‘எழுக தமிழ்’ மக்களெழுச்சி : ஓரணியில் நிற்கவேண்டிய தமிழ் தலைமைகள்

389 0

elukatamil-300x164ஒரு மக்களெழுச்சிக்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்து வரும் கட்சிகளான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்று பிரதான அரசியல் கட்சிகளும் மேற்படி மக்களெழுச்சிக்கு ஆதரவு தெரிவித்திருப்பதுடன் அதற்கான செயற்பாடுகளிலும் தங்களை ஈடுபடுத்தியிருக்கின்றனர். மேலும் வடகிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தி இயங்கிவரும் சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் இயங்கிவரும் புத்திஜீவிகள் ஆகியோரும் இதற்கான ஆதரவை வழங்கிவருகின்றனர்.

விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் பலமாக இருந்தவரைக்கும் உள்ளுக்குள்ளும், சர்வதேச அளவிலும் விடுதலைப் புலிகள் இயக்கமே தமிழ் மக்களின் அரசியல் பலமாக இருந்தது. இந்தியாவிலும், பல மேற்குலக நாடுகள் மத்தியில், விடுதலைப் புலிகள் ஒரு தடைசெய்யப்பட்ட அமைப்பாக இருந்த போதிலும் கூட, விடுதலைப் புலிகளை தவிர்த்து எந்தவொரு விடயத்தையும் இலங்கையில் முன்னெடுக்க முடியாது என்பதை அனைவருமே ஏற்றுக்கொண்டிருந்தனர். ஆனால் 2009இற்கு பின்னரான இலங்கையின் அரசியல் சூழலில் தமிழ் மக்களை கருத்தில்கொண்டு எந்தவொரு விடயத்தையும் முன்னெடுக்க வேண்டுமென்னும் நிர்பந்தம் எவருக்குமில்லை. உள்நாட்டளவிலும் சரி, சர்வதேசளவிலும் சரி தமிழர்களின் விருப்பு வெறுப்புக்களை உள்வாங்க வேண்டுமென்னும் தேவையை ஒரு முக்கியமான, முதன்மையான விடயமாக எவருமே கருதுவதுமில்லை. அனைவருமே வெறும் உதட்டளவிலான ஆர்வத்தையே காண்பித்துவருகின்றனர். இதற்கு என்ன காரணம்?

இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, தமிழ் மக்கள் தங்களின் நிர்பந்திக்கும் ஆற்றலை முற்றிலுமாக இழந்துவிட்டனர். இரண்டு, தமிழ் மக்களின் சார்பில் உறுதியாக குரல்தரவல்ல, தகுதியுடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்முரண்பாடுகளால் தனது நிர்பந்திக்கும் ஆற்றலை முற்றிலுமாக இழந்துகிடக்கிறது. இவ்வாறானதொரு சூழலில்தான் தாங்கள் எதையும் செய்யலாம் என்னும் உத்வேகத்தை கொழும்பின் ஆட்சியாளர்கள் பெற்றனர். இந்த இடத்தில் இப்பத்தியின் வாதிடலை கேள்விக்குள்ளாக்கும் வகையில் எவரேனும் கேள்விகளை முன்வைக்கலாம். அவையாவன, ராஜபக்ச ஆட்சியில் இருந்திருந்தால், இவ்வாறானதொரு எழுச்சி பற்றி நீங்கள் பேசியிருப்பீர்களா? ஆட்சி மாற்றமொன்று ஏற்பட்டதால்தானே இப்படியெல்லாம் உங்களால் பேச முடிகிறது! இதில் பகுதியளவில் உண்மையுண்டு. ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய விடயம் ராஜபக்சவின் காலத்தில் சர்வதேச அழுத்தம் இன்றிருப்பது போன்றா இருந்தது? முக்கியமாக அமெரிக்க அழுத்தம் இன்றிருப்பது போன்றா இருந்தது? இல்லையே! எனவே அன்றைய சூழலில் ராஜபக்சவின் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா, அமெரிக்கா உட்பட்ட பல மேற்குலக நாடுகள் இருந்ததுடன், அதன் மூலமான அழுத்தங்களும் எங்களுக்கு சாதகமாகவே இருந்தது. எனவே அந்தச் சூழலை சீர்குலைக்கும் நோக்கில் தமிழர்களின் நடவடிக்கை அமையக் கூடாது என்னும் வகையிலேயே அன்றைய அசியல் நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டன. ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு பின்னரான நிலைமைகள் சிலர் நம்பிக்கையூட்டியளவிற்கு தமிழ் மக்களுக்கு சாதகமாக அமையவில்லை. இந்தப் பின்னணியில் நோக்கினால், ஆட்சி மாற்றமானது, தமிழ் அரசியல் சூழலில் ஒரு மயான அமைதியை ஏற்படுத்தி, அந்த அமைதிக்குள் தமிழர்களின் 70 ஆண்டு கால அரசியல் கோரிக்கைகள் அனைத்தையும் பெறுமதியற்றதாக மாற்றுவதற்கான சூழ்ச்சியையும் உட்கொண்டிருந்தது. ஆனால் இதிலுள்ள துரதிஸ்டம் என்னவென்றால் இதனை வலியுறுத்த வேண்டிய பொறுப்பிலிருந்த தலைமை அதனைச் செய்யவில்லை.

இவ்வாறானதொரு சூழலில்தான் தமிழ் மக்கள் பேரவை என்னும் மக்கள் அமைப்பு, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு எவ்வாறு அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்வாலோசனை வரைபொன்றை வெளியிட்டது. நான் மேலே குறிப்பிட்ட மூன்று பிரதான அரசியல் கட்சிகளும், சுயாதீன அரசியல் நிபுனர்களும் இணைந்து குறித்த தீர்வாலோசனை வரைபை உருவாக்கியிருந்தனர். அந்த தீர்வாலோசனை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கு அமைவாகவே அமைந்திருந்தது. அதாவது இணைந்த வடக்கு கிழக்கில் சமஸ்டி கட்டமைப்பின் கீழான அரசியல் தீர்வு. அரசாங்கம் புதிய அரசியல் யாப்பொன்றை கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையிலேயே, பேரவை மேற்படி தீர்வோலோசனையை முன்வைத்திருந்தது. உண்மையில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கி, அது போன்றதொரு தீர்வு ஆலோசனையை முன்வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர் அதனை மேற்கொள்ளாத நிலையிலேயே தமிழ் மக்கள் பேரவை இவ்வாறானதொரு முயற்சியை முன்னெடுத்திருந்தது. ஆனாலும் அரசாங்கம் அதனை பொருட்படுத்தவில்லை அத்துடன் அரசாங்கம் அவரச அவசரமாக பல்வேறு விடயங்களை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இதிலுள்ள மிகவும் ஆபத்தான பக்கம் என்னவென்றால், அனைத்துமே தமிழ் மக்களின் பூரண ஒத்துழைப்புடன்தான் நடந்தேறிவருவதான தோற்றமொன்றே காண்பிக்கப்படுகிறது. அது உண்மைதானா? இதற்கான பதிலே மேற்படி தமிழர் எழுச்சிக்கான ஏற்பாடாகும்.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிருவரும் 24ஆம் திகதி இடம்பெறவுள்ள மேற்படி மக்களெழுச்சியானது, பின்வரும் நான்கு கோரிக்கைளை முன்னிறுத்தியிருக்கிறது. தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்துநின்று, அதன் தனித்துவத்தை அழிக்கும் வேலைத்திட்டங்களில் பங்கேற்று பாதுகாப்புமளிக்கும் சிங்கள பௌத்த அரச ஆயுதப் படைகள் எமது மண்ணிலிருந்து அகற்றப்படல் வேண்டும், கடந்த முப்பது வருடங்களாக அரச படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் எமது மக்களின் பூர்வீக நிலங்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும், இறுதி யுத்தத்தின் போதும், அதற்கு முன்னரும் பின்னரும், கடத்தப்பட்டு, சரணடைந்து பின்பு காணாமால் ஆக்கப்பட்ட ஒவ்வொரு தமிழ் மகனும் மகளும் எங்கிருக்கிறார்கள் என்ன நடந்தது என்பது கண்டறியப்பட்டு பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும், அனைத்து அரசியல் கைதிகளும் நிபந்தனையின்றி உடன் விடுவிக்கப்படல் வேண்டும், யுத்தக் குற்றங்கள், இனஅழிப்புத் தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓரு முழுமையான சர்வதேச பக்கசார்பற்ற விசாரணை நடாத்தப்பட வேண்டும். மேலும் இவையெல்லாம் மீண்டும் ஏற்படாவண்ணம், தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட சமஸ்டித் தீர்வுத் திட்டத்தின் பிரகாரம் இணைந்த வடகிழக்கில் தமிழர் தேசம் அதன் தனித்துவமான இறைமை, சுயநிர்ணய உரிமை என்பனவற்றின் அடிப்படையில் புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும்.

மேற்படி கோரிக்கைகள் தவறானவையென்று எவரால் கூற முடியும்? இவ்வாறானதொரு மக்களெழுச்சி தொடர்பில் சிந்திக்கப்படுகிறது என்னும் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, இதனைத் தடுப்பதற்கான சில முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனாலும், கூட்டமைப்பின் சிரேஸ்ட தலைவர்களான சித்தார்த்தன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் உறுதியான நிலைப்பாட்டை தெரிவித்ததால் எழுச்சியை தடுக்கும் முயற்சிகள் பெரியளவில் வெற்றியளிக்கவில்லை என்றே அறிய முடிகிறது. ஆயினும் இவ்வாறானதொரு மக்களெழுச்சியில் மக்கள் அதிகளவில் பங்குகொள்வதை விரும்பாத சக்திகள் மேற்படி எழுக தமிழுக்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுத்துவருவதாகவும் அறிய முடிகிறது.

கூட்டமைப்பின் தலைவர்களை பொறுத்தவரையில் தமிழரசு கட்சி மற்றும் டெலோ ஆகியவை மேற்படி எழுக தமிழ் தொடர்பில் இதுவரை எதுவித அபிப்பிராயங்களையும் பகிரங்கமாக தெரிவித்திருக்கவில்லை. சம்பந்தன் இதுபோன்ற முயற்சிகளை எப்போதுமே ஆதரித்தவரல்ல. அவர் 1977இல், அரசியலில் பிரவேசித்த காலத்திலிருந்து அவர் எப்போதுமே மக்கள் போராட்டங்களில் பங்குகொண்டவருமல்ல அவற்றை ஆதரித்து நின்றவருமல்ல. ஆனால் மாவை சேனாதிராஜாவின் வரலாறு அப்படியல்ல. மாவை மக்கள் போராட்டங்களோடு தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஒருவர். அதற்காக சிறையும் சென்றவர். இராணுவத்தினரின் தாக்குதலுக்குள்ளாகியவர். இந்தப்பின்புலத்தில் நோக்கினால் மாவை சேனாதி மக்களின் நியாயமான போராட்டங்களுக்கு எதிராக செயற்படக் கூடிய ஒருவரல்ல. அது அவரின் இயல்புக்கும் மாறான ஒன்று. குறிப்பாக யாழ்ப்பாணத்து அரசியல் உணர்வுவோட்டத்தை மாவை நன்கறிந்தவர். இதற்கு சிறந்த உதாரணமாக சம்பந்தன் சிங்கக் கொடியை உயர்த்திமைக்கு எதிராக, மறுநாளே மாவை பகிரங்க மன்னிப்புக் கோரியதை குறிப்பிடலாம். உண்மையில் இதுபோன்ற மக்களின் நிகழ்வுகளின் போது, தமிழ்த் தலைமைகள் தங்களின் ஒற்றுமையை காண்பிக்க வேண்டும்.

கூட்டமைப்புக்குள்ளும் கூட்டமைப்புக்கு வெளியிலும் இயங்கும் அனைத்து தரப்பினரும் தங்களின் தனிப்பட்ட முரண்பாடுகளுக்கு அப்பால் இதில் பங்குகொள்வார்களென்னும் எதிர்பார்ப்பு பேரவையிடம் இருக்கிறது. அவ்வாறு எவரேனும் தங்களின் ஆதரவை வழங்கினால் அதனை வரவேற்க வேண்டியதும் பேரவையின் கடமையாகும். தனிப்பட்ட முரண்பாடுகளை காவித்திரிவதற்கு இது எவரதும் குடும்ப விவகாரமும் அல்ல. இது மக்களின் பிரச்சினை.

ஒடுக்கப்பட்ட மக்களிடம் இருக்கின்ற ஒரே பலம் அவர்களின் ஒன்றிணைந்த, ஒருமித்த குரல் மட்டுமே. எனவே மக்கள் தங்களின் விழிப்புநிலையை வெளிப்படுத்துவதற்கான புறச்சூழல் இருக்கின்ற போது, அந்த மக்களை அணிதிரட்டி வழிநடத்த வேண்டியதே அரசியல் தலைமைகளின் கடப்பாடாகும். இதற்கு மாறாக சிந்திப்பவர்கள் யாராக இருப்பார்கள்? எனவே தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் மேற்படி ‘எழுக தமிழ்’ மக்களெழுச்சியை எதிர்த்துநிற்பவர்கள், உண்மையில் எதனை ஆதரிக்க விரும்புகின்றனர்? அவர்கள் வடகிழக்கில் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை ஆதரிக்கின்றனரா? காணாமல் ஆக்கப்பட்ட, கடத்தப்பட்ட, கொல்லப்பட்ட தமிழ் உறவுகளுக்கு நியாயம் கிடைக்கக் கூடாதென்று விரும்புகின்றனரா? தமிழ் மக்களுக்கு நேர்ந்த அனியாயத்திற்கு சர்வதேச விசாரணையொன்று தேவையில்லையென்று கருதுகின்றனரா? சமஸ்டிக் கட்டமைப்பின் கீழ் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வு தேவையில்லையென்று கருதுகின்றனரா? மேற்படி கேள்விகளுக்கெல்லாம் ‘ஆம்’ என்று பதிலளிப்பவர்கள் அனைவரும் நிச்சயமாக மேற்படி மக்களெழுச்சியை தடுக்கவே முற்படுவர்.

மக்கள் அதனை நோக்கி அணிதிரளாதவாறு போலியான பிரச்சாரங்களை செய்வர். இல்லையென்று பதிலளிப்பவர்கள் அனைவரும் எழுக தமிழுடன் அணிதிரள்வர். எழுச்சிகொள்ளும் மக்கள் கூட்டமொன்றே தங்களுக்கான புதிய வரலாற்றை படைக்கின்றது.

யதீந்திரா