண்டேன். ஆனால் நான் இந்தப் பொறுப்பைச் செய்யத் தவறிவிட்டேன். என்னால் இவரது உயிரைப் பாதுகாக்கவோ அல்லது இவரது குடும்பத்திற்குப் பாதுகாப்பு வழங்கவோ முடியாது போனது.

ஒரு தடவை நான் செய்தி சேகரிப்பதற்காக யாழ்ப்பாணத்திற்குச் சென்றபோது, யாழ்ப்பாணத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்த ஒரு விடுதியில் தங்குவதற்காக முன்பதிவு செய்திருந்தேன். நான் அந்த விடுதிக்குச் சென்று அங்கிருந்த வரவேற்பாளரிடம் எனது உடைமைப் பையைக் கொடுத்து விட்டு ஒரு சில நிமிடங்கள் கழித்து அந்த இடத்திற்கு வந்தபோது, அங்கே எனது பையுடன் நிமலராஜன் அமர்ந்திருந்ததைப் பார்த்தேன்.

வழமையான புன்னகையுடன் அவர் அமர்ந்திருந்தார். நான் ஏற்கனவே எல்லாவற்றையும் சரிபார்த்து விட்டேன் என நான் அவரிடம் கூறினேன். ‘நண்பா, நீங்கள் யாழ்ப்பாணத்திற்கு வரும்போது, விடுதிகளில் தங்கக்கூடாது. என்னுடன் எனது வீட்டிற்கு வாருங்கள்’ என நிமலராஜன் என்னிடம் தெரிவித்தார். அதன் பின்னர் நான் அவரது மிதிவண்டியில் முன்னால் அமர்ந்தவாறு அவரது வீட்டிற்குப் பயணமாகினேன்.

நானும் நிமலராஜனும், சாமிநாதன் விமலும் அன்று பின்னேரம் தொடக்கம் இரவு ஏழு மணி வரை அதாவது ஊரடங்கு அமுல்படுத்தப்படும் வரை மிதிவண்டியில் யாழ்ப்பாணத்தைச் சுற்றிப் பார்த்தோம்.

நிமலராஜனின் வீடு யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் இராணுவச் சோதனைச் சாவடி ஒன்றுக்கு அருகில் அமைந்திருந்தது. இவரது வீட்டிலில் நாய் குரைக்கும் சத்தத்தை இந்த இராணுவச் சோதனைச் சாவடியில் நிற்கும் எவரும் கேட்கமுடியும். அவ்வளவு கிட்டிய  தூரத்திலேயே நிமலராஜனின் வீடு காணப்பட்டது. இராணுவ வீரர்கள் பலருக்கும் நிமலராஜனைத் தெரியும்.

அன்றிரவு, நிமலராஜனின் தாயார் மற்றும் அவரது மனைவியால் சமைக்கப்பட்ட சுவையான உணவைச் சாப்பிட்டேன். நான் அவர்களின் கிணற்றில் குளித்தேன். அன்றிரவு நிமலராஜனின் குடும்பத்தாரோடு நான் தங்கினேன். நான் அவர்களது குடும்பத்தில் ஒருவராகவே நோக்கப்பட்டேன்.

அன்றிலிருந்து நான் நிமலராஜனின் பெற்றோரை ‘அம்மா, தாத்தா’ என்றே அழைத்தேன். அதுவே நான் நிமலராஜனைச் சந்தித்த இறுதித் தடவையாகும்.

இராணுவச் சோதனைச் சாவடியின் ஊடாகவே கொலையாளிகள் வந்தார்கள்  என்று நான் நம்பினேன்.  அவர்கள் ஊடரங்கு நேரத்தில் சுமார் இரண்டு மணிநேரம் கைகளில் துப்பாக்கிகள், கத்திகள், குண்டுகள் போன்றவற்றுடன் மிதிவண்டிகளில் நடமாடியிருக்கிறார்கள்.

இராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சத்தங்கள் மற்றும் குண்டுச் சத்தங்கள் கேட்ட போது, பதிலுக்கு எதுவும் செய்யாதது ஏன் என்பது விளங்குகிறது. மிதிவண்டிகளில் தப்பிச் சென்ற பயங்கரவாதிகளை நோக்கி அவர்கள் சுடவில்லை.

நிமலராஜனின் வீட்டிற்குச் சென்ற கொலையாளிகள் அவரது தலையைக் குறிவைத்து மூன்று  துப்பாக்கிச் சூடுகள் மேற்கொண்டதுடன் குண்டொன்றையும் வீசினர். நிமலராஜனின் குடும்பத்தவர்களை முழங்காலில் அமர்ந்தவாறு தரையை நோக்கிப் பார்க்குமாறும் கொலையாளிகள் கட்டளையிட்டனர். தம்மை நிமலராஜனின் குடும்ப  உறுப்பினர்கள் எவரும் அடையாளங் கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காகவே கொலையாளிகள் இவ்வாறு கட்டளை வழங்கியிருந்தனர்.

நிமலின் மருமகன் மற்றும் அவரது தாயார் ஆகியோரும் கடும் காயங்களுக்கு உள்ளாகினர்.  தம்மை எவரும் அடையாளம் காட்டிக் கொடுக்கக் கூடாது என எச்சரித்த கொலையாளிகளில் ஒருவர் நிமலின் தந்தையாரின் கழுத்தைக் கத்தியால் வெட்டினர்.

nimalarajan

இந்தச் சம்பவம் இடம்பெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர், டக்ளஸ் தேவானந்தாவிடமிருந்து தனக்கு கொலை அச்சுறுத்தல் வந்ததாக என்னிடம் நிமலராஜன் தெரிவித்திருந்தார்.

அந்தவேளையில், நிமல் தனது ஊடகம் சார்ந்த பணி தவிர, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைச் சட்ட மீறல்கள் தொடர்பான தகவல்களையும் தேர்தல் கண்காணிப்புக் குழுவிற்கு வழங்கி வந்தார்.

இவ்வாறு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால் உடனடியாக யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறுமாறு நான் நிமலிடம் தெரிவித்தேன். அதற்கு ‘சகோதரா, நான் இங்கிருந்து வெளியேறினால் எனது மக்களின் பிரச்சினைகளை யார் இந்த உலகிற்குத் தெரியப்படுத்துவார்கள்?’ என என்னிடம் நிமலராஜன் கேட்டார். அவரது விருப்பிற்கு நான் மதிப்பளித்தேன்.

எனினும், யாழ்ப்பாணத்திலிருந்து தொடர்ந்தும் செய்திகளைப் பெறவேண்டும் என்கின்ற எனது சுயநலம் காரணமாகவே நிமலராஜன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற வேண்டும் என நான் தொடர்ந்தும் வற்புறுத்தாது விட்டு விட்டேனோ என்ற குற்ற உணர்வு தற்போதும் என்னை உறுத்துகிறது.

இவ்வாறு நான் அவரிடம் தொடர்ந்தும் வற்புறுத்தி அவரை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறச் செய்திருந்தால் அவரது உயிரை என்னால் காப்பாற்றியிருக்க முடியும் என நான் நினைப்பதுண்டு.

நிமலராஜன் படுகொலை செய்யப்படுவதற்கு சில மாதங்களின் முன்னர், பி.பி.சி அடையாள அட்டை ஒன்றைத் தனக்கு வழங்குமாறும் இது தனது பாதுகாப்பிற்காகவும், சில தடைகளை இலகுவாகக் கடப்பதற்கும் பயன்படும் என்றும் என்னிடம் தெரிவித்திருந்தார்.

நான் அந்த அடையாள அட்டையை அவருக்குப் பெற்றுக் கொடுக்க முயற்சித்த போது, பகுதிநேரப் பணியாளர்களுடன் ஒப்பந்தம் ஒன்றைப் பேணாது பி.பி.சியால் அடையாள அட்டை வழங்கப்படமாட்டாது என என்னிடம் பி.பி.சி நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பி.பி.சி சிங்கள சேவையின் மூத்த தயாரிப்பாளர் சந்தன கீர்த்தி பண்டார ‘ஹரய’ பத்திரிகையிடமிருந்து ஊடக அடையாள அட்டை ஒன்றை என்னிடம் வழங்கி அதனை நிமலராஜனிடம் வழங்குமாறும் இதன்மூலம் பி.பி.சிக்கான இவரது பணியை இலகுபடுத்த முடியும் எனவும் தெரிவித்தார். இந்த ஊடக அட்டையையே நிமலராஜன் இறுதி வரை வைத்திருந்தார்.

பி.பி.சி சேவையின் விதிமுறைகளுடன் விவாதித்து நிமலராஜனுக்கு ஒரு அடையாள அட்டையைப் பெற்றுக் கொடுக்கத் தவறியதன் மூலம் மீண்டும் நான் இவரது உயிரைப் பாதுகாக்கத் தவறினேன்.

பி.பி.சி தமிழ் சேவை நிமலராஜனை எப்போதாவது மட்டும் பயன்படுத்திக் கொண்டது. இவரது தமிழ் மொழி  அறிவு தரமற்றது என்பதில் பி.பி.சி தமிழ் சேவையின் மூத்த தயாரிப்பாளர் ஆனந்தி சூரியப்பிரகாசம் பிடிவாதமாக இருந்தார். என்னைப் பொறுத்தளவில், இவரது செய்தி அறிக்கைகள் அவரின் ‘நிறைவற்ற’ சிங்களத்தை விட மிகவும் முக்கியமானதாகக் காணப்பட்டது.

ஆங்கில மொழி மூல செய்திகளை ஒலிபரப்புச் செய்யும் பி.பி.சியின் ஊடகப் பணியாளர்களுக்கும் ஏனைய மொழி மூலப் பணியாளர்களுக்கும் இடையில் சில நிறுவன ரீதியான சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. அதாவது வளங்கள், கொடுப்பனவுகள், நிகழ்ச்சிகளுக்கான ஒதுக்கீடுகள், வசதி வாய்ப்புக்கள் போன்றவற்றில் வேறுபாடுகள் உள்ளன.

இதிலும் பி.பி.சியின் சிறிய சேவைகளைப் பொறுத்தளவில் இந்த வேறுபாடுகள் மேலும் அதிகம் காணப்பட்டன. சிங்கள அல்லது தமிழ் மொழி மூல பி.பி.சி செய்தி வாசிப்பாளருக்கு 15 பவுண்ட்கள் வழங்கப்படுகின்றன. இதே தகவல்களைப் பெற்று ஆங்கிலத்தில் வழங்கும் பி.பி.சி செய்தி வாசிப்பாளருக்கு இதன் மூன்று அல்லது நான்கு மடங்கு சம்பளம் வழங்கப்படுகிறது.

வெளிநாட்டு ஊடகப் பணியாளர்கள் சார்பாக இவர்களின் வேதனம் குறைவாகவுள்ளதால் இவர்களால் உறுப்பினர் கட்டணத்தைக் கட்ட முடியாதுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி அதனை எதிர்த்து வர்த்தக சங்கங்கள் குரல் கொடுக்கத் தயங்குகின்றன.

நிமலராஜனின் படுகொலைக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்னர், மத்திய கிழக்கிற்கான பி.பி.சி செய்தியாளரின் சாரதி இஸ்ரேலிய எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட இந்த சாரதியின் குடும்பத்திற்காக பி.பி.சியால் நட்டஈடாக ஒரு தொகைப் பணம் வழங்கப்பட்டது.

பி.பி.சி நிறுவனத்துடன் நிமலாராஜன் எவ்வித ஒப்பந்தத்தையும் கொண்டிராததால் இவரது குடும்பத்திற்காக எவ்வித நட்டஈடும் வழங்கப்படுவது சாத்தியமில்லை என பி.பி.சி நிர்வாகத்தால் என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இதனால் எனது ஏமாற்றமும் குற்றஉணர்வும் இன்னமும் அதிகரித்தது.

சில நாட்களாக இடம்பெற்ற பயங்கரமான முரண்பாடுகள் மற்றும் ஆவேச விவாதங்களின் பின்னர் தனிப்பட்ட சில நபர்களின் உதவியுடன் ஒரு தொகை நிதியை நான் திரட்டினேன்.

நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட கையோடு எஞ்சியிருந்த அவரது குடும்பத்தவர்கள் அவர்களின் சொந்தப் பாதுகாப்பிற்காக மறைந்து வாழவேண்டிய நிலையேற்பட்டது. மிகவும் தீவிரமாகக் காயப்பட்ட நிமலின் தந்தையார், தாயார், மருமகள் மற்றும் மனதளவில் பாதிப்படைந்த நிமலின் மனைவி மற்றும் ஐந்து வயதிற்குக் குறைவான மூன்று பிள்ளைகள் ஆகியோரை சிறிலங்காவிலிருந்து வெளியேற்றும் வரை அவர்களைப் பாதுகாப்பான இடமொன்றில் தங்கவைக்க வேண்டிய தேவையேற்பட்டது.

இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பதினொரு உறுப்பினர்களையும் பாதுகாப்பதற்கான தற்காலிகப் பொறுப்பை கொழும்பிலிருந்த பி.பி.சி செய்தியாளர் பிரான்சிஸ் ஹரிசன் மற்றும் எல்மோ பெர்னாண்டோ ஆகியோர் எடுத்தனர்.

இந்தக் குடும்ப உறுப்பினர்கள் கனடாவிலிருந்த தமது உறவினர்களிடம் செல்ல விரும்பினர். இதனால் இவர்களுக்கான நுழைவுவிசைகளை எடுப்பதற்கான அவசியமான ஆவணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்காக பிரான்சிஸ் கடும் பணியாற்றினார்.

இதேவேளையில், இந்த பதினொரு பேரும் கொழும்பிலிருந்து கனடாவைச் சென்றடைவதற்கான விமானக் கட்டணங்களைச் செலுத்துவதற்கு உதவுமாறு அனைத்துலக மன்னிப்புச் சபையிடம் சந்தன கீர்த்தி பண்டாரவால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

பி.பி.சியிடமிருந்து கிடைக்கப் பெற்ற நிதியில் கனடாவில் ஒரு வீடு வாங்கியதாக நிமலின் தந்தையார் பின்னர் என்னிடம் தெரிவித்தார். நிமலராஜனனின் இறப்பிற்குப் பின்னர் பி.பி.சி நிர்வாகத்துடன் மேற்கொண்ட விவாதங்களை அடுத்து உலகமெங்கும் பி.பி.சிக்காகப் பணியாற்றும் அனைத்துப் பங்காளர்களுடனும் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு பி.பி.சியால் அடையாளப்படுத்தல் பத்திரம் வழங்கப்பட்டன. இது முதலாவது வெற்றியாகும்.

பி.பி.சியுடன் தொடர்புபட்ட அனைத்து சிறிலங்கா வாழ் ஊடகவியலாளர்களின் வீடுகளையும் பிரித்தானியாவிலிருந்து வருகை தந்த பாதுகாப்பு வல்லுனர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர். இந்த வல்லுனர்களின் பரிந்துரைக்கு ஏற்ப இந்த செய்தியாளர்களின் வீடுகளைப் பாதுகாப்பாக அமைப்பதற்கான நிதி பி.பி.சியால் வழங்கப்பட்டன.

நிமலராஜனின் மறைவானது பி.பி.சி நிறுவனத்திற்குள் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு உந்துதல் காரணியாக இருந்துள்ளது எனலாம்.

மத்திய லண்டனில் உள்ள பி.பி.சியின் புதிய தலைமையகத்தின் மேல் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள பத்து மீற்றர் உயரமான நினைவுச் சிற்பத்தில் நிமலராஜனின் பெயர் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு இரவும் உருளை வடிவான இந்தச் நினைவுச் சின்னத்தில் ஒளிரும் விளக்குகள் இந்தப் புதிய கட்டடம் சூழவும் ஒரு கலங்கரை விளக்காகத் திகழ்கிறது.

பி.பி.சியில் பணியாற்றும் வெவ்வேறுபட்ட நிலைகளிலுள்ள பணியாளர்கள்   இப்புதிய கட்டடத்தின் ஐந்தாவது மாடியிலுள்ள மயில்வாகனம் நிமலராஜனின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் கலந்துரையாடல்களில் கலந்து கொள்வதற்காக வரும்போது, மயில்வாகனம் நிமலராஜன் என்ற நீண்ட தமிழ்ப் பெயரை மிகவும் கடினத்துடன் உச்சரிக்கின்றனர்.

மிக அண்மையில் ஒரு நாள், முன்னர் பி.பி.சி மொழிகளுக்கான கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றிய லில்லியன் லண்டோருடன் நான் கதைத்துக் கொண்டிருந்தேன். கொலை அச்சுறுத்தல்கள் தொடர்பாக நான் அவரிடம் குறிப்பிட்ட போது, அவர் அதனை நிராகரித்ததுடன் ‘இது எப்போதும் இடம்பெறுகிறது. இது இத் தொழிலின் ஒரு பகுதியாகும்’ என அலட்சியமாகக் கூறினார்.

சிலவேளைகளில், இவ்வாறான கொலை அச்சுறுத்தல்கள் ஒரு ஊடகவியலாளரின் தொழிலின் ஒரு பகுதியாக அல்லது கொலையாளி ஒருவரின் தொழிலின் ஒரு பகுதியாக இருப்பதில்லை.

16 ஆண்டுகளின் முன்னர், இரவின் கருமையான இருட்டில் துப்பாக்கிகளுடனும், குண்டுகளுடனும் மறைந்திருந்த கோழைகள் நிமலராஜனைக் கொன்றனர். ஆனால் அவர்கள் தோல்வியடைந்தனர்.

ஏனெனில் மயில்வாகனம் நிமலராஜன் தற்போதும் உயிருடன் வாழ்கிறார்.

வழிமூலம் – Sri Lanka Guardian
ஆங்கிலத்தில் – பிரியத் லியனகே
மொழியாக்கம் – நித்தியபாரதி