முதல்வர் விக்னேஸ்வரன், வரலாற்று இருட்டில் திசைகாட்டும் கலங்கரையாக இறுதிவரை திகழவேண்டும்!

675 0

mullivaikkal-1ஈழத்தமிழர் வரலாற்றில் 2009 மே 18 இற்கு பின்னரான காலகட்டமானது என்றுமில்லாத துயரம் தோய்ந்த அத்தியாயமாக கண்முன்னே கரைந்து கொண்டிருக்கின்றது.

தமிழர் மண்ணில் நிகரற்ற வீரத்தின் மூலம் தமிழர் இறையாண்மை காத்த மாமன்னன் பண்டாரவன்னியனின் மறைவிற்கும், உலகத் தமிழினத்திற்கு முகவரியான தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் புதிய தமிழ்ப் புலிகளாக தடம்பதித்து விடுதலைப் பேராட்டத்தினை ஆரம்பித்தமைக்கும் இடைப்பட்ட 169 ஆண்டுகாலத்தை விட ஆயுத மௌனிப்பிற்கு பின்னரான இந்த ஏழு ஆண்டுகளே ஈழத்தமிழர் வரலாறு பெரும் சாவால்கள் நிறைந்ததாக அமைந்துள்ளது.

தரைப்படை, கடற்படை, வான்படை என்ற முப்படைகளுடன் உலகில் எங்கேனும் இல்லாத கட்டுக்கோப்புடன் இலட்சிய உறுதி கொண்டமைந்த தற்கொடைப் படைப்பிரிவையும் பலவீனமான எமது இனத்தின் பலம்வாய்ந்த ஆயுதமாக உருவாக்கிய தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் அதன் அடிப்படையில் ஒரு நிழல் அரசையும் நிறுவி புதிய வரலாறு படைத்தார்.

தேசியத் தலைவரின் பொற்காலத்தில் தான் ஈழம் கடந்து உலகத் தமிழர்களுக்கு உன்னத அடையாளம் கிடைத்தது. ஈழ மண்ணில் எமது மாவீரர்களின் உயிர்த்தியாகத்தாலும், போராளிகளின் வீரதீரத்தாலும் நிகழ்த்தப்பட்ட போரியல் சாதனைகள் உலகெங்கும் பரவிவாழ்ந்துவரும் தமிழர்களுக்கு தலைநிமிர்வைக் கொடுத்தது.

உலகம் அங்கீகரித்த சுயநிர்னய உரிமையின் அடிப்படையிலும் வரலாற்று ரீதியான தார்மீக உரித்துடனும் இலங்கைத் தீவின் வட-கிழக்கு பகுதிகளை உள்ளடக்கிய தமிழர் தாயகம் தமிழீழமாக வரையறுக்கப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் ஆளுகை செய்யப்பட்டுவந்த நிலையில் தான் அனைத்துலக நாடுகள் சிறிலங்கா அரசுடன் இணைந்து அழித்தொழிப்பு நடவடிக்கையில் இறங்கியது.

அனைத்துலக நாடுகளின் பிராந்திய நலன்களுக்குள் நியாய, தர்மங்கள் பலவந்தமாக சிறைப்படுத்தப்பட்ட நிலையில் தமிழர்களது சுயநிர்னய உரிமையும் மறுதலிக்கப்பட்டது. இந்த பின்னணியில்தான் தமிழர்களின் பாதுகாப்பிற்காவும் இருப்பிற்காகவும் ஏந்திய ஆயுதங்களை அதற்காகவே மௌனிக்கப்பட்டது.

ஆயுதமௌனிப்புடன் தேசியத் தலைமையின் இருப்பும் மௌனிக்கப்பட்டதாயிற்று. மாபெரும் இனப்படுகொலையுடன் முள்ளிவாய்க்கால் வரலாறு தமிழர் உடலங்கள் மீது எழுதப்பட்டது. இந்த வரலாற்றுத் துயரம் உலகத் தமிழர்களின் ஆன்மாவை ஆட்டங்காண வைத்துவிட்டது.

எமது மண்ணை ஆக்கிரமித்து எமது வளங்களை அழித்து எமது மக்களையும் அடிமைகொள்ளும் நோக்கில் தமிழர் தாயகத்தின் மீது படையெடுத்து வந்த சிங்கள பௌத்த பேரினவாத இராணுவத்தை ஒருபக்கம் எதிர்கொண்டதுடன், மறுபக்கம் அரசியல் ரீதியாக எமது விடுதலைக் கோரிக்கையை முன்கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்டதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும்.

ஒற்றையாட்சிக் கோட்பாட்டின் அடித்தளத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் சிறிலங்கா அரசியலமைப்பிற்குள் தமிழர்களது தேசிய அபிலாசைகள் ஒருபோதும் தீர்க்கப்படாது என்ற யதார்த்தம் உணரப்பட்ட போதிலும் அனைத்துலகம் ஏற்றுக்கொண்ட சனநாயக வெளியில் அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொண்டு விடுதலைப் போராட்டத்திற்கு வலிமை சேர்ப்பதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

ஆயுதமௌனிப்புடன் ஆயுதப்போராட்டம் தற்காலிக ஓய்வுநிலைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் தாயக அரசியல் வெளியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வகிபாகம் இன்றியமையாததாக அமைந்தது.

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பெயரால் மேற்கொள்ளப்பட்ட/மேற்கொள்ளப்பட்டுவரும் இனப்படுகொலைக்கு நீதியை பெற்றுக்கொள்வதற்கும் தமிழ் மக்களின் வாழ்வியல் மேம்பாடு உள்ளிட்ட அடிப்படை, அன்றாடப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் முயற்சிக்க வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதவி சுகங்களுக்கு அடிமையாகி அடிபணிவு அரசியலை முன்னெடுத்துவருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இச்செயல்பாடானது மரமேறி விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக தமிழர்களது எதிர்காலத்தை மேலும் சூனியமாக்கியது. தமிழர்களது தனிநாட்டுக் கோரிக்கையை வலுவிழக்கச் செய்யும் நோக்கில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு முன்னரே தோல்விகண்ட மாகாணசபை திட்டத்தை தூசுதட்டியெடுத்தது சிறிலங்கா அரசு.

இந்நிலையில் தான் மாகாண சபைத் திட்டத்தின் பின்னணியில் செயற்பட்ட இந்தியா கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் மூலம் இலங்கை உச்ச நீதிமன்ற முன்னால் நீதிபதியாக இருந்த சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை முதலமைச்சர் வேட்பாளராக்கியது.

கொழும்பிலே பிறந்து வளர்ந்து வாழ்ந்து வந்ததுடன் சிங்களத் தரப்புடன் நெருக்கமான உறவுநிலையில் இருந்துவந்த காரணம், விக்னேஸ்வரன் அவர்களை நோக்கி தமிழர்கள் ஐயுறும் நிலையை தோற்றுவித்திருந்தது. அதிகாரமேதுமற்ற மாகாணசபை முறையை எதிர்த்தாலும் இனவழிப்பு செய்த சிறிலங்கா அரசின் மீதான எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்கான சந்தர்ப்பமாக மாகாணசபைத் தேர்தலை எமது மக்கள் எதிர்கொண்டார்கள்.

பெரும்பான்மை வெற்றியுடன் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் வடமாகாண சபை முதல்வராகப் பொறுப்பேற்றார். இங்குதான் ஆயுதமௌனிப்பின் பின்னர் சூனியமாகிப்போன தமிழர் வாழ்வில் நம்பிக்கை ஒளி மின்னிட்டது.

அரசியல் ஏணியில் ஏற்றிவிட்டவர்களது எண்ணங்களை ஏமாற்றமாக்கி ஏற்றம்தந்த மக்களுக்கு வழிகாட்டும் கலங்கரையாக திகழ்ந்துகொண்டிருக்கிறார் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள். ஏற்றிவிட்டு ஏமாற்றமடைந்தவர்களின் செயல்பாடு வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக இன்றுவரை தொடர்ந்து வருகின்றது.

சிறிலங்கா அரசின் அதிகாரத் தலையீடுகள் ஒருபக்கம், தற்போதைய நல்லாட்சி அரசை பிணையெடுக்க கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டுவரும் அனைத்துலக நாடுகளின் இராசதந்திர அழுத்தங்கள் ஒருபக்கம், பிராந்திய உலக வல்லாதிக்க நாடுகளின் முகவர்களாக செயல்பட்டுவரும் சம்பந்தன், சுமந்திரன்களின் குடைச்சல்கள் ஒருபக்கமென எந்தப்பக்கம் திரும்பினாலும் எதிர்ப்புகளையும், இடையூறுகளையும், அழுத்தங்களையும், நெருக்கடிகளையும் தனியொருவராக எதிர்கொண்டு வருகின்றார் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள்.

உலகளவில் இன்றைய நிலையில் மிகக் குறைந்தளவேயான அதிகாரங்களைக் கொண்ட ஒரு நிர்வாகத்தை கையில் வைத்துக்கொண்டு இவ்வளவு அழுத்தங்களை சந்தித்துவருவது விக்னேஸ்வரன் ஒருவராகத்தான் இருக்கும். மக்கள் ஆதரவு என்ற மகத்தான பலத்தின் அடிப்படையில் நின்றுகொண்டு மக்களுக்காகவே சமரசமின்றி போராடிவரும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் இறுதிவரை இதே உறுதிப்பாட்டுடன் இருப்பது எவ்வளவு முக்கியமோ அந்தளவுக்கு தமிழ் மக்களும் அவருக்கு இறுதிவரை உறுதியான ஆதரவினை நல்கவேண்டியதும் அவசியமாகும்.

தென்னிலங்கை வாசியாகவே காலத்தை களித்துவிட்ட நிலையில் இவ்வளவு குறுகிய காலத்தில் எமது பிரச்சினைகளை உணர்ந்து கொண்டதுடன் தமிழர்களின் தேசிய அபிலாசைகள் வென்றெடுக்கபட வேண்டியதன் அவசியத்தையும் விளங்கிக்கொண்டுள்ளமையானது எமது விடுதலைக் கோரிக்கையின் நியாயப்பாட்டின் வெளிப்பாடேயாகும்.

சுதந்திர தமிழீழ விடுதலைக்காய் தம்முயிரை ஈந்த மாவீரர்களது தியாகமும் தோளோடு தோள் நின்று உயிரிழந்த பொதுமக்களின் தியாகமும் ஒருபோதும் வீண்போகாது.

அனைத்துலக சதிகளை முறியடித்து தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தக்க தருணத்தில் தலைமையேற்பது உறுதி. அதுவரை எமது மக்களையும் எமது மண்ணையும் காத்து நிற்பதுடன் வரலாற்று இருட்டில் தவித்துக்கொண்டிருக்கும் உலகத் தமிழர்களுக்கு வழிகாட்டும் கலங்கரையாக முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் திகழவேண்டுமென உலகத் தமிழர்கள் சார்பில் விரும்பி வேண்டிக் கேட்டுக்கொள்கின்றோம்.

ஆசிரியர்.
குறியீடு இணையம்.