யாழில் தியாகி திலீபனின் நினைவேந்தல் (காணொளி)

389 0

thileepan

 

தியாகி திலீபனின் 29வது ஆண்டு தினம் இன்று குடாநாட்டின் பல பகுதிகளிலும் அனுஸ்டிக்கப்பட்டது.
1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து செப்டம்பர் 15-1987ஆம் ஆண்டு நல்லூர் வீதியிலே நீராகாரமின்றி 15 நாட்கள் உண்ணாவிரதமிருந்து 26ஆம் திகதி தியாகச் சாவடைந்த தினம் இன்று யாழ்குடாநாட்டில் பல இடங்களிலும் அனுஸ்டிக்கப்பட்டது.

 

நல்லூர் வடக்கு வீதியில் அமைந்துள்ள சிதைக்கப்பட்ட திலீபனின் நினைவுத்தூபியடியில் இன்று அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.
சிதைக்கப்பட்ட தூபியில் திலீபனின் புகைப்படம் வைக்கபட்டு தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராசா, வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான எஸ்.சுகிர்தன் மற்றும் சிவயோகன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் உட்பட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

 
வடக்குக் கிழக்கில் மீள்குடியேற்றம் என்ற பேரில் சிங்களக் குடியேற்றம் நிறுத்தப்பட வேண்டும், சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் மீள்பெறப்பட வேண்டும் மற்றும் வடக்குக் கிழக்கில் புதிய பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் ஆகிய ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
இதேபோன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலும் தியாகி திலீபனின் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.