யாழ் மாவட்ட செயலகம் பல்கலை மாணவர்களால் முற்றுகை-(காணொளி) பல்கலை மாணவர் ஒன்றியத் தலைவரின் கருத்தும் காணொளியில் இணைப்பு

396 0

jaffna-kachcheryயாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் ஆளுநர் செயலகம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் இன்று காலை முற்றுகையிடப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நடராஜா கஜன் மற்றும் பவுண்ராஸ் சுலக்சனின் கொலைக்கு நீதி கோரி, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், யாழ்.மாவட்ட செயலகம் மற்றும் ஆளுநர் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மற்றும் ஊழியர்களை உள்ளே செல்ல அனுமதிக்காது மாணவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

இதன்போது யாழ்.மாவட்ட செயலகத்தின் அனைத்து வாயில்களையும் மாணவர்கள் பூட்டிவைத்திருந்தனர்.
அத்துடன், ஏ9 வீதியை மறித்தும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவுள்ள ஏ9 வீதியின் நடுவில் இருந்து மாணவர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், தமிழ் மாணவர்கள் மீதான அடக்குமுறையை நிறுத்து, மாணவர்கள் உயிரைப் பாதுகாக்காத நீங்களா மக்களின் உயிரைப் பாதுகாக்கப்போகின்றீர்கள், மாணவர்களின் கொலைகளை படுகொலை என்ற அடிப்படையில் விசாரித்து நீதி வழங்குங்கள், படுகொலை என்பது தமிழனுக்கு விதிக்கப்பட்ட விதியா போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளையும் ஏந்தியவாறு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றைய போராட்த்தில் 500இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து மாணவர்களின் கொலைக்கு நீதி கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு வடமாகாண ஆளுநர் மற்றும் அரசாங்க அதிபர் ஊடாக அனுப்புவதற்கான அறிக்கை கையளிக்கப்பட்டதை அடுத்து மாணவர்கள் போராட்டத்தை நிறுத்தினர்.

இதேவேளை, கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேறும் வரை பல்கலைக்கழங்கள் இயங்காது என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட அமைதிப் போராட்டத்தின் பின் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு வழங்கியுள்ள மகஜரில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட மாணவர்களுக்கு ஒரு மாதத்திற்குள் நீதி வழங்கப்பட வேண்டும் எனவும், கொல்லப்பட்ட மாணவர்களை பட்டதாரிகளாகக் கருதி அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கொல்லப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரனைகள் பக்கச்சார்பின்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர்கள் நீதி கோரிய கண்டண அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட மாணவர்களின் தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்த வெளியேறிய சட்டத்தரணிகளை உள்ளடக்கிய விசாரணைக்குழு ஒன்றினை அமைத்து அதன் மூலமும் விசாரனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பல்கலைக்கழக சட்டமாணவர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.