மக்கள் விரோத பாதையில் பயணிப்பவர்கள் வரலாற்று குப்பையில் வீசப்படுவது உறுதி!

513 0

நீண்ட நெடுங்காலமாக நீடித்து நிலைபெற்றுவரும் தமிழர் வீர வரலாற்றுடன் சமாந்தரமாக தொடர்ந்தே வருகின்றது துரோக வரலாறும். இன்று நாடற்றவர்களாக நாதியற்று நாம் நிற்பதற்கும் அதுவே அடிப்படைக் காரணமாகும்.

வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் தமிழர்களின் மரபுவழித் தாயகமாக விளங்கிவரும் தமிழீழ மண்ணின் இறையாண்மையினை நிலைநிறுத்துவதற்கும் பூர்வ குடிகளான தமிழர்களின் இருப்பினை காப்பதற்குமாக காலத்திற்கு காலம் தமிழர் தாயகம் பல போராட்டங்களைச் சந்தித்தே வந்துள்ளது.

அந்தவகையில் உலக விடுதலைப் போராட்ட வரலாற்றில் முப்படைக் கட்டமைப்பை நிறுவிய ஒரே இயக்கம் என்ற சாதனையுடன் பல்வேறு போரியல் சாதனைகளைப் படைத்து தமிழர்களின் காப்பரணாகத் திகழ்ந்த தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பெரும் பின்னடைவைச் சந்தித்ததுடன் ஆயுதங்களை மௌனிக்கச் செய்து மறைவாகியுள்ளமைக்கு தமிழினத் துரோகமே அதிமுக்கிய காரணமாகும்.

உலகம் வியக்கும் இராணுவ வெற்றிகளின் மூலம் உலகப் போராட்ட வரலாற்றில் தடம்பதித்த தமிழீழ விடுதலைப் போராட்டம், விடுதலைக்காக போராடிவரும் ஒரு இனத்தில் அந்த இனத்தவரே துரோகியாகி அந்த இனத்தின் பேரழிவிற்கும், பெருந்துயரத்திற்கும் காரணமாக விளங்கிவருவதன் அண்மித்த உதாரணமாகத் திகழ்ந்துவருமளவிற்கு துரோகத்தின் கோரப்பிடிக்குள் சிக்குண்டுள்ளது.

karஆயுத மௌனிப்பின் பின்னர் அரசியல் ரீதியாக தமிழர்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான முன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த ஏழாண்டுகாலத்திலும் தமிழினத் துரோகமே பெரும் சவாலாக எம்முன் விசுவரூபம் எடுத்து நிற்கின்றது.

குறிப்பாக தாயக அரசியல் வெளிக்குள் பின்வாசல் வழியாக உள்நுழைந்த சுமந்திரனின் தமிழர் விரோத செயற்பாடுகளே அவரை தமிழினத் துரோகத்தின் மொத்த உருவமாக இனம்காட்டியுள்ளது.

ஒற்றையாட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் இயங்கும் சிங்கள பௌத்த பேரினவாதக் கட்டமைப்புக்குள் தன்னை ஓர் அங்கமாக்கி பல்லாண்டுகள் பணியாற்றியதன் மூலம் அடிபணிவென்பது மரபணுவில் பதியமாகிய நிலையிலேயே தாயக அரசியலுக்குள் பிரவேசித்த சுமந்திரன் இன்று தமிழ் மக்களின் அரசியல் முகவரியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தன்வசப்படுத்தி தமிழின விடுதலைப் பாதையில் பெரும் தடையாக உருவெடுத்துள்ளான்.

அவித்தால் இட்லி, சுட்டால் தோசை என்ற வேறுபாடுதானே தவிர இரண்டுக்கும் அடிப்படையான மா ஒன்றுதான் என்பதுபோல் ஒற்றையாட்சி கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்படும் அரசியலமைப்புத் திருத்தத்தில் வார்த்தை வேறுபாடுகளுக்குள்ளாகவே தமிழர்களின் தேசிய அபிலாசைகளை குழிதோண்டிப்புதைக்கும் கைங்கரியத்திலும் சுமந்திரனின் வகிபாகம் இருந்து வருகிறது.

தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள மிருகங்களுக்கு தக்க பாடம் புகட்டுவதுடன் தமிழ் மக்களின் தலைமையாக தமிழர்களே இருக்க முடியும் என்பதனையும் உலகிற்கு உரைக்கும் விதமாக எமது உறவுகள் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அளித்திருந்த வாக்குகளின் அடிப்படையில் கிடைத்த பாராளுமன்றப் பிரதிநிதுத்துவங்களை அடமானம்வைத்து சிங்கள தேசத்தின் எதிர்க்கட்சி தலைவராக கோலோச்சிவரும் சம்பந்தனும் இனப்பிரச்சினைக்கான தீர்வு புதிய அரசியலமைப்பிற்குள் இருப்பதாகக் கூறி ஏமாற்ற முற்பட்டுள்ளமை சுமந்திரன் வகுத்த துரோகத்தனத்தின் வெளிப்பாடேயாகும்.

சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்தில் ஊறித்திழைத்த சிங்களத் தலைவர்களிடம் இருந்து தமிழர்களின் தேசிய அபிலாசைகளுக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்கப்போவதில்லை என்பதன் வெளிப்பாடுதான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உருவாக்கமும் வளர்ச்சியுமாகும். ஆள் மாற்றத்தின் அடிப்படையிலான இன்றைய ஆட்சி மாற்றமும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதன் வெளிப்பாடாகவே ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணி அமைந்துள்ளது.

ஆயுத மௌனிப்பின் பின்னர் சூன்யமாகிப்போன தாயக அரசியல் வெளியில் கைவிடப்பட்ட தமிழர்களுக்கு வழிகாட்டும் கலங்கரையாக வட மாகாண முதல்வர் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் காலத்தின் அருங்கொடையாக எமக்கு வாய்த்திருக்கின்றார்.

நீதி நியாங்களை காலில்போட்டு நசுக்கி, தமிழர் உரிமைகளை குழிதோண்டிப் புதைத்து, பிராந்திய-உலக வல்லாதிக்க நலன்களின் அடிப்படையிலமைந்த நல்லாட்சி(?) அரசை அவர்கள் விரும்பியவாறு முன்னகர்த்திச் செல்லவிடாது தடுத்து தாமதப்படுத்திவரும் ஒரே காரணத்திற்காக முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் சுமந்திரனின் நீண்டநாள் இலக்காக இருந்துவருகிறார்.

நல்லாட்சி கோசத்திற்குள் தமிழர்கள் தொடர்ந்தும் வஞ்சிக்கப்பட்டு வருவதன் வெளிப்பாடாக பேரெழுச்சியுடன் நடைபெற்ற ‘எழுக தமிழ்’ பேரணியைத் தொடர்ந்து சிங்களத் தரப்பு ஒரே குரலாக ஒன்றுபட்டு வட மாகாண முதல்வர் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களை எதிர்த்தும் மிரட்டியும் வருகின்றமை எதிர்பார்த்த விடயமாக இருக்கின்ற நிலையில் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் அந்த அணியின் குரலாக மூர்க்கமாக எதிர்ப்பதன் மூலம் தம்மைத் தாமே அம்பலப்படுத்தியுள்ளார்கள்.

தமிழ் மக்களால் சனநாயக வழியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை பகிரங்கமாக மிரட்டுவதுடன் நின்றுவிடாது கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ள சிங்களத்து எதிர்ப்பாளர்களின் இனவாதத்தை கண்டிக்க வக்கில்லாத சுமந்திரனும் சம்பந்தனும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அறவழியில் மக்களை ஒன்றுதிரட்டி பிரகடனம் செய்துள்ள முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களை இனவாதியாக சித்தரிக்க முற்படுவது துரோகத்தின் அதி உச்சநிலையாகும்.

யாரை தமது அரசியல் தலைமையாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற புரிதலுக்கு தாயகத் தமிழர்கள் வந்துவிட்டார்கள் என்பதன் வெளிப்பாட்டினை முற்றவெளியில் கண்ணுற்ற பின்னராவது மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பலம்சேர்ப்பதை விடுத்து பலவீனப்படுத்தி சந்தர்ப்பம் கிடைத்தால் இல்லாதொழிப்பதற்கு கங்கணம் கட்டிநிற்பதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழர்களுக்கு எதிரான சிங்களத்தின் செயற்பாடுகளை மூடிமறைத்து அனைத்துலக அரங்கில் சிங்களத்தை பிணையெடுக்கும் சட்டம்பி வேலையை செய்துவரும் சுமந்திரனின் சிங்கள விசுவாசத்திற்கு எச்சரிக்கையாகவே முற்றவெளி ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணி அமைந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான அனைத்துலக தடைக்காக உலகெங்கும் ஓடோடி பொய்யுரைத்து காரணமாக இருந்த லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலையுடன் வெற்றிடமாகியிருந்த தமிழினத் துரோக அரியணையில் முன்னவர்களையும் மிஞ்சிய சிங்கள விசுவாசியாக கொலுவிருக்கும் சுமந்திரன் தொடர்ந்தும் அதே தடத்தில் பயணிப்பாராயின் வரலாற்று குப்பையில் வீசப்படுவது உறுதி.

‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; இறுதியில் தர்மமே வெல்லும்’

ஆசிரியர் தலையங்கம்.
குறியீடு இணையம்.