இக்கரையில் சமர்த்தர் அக்கரையில் சம்பந்தர் – புகழேந்தி தங்கராஜ்

461 0

141021140923_sampanthar_sambanthar_tna_640x360_bbc_nocreditதமிழக அரசியலிலும் சரி ஈழத்து அரசியலிலும் சரி மூத்தவர்களின் துரோகத்தில் மூழ்கித்தான் மூச்சுத் திணறுகிறது தமிழினம். கடலுக்கு இந்தப்புறம் கலைஞரென்றால் அந்தப்புறம் சம்பந்தர். தமிழினத்தின் இடுப்பை முறிக்க இவர்கள் இருவருக்குமேல் இன்னொருவர் தேவையேயில்லை.

‘இலங்கை நடத்திய தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி தேவை’ ‘குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்து’ என்கிற குரல் எட்டுத்திக்கிலிருந்தும் ஒலிக்கிறது. அது உலகின் மனசாட்சியை உலுக்குகிறது. அதை அறியாதவர் போன்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேச திருவாளர் ராஜவரோதயம் சம்பந்தரால் மட்டும்தான் முடியும்.

தமிழர்கள் தனிநாடு கேட்கவில்லை அதிகாரப் பரவலையும் சம உரிமையையும் தான் கேட்கிறார்கள் – என்பது இந்த வாரத் தொடக்கத்தில் சம்பந்தர் கொடுத்திருக்கும் விசுவாச வாக்குமூலம். ‘இப்படியொரு உத்தரவாதத்தை இப்போதே கொடு’ – என்று சிங்கள எஜமானர்கள் கேட்டார்களா? அல்லது ‘நாளைக்கே ஈழத்தை வாங்கிக்கொடு’ என்று தமிழர்கள் வற்புறுத்தினார்களா? அவர்களும் அப்படிக் கேட்காத நிலையில் இவர்களும் இப்படி வலியுறுத்தாத நிலையில் என்ன நோக்கத்துடன் பேசியிருக்கிறார் சம்பந்தர்?

ஒட்டுமொத்தத் தமிழினமும் இலங்கை அரசின் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு நீதி கேட்டுக் கொண்டிருக்கிற நிலையில் ‘தமிழர்கள் தனிநாடு கேட்கவில்லை’ என்று சம்பந்தர் பேசுவதை ‘உளறல்’ என்று ஒதுக்கிவிட முடியவில்லை. இது ஒரு திட்டமிட்ட திசை திருப்பல். சிங்கள அரசாங்கம் புள்ளி வைக்கிறது அந்தப் புள்ளியைச் சுற்றி வட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார் சம்பந்தர்.

‘பிக் பாக்கெட் திருடனைப் பார்த்தீர்களா’ என்று கேட்டால் ‘பஸ் டிக்கெட்டுக்குக் காசில்லையா’ என்று திருப்பிக் கேட்கிறவன் ஒன்று – காது கேளாதவனாக இருக்க வேண்டும் அல்லது கள்வனின் காதலனாக இருக்க வேண்டும். சம்பந்தருக்குக் காது கேட்கவில்லை என்றா நினைக்கிறீர்கள்!

காகிதத்தில் கீறியிருக்கிற ஒரு கோட்டை அழிக்காமலேயே அதைச் சிறியதாக்க இருக்கிற ஒரே வழி அதன் அருகில் அதை விடப் பெரிய கோடு ஒன்றைக் கீறுவது. இந்த வேலையில் கலைஞர் கருணாநிதி சமர்த்தர். எந்த வேளையில் அவரிடமிருந்து சம்பந்தர் இதைக் கற்றார் என்பது தெரியவில்லை.

2009ல் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்கிற போர்வையில் எமது அப்பாவி ஈழ உறவுகளை அடியோடு அழித்தொழிக்க கொத்துக் குண்டுகளையும் பாஸ்பரஸ் குண்டுகளையும் ரசாயன ஆயுதங்களையும் கண்மூடித்தனமாகப் பயன்படுத்தியது சிங்கள இலங்கை. அவை அனைத்துமே இந்த நவநாகரிக உலகால் தடை செய்யப்பட்டவை.

அந்தக் கொடுமையைத் தட்டிக் கேட்காமல் இந்தியாவும் சர்வதேசமும் மௌனம் சாதித்தது கொடுமையென்றால் உலகத் தமிழினம் மீண்டும் மீண்டும் எச்சரிக்கை மணி அடித்தும் 26வது மைலில் அரியணையிலிருந்த நவீன மனுநீதிச் சோழன் சுருண்டடித்துப் படுத்துக் கொண்டது அதைவிடக் கொடுமை.

கூப்பிடுதொலைவில் நடப்பது இனப்படுகொலை என்பதும் கொன்று குவிக்கப்படுபவர்கள் அப்பாவித் தமிழர்கள் என்பதும் சர்வநிச்சயமாகக் கலைஞர் கருணாநிதிக்குத் தெரியும். அவர்களைப் பாதுகாக்க விடுதலைப் புலிகளால் மட்டுமே முடியும் என்பதும் தெரியும். இனப்படுகொலைக்கு முட்டுக்கட்டையாக புலிகள் இருந்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களை நிராயுதபாணிகளாக்கியது சொக்கத்தங்கம் சோனியாதான் என்பதும் தெரியும்.

இவை எல்லாவற்றையும் அறிந்திருந்தும் தான் அமர்ந்திருக்கும் முதல்வர் நாற்காலிக்கு முட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பது சோனியாதான் என்பது கருணாநிதிக்குத் தெள்ளத்தெளிவாகத் தெரிந்திருந்தது. மஞ்சள்துண்டால் கண்களை மூடிக்கொண்டார். அது இந்த இனத்தின் சாபக்கேடு.

கலைஞர் கருணாநிதிக்கும் சம்பந்தருக்கும் இடையிலான வித்தியாசம் ஒன்றே ஒன்றுதான். முதல்வர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள இனப்படுகொலை நடந்துகொண்டிருக்கிறது என்பதையே இமூடிமறைத்தார் கருணாநிதி. இலங்கையைக் காப்பாற்ற இனப்படுகொலை நடந்தது என்பதையே மூடிமறைக்கப் பார்க்கிறார் சம்பந்தர். குற்றங்களை மூடிமறைப்பதும் குற்றமென்பது இந்த மூத்தத் தலைவர்களுக்குத் தெரியுமா தெரியாதா?

சென்ற செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 30)இ காணாமல் போகச் செய்யப்பட்ட தங்கள் உறவுகளுக்கு நீதி கேட்டு வீதியில் நின்று கொண்டிருந்தார்கள் எங்கள் ஈழத்துச் சகோதரிகளும் குழந்தைகளும்!. ‘காணாமல் போகச் செய்யப்பட்ட எங்கள் உறவுகள் எங்கே’ ‘என் பிள்ளையை மீட்டுத்தா’ என்றெல்லாம் எழுதப்பட்ட வாசகங்களைத் தாங்கியபடி நின்றிருந்தார்கள் அவர்கள்.

காணாது போனவர்கள் என்ன ஆனார்கள் – என்றெல்லாம் விசாரிக்காமல் அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்பதைத் தெரிவிக்காமல் காணாமல் போனோருக்கு மரணச் சான்றிதழ் வழங்க இலங்கை முன்வருவது அதன் கோரமுகத்தை அம்பலப்படுத்துகிறது. இது அவர்களது உறவுகளின் இதயத்தில் ஏறிமிதிக்கிற உளவியல் சித்திரவதை.

‘எமது உறவுகள் எப்படிக் கொல்லப்பட்டார்கள் யாரால் கொல்லப்பட்டார்கள் எங்கே கொல்லப்பட்டார்கள் என்று மரணச் சான்றிதழில் குறிப்பிடும் நேர்மை அரசுக்கு இருக்கிறதா’ – என்று கேட்டிருக்கிறார் ஈழத்தைச் சேர்ந்த ஒரு சகோதரி. ஒரு அப்பாவிச் சகோதரி அவருக்குத் தெரிந்த தர்மநியாயத்துடன் சட்டரீதியான ஒரு கேள்வியை எழுப்ப முடிகிறது. சட்டத்தரணி சம்பந்தரால் அப்படிக் கேட்க முடியாதாமா?

காணாமல் போகச் செய்யப்பட்டோர் நாளில் அது தொடர்பான நுணுக்கமான கேள்வியொன்றை வட மாகாணசபை உறுப்பினரான சகோதரி அனந்தி சசீதரனும் எழுப்பியிருக்கிறார்.

‘குற்றங்களுக்கு மட்டும் ‘போர்க்குற்றம்’ என்கிற சொல்லைப் பயன்படுத்துகிற சர்வதேசம் சிறையில் வாடும் எமது கைதிகளை ‘போர்க்கைதிகளாக’ப் பார்க்க மறுப்பது ஏன்….
அரச பயங்கரவாதத்தில் ஈடுபட்ட ஓர் அரசு அதற்காகப் பயன்படுத்திய ராணுவத்தைப் பொத்திப் பாதுகாக்கிற ஓர் அரசு எமது உறவுகளை அரசியல் கைதிகளாக ஏற்கக்கூட மறுப்பது ஏன்………’ என்பது அனந்தியின் கேள்வி.

“காணாது போகச் செய்யப்பட்டோருக்கான எமது போராட்டம் இந்த சர்வதேச அநீதிக்கு எதிரான போராட்டம் அரச பயங்கரவாதத்துக்கு எதிரான அரசியல் போராட்டம்……….” என்கிறார் அவர்.

தணல் போல் கிடந்த சிங்கள இனவெறியைக் கிளறிக் கிளறித் தூண்டிவிட்டவர ரணிலின் அரசியல் குரு ஜெயவர்தன. அவர் அதிபராக இருந்தபோதுதான் 1983 ஜூலையில் (கருப்பு ஜூலை) முன்னதாகவே திட்டமிட்டபடி விரிவாகவும் விரைவாகவும் தமிழின அழிப்பு நடந்தது. அந்த இன அழிப்புக்காக சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2004ல் அதிபர் சந்திரிகா மன்னிப்புக் கோரியதை அனந்தி நினைவுகூர்ந்திருக்கிறார்.

“I beleive honestly that what happened in 1983, the attitudes that led up to it, and the consequences are similar to what Germany suffered in the 1930s and 1940s” என்கிற சந்திரிகாவின் வார்த்தைகள் நாஜி இனவெறிக்கும் சிங்கள இனவெறிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை அம்பலப்படுத்தும் ஒப்புதல் வாக்குமூலம்.

‘அதே சந்திரிகா தனது ஆட்சிக் காலத்தில் நடந்த இன அழிப்புக் கொடுமைகளுக்காக இன்று வரை மன்னிப்பு கூட கேட்க மறுக்கிறார். இப்படியொரு முரணான நிலையில் நல்லிணக்கம் எப்படி சாத்தியம்’ என்பது அனந்தியின் அடுத்த கேள்வி.

“உண்மையான நல்லிணக்கம் வேண்டுமெனில் இன அழிப்புப் போரை ‘மனிதாபிமான யுத்தம்’ என்று வர்ணிப்பதை விட்டுவிட்டு ‘தமிழர்கள் நடத்தியது விடுதலைப்போர்’ என்பதையும் ‘அதில் பங்கேற்றவர்கள் விடுதலைப் போராட்ட வீரர்கள்’ என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்கிற அனந்தியின் அறைகூவல் தமிழினத்தின் ஒளிவுமறைவற்ற அணுகுமுறையைக் காட்டுகிறது. சம்பந்தருக்கு இது புரிகிறதா?

நடந்த இனப்படுகொலையை மூடிமறைக்க இலங்கை முயல்வதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. சம்பந்தருக்கு எதற்கு அந்த வேலை?

இனப்படுகொலை – என்கிற வார்த்தையையே மூடி மறைக்கத்தான் ‘போர்க்குற்றம்’ என்கிற சொல்லாடலைப் பயன்படுத்துகிறது இலங்கை. இரண்டு பக்கத்திலும் போர்க்குற்றம் நடந்திருக்கிறது – என்பது அதன் பொருள்.

சிங்கள ராணுவம் மட்டுமில்லை விடுதலைப் புலிகளும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் – என்பதுதான் இலங்கையின் வாதமென்றால் இருவரின் குற்றத்தையும் விசாரித்துத் தீர்ப்பு சொல்கிற வேலையில் இருவரில் ஒருவரே எப்படி இறங்க முடியும்? இதுதான் விக்னேஸ்வரன் எழுப்புகிற கேள்வி. ‘தன் குற்றத்துக்கு தானே எப்படி நீதிபதியாக இருக்க முடியும்’ என்கிற அவரது கேள்வியை சம்பந்தரும் சேர்ந்து கேட்கவேண்டாமா?

‘எங்கள் தரப்பில் மட்டுமல்ல இரு தரப்பிலும் குற்றம் இருக்கிறது’ – என்கிற இலங்கையின் கூற்று அப்பட்டமான மோசடி. ‘இரு தரப்பையும் நாங்களேதான் விசாரிப்போம்’ என்று ஒற்றைக் காலில் நிற்பது ஆகப்பெரிய மோசடி.

இலங்கை அரசு சொன்னதைத் தவிர வேறெதைச் செய்தது சிங்கள ராணுவம்? உத்தரவை நிறைவேற்றியவர்களை உத்தரவு பிறப்பித்தவர்கள் தண்டித்துவிடப் போகிறார்களாமா? சம்பந்தருக்கு உண்மையிலேயே இதெல்லாம் விளங்கவில்லையா?

போர்க்குற்றம் – என்று ஒருபுறம் போக்குக் காட்டிக்கொண்டே இன்னொருபுறம் தமிழின அழிப்பின் அடுத்த அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கிறது இலங்கை. அதன் இனவெறிக்கு கண்ணெதிரில் இரையாகிக் கொண்டிருக்கிறார்கள் ஆண்டுக்கணக்கில் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் தமிழர்களும் காணாமல் போனோராகவே ஆக்கப்பட்டிருப்போரும்! அவர்களில் எத்தனைப் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் எத்தனைப் பேர் உயிருடனிருக்கிறார்கள் – என்றாவது சம்பந்தர் கேட்கவேண்டாமா?

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேசம்தான் விசாரிக்க வேண்டும் – என்கிற குரல் வலுப்பெறும் போதெல்லாம் சிங்களத் தீவிரவாதிகள் – அதற்கு எதிராக அணிதிரள்கின்றனர். ‘ராணுவத்தைக் காட்டிக் கொடுக்காதே’ என்று மைத்திரிபாலாவை மிரட்டுகின்றனர். அவர்களது ஏகோபித்த ஆதரவுடன் ஆயிரமாயிரம் தமிழ்ச் சகோதரிகளைச் சீரழித்த ராணுவத்தினரும் பல்லாயிரம் தமிழ் உறவுகளைக் கொன்று குவித்த ராணுவத்தினரும் புத்தனின் பூமியில் பரிபூரண சுதந்திரத்துடன் நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.

தமிழினத்தைக் கடித்துக் குதறிய சிங்கள மிருகங்களைச் சுதந்திரமாக நடமாடவிட்டுவிட்டு அப்பாவித் தமிழ்க் கைதிகளையும் போரின் இறுதியில் இலங்கை ராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களையும் போராளிகளையும் கேள்வி முறையின்றி சட்டவிரோதக் காவலில் வைத்திருக்கிறது இலங்கை. அவர்கள் சிறைவைக்கப்பட்டிருப்பது ஏன் எதற்காக எங்கே – என்பதே தெரியாத நிலை.

ஆக இனப்படுகொலை செய்த பௌத்த சிங்களக் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர். ‘போர்க்குற்றம்’ என்கிற போலி வார்த்தையின் பேரால் பல்லாயிரம் நிரபராதிகள் சிறைக்குள்ளோ ராணுவ முகாம்களுக்குள்ளோ நசுங்கிக் கொண்டிருக்கின்றனர்.

குற்றவாளிகள் என்று கூறப்படுபவர்களில் ஒரு பிரிவினரை விசாரிக்கவே கூடாது என்று வலியுறுத்துவதும் இன்னொரு பிரிவினரை விடுவிக்கவே கூடாது என்று வற்புறுத்துவதும் சிங்கள இலங்கையின் ஜனநாயக முகமூடியைக் கிழித்து எறிகிறது. எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தருக்கு இது தெரிகிறதா இல்லையா? இலங்கை மண்ணில் சிங்கள இனத்துக்கும் தமிழினத்துக்கும் ஒரே சட்டதிட்டமெல்லாம் கிடையவேகிடையாது என்பதற்கு இதைத்தவிர வேறென்ன சான்று தேவை!

ஒரு கண்ணில் வெண்ணெயும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் சிங்கள இனத்துடன் தமிழினம் சேர்ந்து வாழவே முடியாது. அதை அழுத்தந்திருத்தமாக எடுத்துச் சொல்ல இந்த ஒரு ஆதாரமே போதும்! இதை உணராமல் பௌத்த சிங்களக் காட்டுமிராண்டிகளுடன் சேர்ந்து கூட்டாஞ்சோறுதான் சாப்பிடுவோம் – என்று சம்பந்தர்கள் அடம்பிடிக்கிறார்கள்!

உள்ளதை உள்ளபடி சொல்லவேண்டுமென்றால் தமிழ் அரசியல் கைதிகளும் காணாமல் போன தமிழ் உறவுகளும் ராணுவம் அழைத்துச் சென்ற பல்லாயிரக்கணக்கான விடுதலைப் போராளிகளும் எங்கெங்கே வைக்கப்பட்டிருக்கிறார்கள் எவ்வளவு பேர் உயிருடனிருக்கிறார்கள் – என்கிற ரகசியம் இலங்கையின் அதிகாரபூர்வ எதிர்க்கட்சித் தலைவரான சம்பந்தருக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும். அதையெல்லாம் தெரிந்துகொள்ளவில்லை என்றால் அந்தப் பதவியில் நீடிப்பதற்கான தகுதி அவருக்கு அறவே இல்லை என்று அர்த்தம்.

ஒட்டுமொத்தத் தமிழினமும் ஒரே குரலில் நீதி கேட்கிற நிலையில் ‘தனிநாடெல்லாம் கேட்கவில்லை’ என்று சம்பந்தர் ஒருவர் மட்டும் wrong notes வாசிப்பதால்தான் இவ்வளவு வெளிப்படையாகப் பேசவேண்டியிருக்கிறது. ‘தனிநாடெல்லாம் கேட்கவில்லை நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி கேட்கிறோம்’ என்று தெள்ளத்தெளிவாக இதயத்திலிருந்து அவர் பேசியிருந்தால் இப்படியொரு அலசல் தேவைப்பட்டிருக்காது.

சிங்கள ராணுவத்தால் விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்ட தனது சொந்த இனத்துக்காகத் துடிக்க வேண்டிய சம்பந்தரின் இதயம் ஒன்றுபட்ட இலங்கைக்காகவும் சிங்கள எஜமானர்களுக்காகவும் துடிக்கிறது. அதை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லையென்றாலும் இவர்கள் செய்வதில் எதுவுமே புதிதில்லை. எட்டப்பன்களும் காக்கை வன்னியன்களும் செய்யாததையா இவர்கள் செய்துவிட்டார்கள்!