தேர்தல் பார்வையாளர்கள் முழு ஒத்துழைப்புடன் பணியாற்ற வேண்டும்

319 0

201609290840105536_state-election-commissioner-advice-election-observers-should_secvpfஉள்ளாட்சி தேர்தல் நியாயமாகவும், அமைதியாகவும் நடைபெற தேர்தல் பார்வையாளர்கள் முழு ஒத்துழைப்புடன் பணியாற்ற வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் அறிவுரை வழங்கினார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. 37 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலில் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் தலைமை தாங்கினார். செயலாளர் த.சு.ராஜசேகர், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி கமிஷனருமான கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தேர்தல் பார்வையாளர்களுக்கு, மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் வழங்கிய அறிவுரைகள் வருமாறு:-

* வாக்காளர் பட்டியல்கள் தேவையான எண்ணிக்கையில் உள்ளனவா? என்று சரிபார்க்க வேண்டும்.

* அதிகமான அளவில் வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்ய வேண்டும்.

* பெறப்பட்ட வேட்பு மனுக்களின் விவரங்களை அறிந்து வைத்திருக்க வேண்டும்.

* தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பணிகளுடன் தொடர்புடைய அலுவலர்கள் கூட்டத்தை நடத்த வேண்டும்.

* வாக்குப்பதிவு மற்றும் அது தொடர்பான பொதுமக்களின் குறைகளையும், புகார்களையும் தொடர்புடைய மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் தீர்த்து வைக்க வேண்டும்.

* கட்சி அடிப்படையில் வாக்குச்சீட்டுகள் அச்சடித்தல் குறித்து மேற்பார்வை செய்ய வேண்டும்.

* மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் மூலம் வாக்கு எண்ணிக்கை மையங்களில் தேவைப்படும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

* தேர்தல் நடத்தை விதிகளை உறுதியாக பின்பற்ற வேண்டும். விதிமீறல்கள் ஏதேனும் இருப்பின் புகார் செய்ய வேண்டும்.

* தேர்தல் முடிவுற்றது தொடர்பாக அறிக்கை அனுப்ப வேண்டும்.

* வாக்கு எண்ணிக்கையை பார்வையிட வேண்டும். முடிவறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

* உள்ளாட்சி தேர்தல் நியாயமாகவும், அமைதியாகவும் நடைபெற தேர்தல் பார்வையாளர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து பணியாற்ற வேண்டும்.

மேற்கண்ட அறிவுரைகளை தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் வழங்கினார்.