நிஜமான போராளிகளின் இலக்கணம் – புகழேந்தி தங்கராஜ்

496 0

vaiko-thalaivarகலைஞர் கருணாநிதிக்கு 1989 பிப்ரவரி 22ம் தேதி எழுதிய கடிதத்தை ‘எனது பெரு மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய அண்ணா அவர்களுக்கு’ என்றுதான் தொடங்கியிருக்கிறார் பிரபாகரன். சரளமான நடை. தெளிவான கருத்துகள். இதற்கெல்லாம் மேலாகக் குறிப்பிடப்பட வேண்டியது – கடிதத்தின் எந்த இடத்திலும் பாசாங்காக எதுவும் சொல்லப்படவில்லை என்பது. அதிலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் வெளிப்படையானது உள்நோக்கமற்றது.

என்றாலும்இ 27 ஆண்டுகள் கழித்து அந்தக் கடிதத்தைப் படிக்கிறபோது நமக்குள் ஒரு வியப்பு இயல்பாகவே எழுகிறது. 1989க்குப் பின்னான நிகழ்வுகளுக்குக் கூட அந்தக் கடிதம் பொருந்தி வருவது எப்படி என்கிற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை.

பிரபாகரனின் எழுத்தாற்றல் என்றோ அவரது அரசியல் கணிப்பு என்றோ இதை எடுத்துக் கொள்ள முடியாவிட்டாலும் கூட நிச்சயமாக அது ஒரு யதார்த்தவாதியின் கருத்து. இத்தகைய கருத்துக்கள் தணலின் மேலிருக்கும் பால் போன்று எந்தக் காலக்கட்டத்திலும் உயிர்ப்புடனேயே இருக்கும் எவராவது ஒருவருக்கு யதேச்சையாகப் பொருந்தும். அன்று இயல்பாக பிரபாகரன் சொன்னது இன்று கருணாநிதிக்குப் பொருந்தியிருக்கிறது அவ்வளவுதான்! பின்னவரின் பிழைகளே காலங்கடந்த இந்தப் பொருத்தத்துக்குக் காரணம்.

வைகோ எப்படியொரு இக்கட்டான தருணத்தில் ஈழத்துக்குச் சென்றுள்ளார் என்பதைக் குறிப்பிடும்போது ‘எமது மக்கள் இதுவரையும் நம்பியிருந்த பாராளுமன்றத் தலைமை எமது மக்களை இன்று நட்டாற்றில் விட்டுவிட்டு தமது அற்பப் பதவிகளுக்காக இனத்தைக் காட்டிக்கொடுக்க முனைந்துள்ள வேளையில்’ வை.கோபாலசாமி அண்ணன் இங்கே வந்திருக்கிறார்… என்று குறிப்பிடுகிறார் பிரபாகரன்.

பிரபா எழுதியிருப்பதை ஒருமுறை முழுமையாகப் படித்துப் பாருங்கள். இலங்கையில் தமிழ்த் தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டவர்கள் மீது 1989ல் பிரபாகரன் சுமத்துகிற குற்றச்சாட்டில் ஒரே ஒரு வரியை மாற்றி – ‘எமது மக்கள் இதுவரையும் நம்பியிருந்த தமிழகத் தலைமை….’ என்று மாற்றி வாசித்துப் பாருங்கள். 2009ல் கலைஞர் பிரானின் அரசு செய்த இனத்துரோகத்தை முன்கூட்டியே கணித்த கணிப்பாகவே மாறிவிடுகிறது அது. இதற்கு கருணாநிதி தான் காரணமே தவிர பிரபாகரன் எப்படிப் பொறுப்பாவார்?

பிரபாகரனைச் சந்திப்பதற்காக வைகோ மேற்கொண்ட கடல்பயணம் மிக மிக ஆபத்தானது. இலங்கைக் கடற்படை மட்டுமின்றி இந்தியக் கடற்படையும் புலிகளைத் துப்புரவாகத் துடைத்து எறியத் துடித்த நாட்கள் அவை. அப்படியொரு நிலையில் வைகோ சென்ற படகு ராணுவத்தின் தாக்குதலுக்கு ஆளானது எதிர்பாராததல்ல! அதையும் தனது கடிதத்தில் குறிப்பிடுகிறார் பிரபாகரன்.

‘அவர் இங்கு வரும்போதும் கடலில் சுண்டிக்குளத்தில் வைத்து அவர் வந்த விசைப்படகின் மீது இந்திய ராணுவத்தால் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது. நல்லவேளை அவரது உண்மையான கள்ளம் கபடமற்ற தமிழ்ப் பற்று அவரைக் காப்பாற்றியது……’ என்கிறார் பிரபாகரன்.

1989ல் பிரபாகரன் எழுதிய இந்த வரிகளுக்கு அப்போது எந்த உள்ளர்த்தமும் இருந்திருக்க முடியாதுதான். 2009க்குப் பிறகான காலக்கட்டத்தில் அதைப் படித்துப் பார்க்கையில் ‘கள்ளம் கபடமற்ற தமிழ்ப் பற்று’ என்கிற வார்த்தை மனத்தைத் தைக்கிறது. வைகோவின் தமிழ்ப் பற்றை ‘கள்ளம் கபடமற்ற தமிழ்ப் பற்று’ – என்று பிரபா எழுதியிருக்கிறாரென்றால் கள்ளத்தனமான கபடத்தனமான வெளிவேஷத் தமிழ்ப் பற்று – என்கிற மற்றொன்று இருப்பதாகத் தானே பொருள்!

2009ல் தமிழகத்தில் அரியணையிலிருந்த பெரியவரின் கள்ளத்தனத்தையும் கபடத்தையும் நீலிக்கண்ணீரையும் நாம் இன்னும் மறந்துவிடவில்லை மறந்துவிடவும் கூடாது. நமது ஒன்றரை லட்சம் உறவுகளின் உயிரிழப்புக்கு ஆகப்பெரிய காரணமாய் இருந்தது அரியணையில் அமர்ந்திருந்தவர்களின் அயோக்கியத்தனம் தான்! அதை மறைக்க முயல்வது நடந்த இனப்படுகொலையையே மறைக்க முயல்வது! அதையெல்லாம் கிளறாதீர்கள் – என்று அறிவுறுத்துபவர்களால் ராஜபக்சவை எப்படி கூண்டில் நிறுத்த முடியும்?

வைகோவின் தமிழ்ப்பற்று உண்மையானது கள்ளங்கபடமற்றது – என்பதைச் சுட்டிக்காட்டுகிற பிரபாகரனின் கடிதம் இன்றைய அரசியல் சூழலில் கபட வேடதாரிகளின் முகத்திரையைக் கிழிக்கிறதென்றால் அது காலம் கடந்த ஓர் ஆவணமாகத் தானே இருக்க முடியும்!

‘தனது உயிரையும் பொருட்படுத்தாது எவ்வளவோ சிரமங்களுக்கு மத்தியில் அடர்ந்த கானகத்தின் நடுவே என்னையும் என் தோழர்களையும் சந்தித்துப் பேச வந்துள்ள (அவரது) துணிச்சலையும் தமிழ்ப் பற்றையும் பார்க்கும்போது நான் எனது மொழிக்காகவும் தமிழீழ நாட்டிற்காகவும் இன்னும் 1000 தடவை இறக்கலாம் என்னும் மனத்தென்பே ஏற்படுகிறது…….’ என்பது பிரபாகரனின் தெளிவான விளக்கம்.

ஒரு பத்திரிகையாளனாக ‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு’ என்றெல்லாம் உதார் விடுகிறவர்களையே பார்த்துக் கொண்டிருந்தவன் நான். (பார்த்துக் கொண்டிருப்பவனும் கூட!) ராஜீவின் அரசியல் அறியாமையால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதி காப்புப் படை அத்துமீறல்களில் இறங்கியபோது – ‘அது இந்தியப் படையா இலங்கையின் கூலிப்படையா’ என்று ராஜீவிடம் நேருக்கு நேராகக் கேட்ட வைகோவின் துணிவு கண்டு வியந்து போயிருக்கிறேன்.

‘மிஸ்டர் ராஜீவ்காந்தி எனக்குப் பதிலளிக்காமல் எங்கே ஓடுகிறீர்கள்’ என்று வைகோ கேட்டது ராஜீவை மட்டுமல்ல ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தையும் அதிர வைத்திருக்கும். ஊடகங்களின் வாயிலாக பிரபா அதை அறிந்திருக்கக் கூடும். ஆபத்தான கடல் பயணத்தின் மூலம் அந்தத் துணிவை நேரடியாகவே அறிந்தபிறகு ‘அவரது (வைகோவின்) துணிச்சலையும் தமிழ்ப் பற்றையும் பார்க்கும்போது எனது மொழிக்காகவும் ஈழத்துக்காகவும் இன்னும் 1000 தடவை இறக்கலாம் என்னும் மனத்தென்பே ஏற்படுகிறது…….’ என்று பிரபா எழுதியதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

‘எம்மைப் பொறுத்தவரை நாம் எந்த லட்சியத்துக்காக ஆயுதமேந்திப் போராடினோமோ அந்த லட்சியத்தில் வென்று வாழ்வோம்… அல்லது அந்த லட்சியத்துக்காக சந்தோஷத்துடன் மடிவோம்….’ என்பது அந்தக் கடிதத்தின் வாயிலாக பிரபாகரன் வெளியிட்டிருக்கிற பிரகடனம். பிரபாகரன் போன்ற மேலான லட்சியத்துடன் வாழுகிற மெய்யான போராளிகள் – இப்படித்தான் பேச முடியும் இப்படித்தான் வாழ முடியும். அவர்களுக்கு வார்த்தையும் வாழ்க்கையும் வேறுவேறல்ல!

‘சந்தோஷத்துடன் மடிவோம்’ என்கிற இரண்டே வார்த்தைகளில் ஒளிர்கிற பிரபாவின் ஓர்மத்தை உற்றுக் கவனிக்கும் எவரும், DO OR DIE என்பது தான் ஓர் உண்மையான போராளியின் இலக்கணம் என்பதை உணர்ந்துகொள்ள முடியும். அந்த இலக்கணத்துக்கு பிரபாகரனும் விதிவிலக்கல்ல வைகோவும் விதிவிலக்கல்ல!

புலிகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல்கொடுப்பதுடன் தன்னுடைய கடமை முடிந்துவிட்டது என்று வைகோ நினைத்திருந்தால் அவர் வெறும் நாடாளுமன்றவாதி! ஈழ மக்கள் அனுபவித்துக் கொண்டிருந்த இன்னல்களை மேடைகளில் விவரித்து விவரித்து வார்த்தை வியாபாரம் மட்டுமே செய்துகொண்டிருந்திருந்தால் அவர் வெறும் பேச்சாளர். இந்த எல்லைகளைத் தான் மீறத் துணிந்தார் வைகோ.

ஈழத்தை இந்தியப் படைகள் முற்றுகையிட்டிருந்த நிலை. இந்திய – இலங்கை கடற்படைகளைக் கடந்து தமிழகத்திலிருந்து ஒரு துரும்புகூட ஈழத்துக்குப் போகமுடியாத அளவுக்கு இரும்புத் திரை. அப்படியொரு நிலையிலும் பிரபாகரனையும் தோழர்களையும் சந்தித்தே ஆகவேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார் வைகோ. அங்கே நடக்கிற அநீதிகளை நேரில் கண்டுவந்து அம்பலப்படுத்த வேண்டும் – என்கிற அந்த ஓர்மத்தில் ஒரு பேச்சாளனின் குரலையும் நாடாளுமன்றவாதியின் அறிவையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்நிற்கிறது – ஒரு போராளியின் முகம்.

அந்தக் கடல் பயணம் எவ்வளவு ஆபத்தானது என்பது வைகோவுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும். அது தனது இறுதிப் பயணமாகவே கூட இருக்கலாம் என்பது தெரிந்தே தான் தான் நேசித்த பிரபாவைப் பார்க்கப் புறப்பட்டிருக்கிறார்.

ஒருவேளை சுண்டிக்குளத்திலோ வேறொரு கடல் பகுதியிலோ வைகோவின் மூச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருந்தால் இங்கே என்ன நடந்திருக்கும்? ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை எப்படிச் சுட்டுக் கொல்லலாம் – என்ற கண்டனங்கள் ஒருபுறமும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சட்டவிரோதமான ஒரு பயணத்தை மேற்கொள்ளலாம் – என்கிற எதிர்வாதம் இன்னொரு புறமுமாக வார்த்தைப் போர் நடந்திருக்கும்.

‘கலிங்கப்பட்டி காளையே இந்த அண்ணனிடம் சொல்லாமல் போக எப்படி மனம் வந்ததடா உனக்கு’ என்று முரசொலியில் முழுப்பக்கத்துக்கு கடிதம் எழுதி வைகோ விவகாரத்தால் கொந்தளிக்கும் இளைஞர்களை போலிக்கண்ணீரால் சமாளித்திருப்பார் கலைஞர். அதற்குப் பிறகு ஆண்டுதோறும் ஜனவரியிலோ பிப்ரவரியிலோ நினைக்கக் கூடிய வீரத் தியாகியாக்கிவிட்டிருப்பார் வைகோவை!

எது எப்படியோ வார்த்தையையே வாழ்க்கையாக்கிக் கொண்ட ஓர் அறிவார்ந்த அரசியல்வாதியைத் தமிழகம் இழந்திருக்கும். தங்களது நிஜமான நண்பன் ஒருவனைப் புலிகள் இழந்திருப்பார்கள். உண்மை உரைக்க அஞ்சாத ஓர் உறுப்பினரை நாடாளுமன்றம் இழந்திருக்கும். தனது மெய்யான தளபதியை கழகம் இழந்திருக்கும்.

இதையெல்லாம் அறிந்தும் ‘அப்படி மடிந்தால் சந்தோஷத்துடன் மடிவோம்’ என்கிற ஓர்மத்துடன் நெஞ்சார நேசித்த ஒரு நிஜமான போராளியை நேரில் பார்க்க வைகோ புறப்பட்டது – அசட்டுத் துணிச்சலில்லை…. அநியாயத் துணிச்சல். அதற்கான பாராட்டுரைதான் பிரபாகரனின் கடிதம்.

வைகோ பற்றி பிரபா குறிப்பிட்டிருப்பதில் மிகைப்படுத்தல் எதுவுமில்லை. உள்ளதை உள்ளபடி உளமாரப் பாராட்டும் பாங்கு மட்டுமே இருக்கிறது. இதை வேறொரு கோணத்தில் சொன்னால்தான் விளங்கும் என்பதாலேயே எதைப் பேசக்கூடாது என்று நினைத்தேனோ அதைப் பேசியிருக்கிறேன் இப்போது!

மரண பயத்தைத் துறந்தவன் எவனோ அவன்தான் உண்மையான வீரன். இது காலங்காலமாக வரலாறு கற்றுத்தருகிற பாடம். லட்சக்கணக்கான பாரசீக வீரர்களை எதிர்க்க தன்னுடைய தாய்மண்ணான ஸ்பார்டாவின் வாயிலில் முன்னூறு வீரர்களுடன்தான் நின்றிருந்தான் மாவீரன் லியோனிடாஸ். ஹெர்குலஸ் வம்சத்தில் வந்த அவன் ‘நமக்கு இன்றைய இரவு உணவு விண்ணுலகத்தில்தான்’ என்று அந்த இக்கட்டான நிலையிலும் புன்னகை மாறாமல்தான் சொன்னான்.

‘எங்களுக்கு நினைவுச் சின்னம் வேண்டாம்… எங்களைப் போற்றுகிற பாடல்கள் வேண்டாம்…. எங்களுக்குக் கண்ணீரஞ்சலி செலுத்த வேண்டாம்…! நானும் என்னுடைய 300 தோழர்களும் ஸ்பார்டாவின் சுதந்திரத்தைக் காக்க உயிரைக் கொடுத்திருக்கிறோம்…… அதை நீங்கள் மறக்காமலிருந்தாலே போதும்’ என்கிற லியோனிடாஸின் வேண்டுகோள் கால வெள்ளத்தில் கரைந்து போகாதது.

உண்மையான வீரர்களைக் கண்டு மரணம்தான் அஞ்சியிருக்கிறதே தவிர மரணத்தைக் கண்டு அவர்கள் அஞ்சியதில்லை. விடுதலைப்புலிகள் அப்படித்தான் இருந்தார்கள். மடியும்போது கூட மகிழ்ச்சியுடன்தான் மடிந்தார்கள். ஆயுதம் தாங்கிய யுத்தக்களங்களில் மட்டுமில்லாமல் ஆயுதமேந்தாத அகிம்சைக் களங்களிலும் அவர்கள் அப்படித்தான் இருந்தார்கள். தியாக தீபம் திலீபனின் வரலாறு அதற்குக் கண்கூடான சான்று.

இந்தியாவிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுத்த அயோக்கிய சிங்கள அரசும் ‘கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்று’ என்று வற்புறுத்தக் கூட மறுத்த அலட்சிய ராஜீவ் அரசும் ஈவிரக்கமின்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க அந்தக் கல்நெஞ்சக்காரர்களின் கண் முன்னாலேயே கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியது திலீபனின் உயிர்.

உயிர் அடங்கிய வேளையில் கூட ‘எமது மக்கள் தமக்கான விடுதலையைத் தாங்களே தேடிக் கொள்வார்கள்’ என்று அறிவிக்கிற துணிவும் தெளிவும் இருந்தது திலீபனுக்கு!

யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் பேரணி வெற்றிகரமாக நடந்த இரண்டே நாட்களில் திலீபனின் நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது. திலீபனின் நினைவைப் போற்றி போராளியான செந்தோழன் எழுதியிருந்த கவிதை ஒன்று ‘எதற்காக மடிகிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள்’ என்கிற லியோனிடாஸின் கூற்றை நினைவுபடுத்துவதாக இருந்தது.

‘எங்கள் பார்த்தீபன்
பசியோடுதான் இருப்பான்…