சிங்கள பேரினவாத அரசின் ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலை எண்ணத்தையே மாணவர்களின் மீதான படுகொலை சுட்டிக்காட்டுகின்றது .

410 0

தமிழர் தாயகத்தில், யாழ் நகரில் நேற்றைய தினம் அதிகாலை 23 வயதுடைய உயர்கல்வி மாணவன் நடராசா கஜன் மற்றும் 24 வயதுடைய பவுன்ராஜ் சுலக்சன் ஆகிய இருவரும் கோரமான முறையில் சிங்கள பேரினவாத காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

இவ்விரு யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் மீதான இப்படுகொலை தொடரும் சிங்கள பேரினவாத அரசின் ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலை எண்ணத்தையே சுட்டிக்காட்டுகின்றது.

இப்படுகொலையை மூடி மறைக்க குறிப்பிட்ட சம்பவம் நடந்த இடத்துக்கு யாரையும் செல்ல அனுமதிக்காமல்,வாகன விபத்தில் தான் இரு மாணவர்களும் இறந்துள்ளார்கள் என ஆரம்பத்தில் காவல்துறை அதிகாரிகள் பொய் சொல்ல எடுத்த முயற்சி, மருத்துவ பரிசோதனைகளாலும் ,சம்பவம் நடந்த அருகாமையில் வசிப்பவர்களாலும் முறியடிக்கப்படுள்ளது.
icet-logo

கொல்லப்பட்ட ஒரு மாணவனின் குடும்பத்தாரிடம் காவல்துறை அதிகாரிகள் ரகசியமான முறையில் மாணவனின் அடக்க நிகழ்வுக்கு நிதி தருவதாகவும் கூறியுள்ளார்கள். மாணவனின் குடும்பம் இவ் உதவியை முற்றாக நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழர் தாயகத்தில் நிலை கொண்டுள்ள சிங்கள ராணுவமயமாகத்தாலேயே இவ்வாறான கட்டமைப்புசார் தமிழினப் படுகொலைகள் நல்லாட்சியென சிங்கள அரசால் சொல்லப்படுகின்ற இந்தக் காலத்திலும் தொடர்ந்த வண்ணம் உள்ளதென்பதை சர்வதேச நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

அத்துடன் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்படாத சாதாரண சூழலில் காவல்துறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள வேண்டுமாயின் முறையாக அதற்குரிய அனுமதி உயர் மட்டத்தில் எடுக்கப்பட்டு உத்தரவு வழங்கப்பட்ட பின்னரே மேற்கொள்ள முடியும், ஆகையால் சிறீலங்கா காவல்துறையால் மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கி பிரயோகமானது ஏலவே தீர்மானிக்கப்பட்ட உயர்மட்ட உத்தரவுக்கமைவாகவே நடைபெற்றிருக்கின்றதென்பதால் 
கொலையினை மேற்கொண்டு அதனை மூடிமறைக்க நினைத்த இலங்கை அரசிடமிருந்தே இதற்கான நீதியினை எதிர்பார்க்க முடியாதென்பதால் இப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நாம் வலியுறுத்தி நிற்கின்றோம்.

படுகொலை செய்யப்பட்ட இரு மாணவர்களின் குடும்பங்களோடும் ,உறவுகளோடும்,நண்பர்களோடும் மற்றும் சக உயர்கல்வி மாணர்வர்களோடும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை ஆகிய நாம் எமது ஆழ்ந்த துயரத்தை பகிர்ந்துகொள்வதோடு, மாணவர்களுக்கு மலர் தூவி வணக்கம் செலுத்துகின்றோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை