முல்லைத்தீவில் பசு மாடுகளின் அழிவைத் தடுத்த நிறுத்த கோரிக்கை

311 0

cow

முல்லைத்தீவு மாவட்டத்தில் பசு மாடுகளின் அழிவைத் தடுத்து நிறுத்துவதற்கு வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 
முல்லைத்தீவு உடையார்கட்டு மாகா வித்தியாலயத்தில் நடைபெற்ற வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கால்நடை நடமாடும் வைத்திய சேவை நிகழ்வில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வசிக்கின்ற ஒரு குறிப்பிட்ட குழுவினர் மேய்ச்சலுக்காக விடப்படுகின்ற மாடுகளை கடத்தி காட்டுப்பகுதியினூடாக வவுனியா ஈரட்டைப்பெரியகுளம் எல்லையைத் தாண்டி கொண்டு சென்று இறைச்சிக்காக விற்பனை செய்வதாக குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் குறித்த மாடுகடத்தும் செயற்பாடானது நாளும் இடம்பெறுவதனால் இதனை உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

 
இன்றைய கால்நடை நடமாடும் வைத்திய சேவை நிகழ்வில் கால்நடை வளர்க்கும் பயனாளிகளுக்கான துருப்பிடிக்காத பால் பெற்றுக் கொள்ளும் பாத்திரங்கள் மற்றும் கால்நடைகளுக்கான உணவுப் பொருட்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.
கால்நடை நடமாடும் வைத்திய சேவையினூடாக நாய்களுக்கான கருத்தடை சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு நோய்களுக்கான சிகிச்சைகளும் வழங்கப்பட்டன.

 
நிகழ்வில் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் க.சிவநேசன், வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் எஸ்.வசீகரன், கால்நடை வைத்திய அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.