உருகுவே நாட்டின் முன்னாள் அதிபர் ஜார்க் பட்லே காலமானார்

301 0

201610251105212472_uruguay-ex-president-jorge-batlle-dies-at-88_secvpfஉருகுவே நாட்டின் முன்னாள் அதிபர் ஜார்க் லூயிஸ் பட்லே இபானெஸ் தனது 88-வது வயதில் மோண்டெவீடியோ நகரில் நேற்று காலமானார்.

உருகுவே நாட்டின் அதிபராக கடந்த 2000-2005 ஆண்டுகளுக்கு இடையில் பதவிவகித்த ஜார்க் பட்லே, அண்டைநாடான கியூபாவுடனான உறவுகளை முறித்து கொண்டு அதன் எதிரிநாடான அமெரிக்காவின் தீவிர ஆதரவாளராக மாறினார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மூலம் 1.5 பில்லியன் டாலர்களை கடனாக பெற்று, உருகுவே சந்தித்துவந்த கடுமையான பொருளாதார நெருக்கடியை தனது ஆட்சிக்காலத்தில் இவர் தீர்த்து வைத்தார்.

உருகுவே நாட்டில் போதைப்பொருளான கொக்கைன் பவுடரை சட்டப்படி பயன்படுத்த அனுமதிப்பேன் என்று கூறியதன் மூலம் சர்வதேச அளவில் பரபரப்பும் ஏற்படுத்தினார்.

வெறும் பத்து சென்ட் (ஒரு அமெரிக்க டாலரில் பத்தில் ஒருபகுதி) மதிப்புள்ள இந்த பவுடரை வைத்துதான் கொலம்பியா நாட்டில் பலர் கோடிக்கணக்கான டாலர்களை சம்பாதித்து, அந்தப் பணத்தை வைத்து அங்கு ஆயுதக்குழுக்கள் பெருகி வருகின்றன என்றும் பட்லே குற்றம்சாட்டினார்.

அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த அரசியல்வாதிகளை ‘திருடர்கள் கூட்டம்’ என விமர்சித்தற்காக பின்னாளில் இவர் மன்னிப்பும் கேட்டார்.

சமீபகாலமாக தீவிரமான அரசியலில் ஈடுபடாமல் ஓய்வெடுத்துவந்த பட்லேவுக்கு கால் இடறி கீழே விழுந்ததால் ஏற்பட்ட ரத்தகட்டை நீக்குவதற்காக உருகுவே தலைநகரான மோண்டெவீடியோ நகரில் ஆபரேஷன் நடைபெற்றது.

நாளை தனது 89-வது பிறந்தநாளை கொண்டாடவிருந்த ஜார்க் லூயிஸ் பட்லே இபானெஸ் அந்த சிகிச்சை பலனின்றி தனது 88-வது வயதில் நேற்று காலமானார்.