தமிழினத்தின் சாபத்தைச் சுமக்க சம்பந்தன் ஆசைப்படுவது ஏன்?

365 0

Sampanthan_2103231f-720x480-720x480கூட்டமைப்பின் தலைமைப் பதவி முந்தி வந்த செவி; சிங்கள அரசின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி பிந்தி வந்த கொம்பு. முன்னர் வந்த செவியை, பிந்தி வந்த கொம்பு மறைக்க அனுமதித்தால் தமிழினத்தின் சாபத்தைச் சுமப்பது தவிர்க்க முடியாது போகும்.

தாயகத் தமிழ் மக்கள் பொறுமையிழந்து விட்டனர். அதனால் அவர்கள் மீண்டும் வீதிகளில் இறங்க ஆரம்பித்துள்ளனர்.மகிந்த ஆட்சிக்கால அடக்குமுறையிலும் அராஜகத்திலும் சிக்கித் தவித்த இவர்கள் ஓர் ஆட்சி மாற்றத்தை விரும்பினர்.

பிசாசு வந்தாலும் பரவாயில்லை, இப்போதைக்குப் பேயை விரட்டினால் போதும் என்ற மனநிலையிலிருந்த இவர்களுக்கு கடந்த வருட ஜனாதிபதித் தேர்தல் ஒரு வாய்ப்பாக அமைந்தது.

ஜனாதிபதி ஆட்சி மாற்றத்துக்கு தமிழ் மக்கள் வழங்கிய வாக்குகளை தங்களால் பெறப்பட்ட வெற்றியாக கூட்டமைப்பு மாற்றிக் கொண்டது.அடுத்துவந்த நாடாளுமன்றத் தேர்தலில் இலகுவாக வெற்றி பெறவும் இதுவே கால்கோளாக அமைந்தது.

தமிழ் மக்களின் வாக்குகளை தங்களின் வெற்றியாகக் காட்டிய கூட்டமைப்புக்குச் சில வெகுமதிகள் கிடைத்தன.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவரானார். செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்ற உபகுழுக்களின் தலைவரானார். சுமந்திரனுக்கு கூட்டமைப்பின் பேச்சாளர் பதவி கிடைத்தது.

எதிர்க்கட்சியென்ற அந்தஸ்துப் பெற்றுள்ள கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் இதுவரை எந்தவொரு சட்டமூலத்திலும் அரசுக்கெதிராக வாக்களிக்காத சாதனை கின்னஸ் புத்தகத்துக்குரியது.மாறாக, மகிந்த தலைமையிலான கூட்டு எதிரணிதான் அப்பணியைச் சிரமேற்கொண்டு செய்து வருகிறது.

சம்பந்தனும் அவரது கூட்டமைப்பும் அரசாங்கத்தின் சுவீகாரக் குடும்பமாக மாறியுள்ளதைக் காணலாம்.இவ்வழி பார்க்கில், இன்றைய நல்லாட்சி(?) அரசுக்கு விசுவாசமாக, அவர்கள் முகம் சுளிக்காதவாறு நடந்து கொள்ள வேண்டுமென்பதே நல்லெண்ணச் செயற்பாடு என்ற அர்த்தப்பட கூட்டமைப்பின் தலைமை இயங்குவது வெளிச்சம். இவ்வருட இறுதிக்குள் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வொன்றை மைத்திரி – ரணில் அரசு தருமென்ற பகற்கனவுடன் சம்பந்தன் தலைமை சரணாகதி அரசியல் செய்து கொண்டிருக்கிறது.

இதனால் அரசுக்கெதிரான எந்தவொரு செயற்பாட்டிலும் தமிழ் மக்கள் இறங்கக் கூடாது, இறங்க விடவும் கூடாது என்பது இவர்களது சித்தாந்தம். கடந்த 20 மாத நல்லாட்சி அரசில்(?) ஏமாற்றமடைந்த தமிழ் மக்கள் இதுவரை அங்குமிங்குமாக சில கவனயீர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

புதிய அரசியலமைப்பு ஒன்ற வரப்போகிறதென்று சொல்லப்படும் இவ்வேளையில், எதிர்பார்த்த எல்லாவற்றிலும் ஏமாற்றமடைந்த மக்கள் அடுத்த மாதம் 24ம் திகதி தமிழர் தாயகமெங்கும் பாரிய அளவிலான கவனயீர்ப்பை நடத்தத் தீர்மானித்துள்ளனர்.பொங்கு தமிழ்’ என்ற பெயரில் இதனை நடத்த ஏற்பாடு செய்வதை சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா ஆகிய மூவரும் அடியோடு எதிர்க்கிறார்கள்.

“தமிழ் மக்களுக்கு இப்போது என்ன பிரச்சனை? எதற்காக இப்போது போராட்டம்?” என்று சம்பந்தன் தனது சகபாடிகளிடம் கேட்க, இது மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் ஏற்பாடு என்று சகபாடிகள் பதிலளித்துள்ளனர்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வராஜா கஜேந்திரன் ஆகிய மூவருமே மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்பது இப்பதிலின் உட்கிடக்கை.
பொங்கு தமிழ் நடைபெற்றால் எங்கே தமிழ் மக்கள் தங்களை மறந்துவிடுவார்களோ என்ற அச்சமே இதற்குக் காரணம். கூட்டமைப்பின் உறுப்புக் கட்சியினர் பொங்கு தமிழில் பங்குபற்றக் கூடாதென சம்பந்தனும் சகபாடிகளும் குரல் கொடுத்துள்ளனர்.

இது எவ்வளவு தூரத்துக்கு உள்வாங்கப்படும் என்பது சந்தேகத்துக்குரியது. இவ்வருட இறுதியில் ஓய்வுபெறவுள்ள ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கி மூன் செப்டம்பர் முற்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

மைத்திரி தலைமையிலான சுதந்திரக் கட்சியின் 65வருட மாநாடும் இக்காலப் பகுதியில் நடைபெறவுள்ளது.பான் கி மூன் வருகைக்கு முன்னர் வடக்கில் ஏழாண்டுகளுக்கும் மேலாக இயங்கும் சகல நலன்புரி முகாம்களையும் மூடி, அங்குள்ளவர்களை மீள்குடியேற்றம் செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்க அதிபர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜெனிவாத் தீர்மானத்துக்கு அரைகுறை வடிவம் கொடுக்கும் வகையில் காணாமற் போனோர் பணியகம் அவசரம் அவசரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்படியான சூழ்நிலையில் இன்றைய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தக் கூடியதாக தமிழ் மக்கள் பொங்கு தமிழ் நடத்தலாமா என்பதுவே சம்பந்தனின் கேள்வி.

பிரதமர் பதவிக்கு நிகரான எதிர் கட்சித் தலைவர் பதவியைத் தந்து, பவுசு வாழ்க்கையை அமைத்துத் தந்தவர்களுக்கு எதிராக எந்தப் பேரணியையும் தமிழ் மக்கள் நடத்த விடக்கூடாதென்று சம்பந்தன் செயற்படுகிறார். “அரசாங்கத்துக்கு என்னால் பதில் சொல்ல முடியாதுள்ளது. இந்தப் போராட்டத்தை எப்படி நிறுத்துவதென்று ஆலோசனை சொல்லுங்கள்” என்று தமது சகபாடிகளிடம் சம்பந்தன் கேட்டுள்ளார்.

தெற்கில் அரசுக்கெதிராக அண்மையில் மகிந்த அணி கண்டியிலிருந்து கொழும்புக்கு பாதயாத்திரை நடத்தியது. அங்குள்ள பல தொழிற்சங்கங்களும், ஜே.வி.பி.யும் அரசின் செயற்பாடுகளைக் கண்டித்து ஊர்வலங்கள் நடத்துகின்றன.
இவைகளைத் தடுத்து நிறுத்தாது அனுமதிக்கிறது சிங்கள அரசு. ஆனால் தமிழ் மக்கள் அரசில் நம்பிக்கையிழந்து ஒரு போராட்டம் நடத்த கூட்டமைப்பு ஏன் எதிர்க்க வேண்டும்?

இந்தப் போராட்டத்தை நிறுத்த இதுவரை அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிப் போர்வைக்குள் தம்மைப் புகுத்தியிருக்கும் சம்பந்தன், தமது பிரதான பாத்திரம் என்னென்பதை மறந்து செயற்படுவதை இங்கு நோக்க முடிகின்றது.
பிந்தி வந்த கொம்பு முந்தி வந்த செவியை மறைத்தது| என்றொரு பொன்மொழியுண்டு.
இலங்கை அரசின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவி என்னும் பிந்திவந்த கொம்பு எந்தவேளையிலும் முறிக்கப்படலாம்.
ஆனால் முந்தி வந்த கூட்டமைப்பின் தலைமைப் பதவி வன்னித் தலைமையால் வழங்கப்பட்டது என்பதையும், பின்னர் தமிழ் மக்களின் வாக்குகளால் தொடரப்பட்டது என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து ஒருங்கிணைந்து நடத்தும் பொங்கு தமிழ் பேரணிக்கு சம்பந்தன் தாமாகவே முன்வந்து தலைமை தாங்க வேண்டியது அவரது தார்மீகக் கடமை.

இதனை மறந்து அற்பமான எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தக்க வைப்பதற்காக தமிழ் மக்களின் ஒன்றுபட்ட செயற்பாட்டைக் குழப்பியடிக்க முனையக்கூடாது.

சுமந்திரனும் மாவை சேனாதிராஜாவும் கீறுகின்ற கோட்டுக்குள் நின்றவாறே அரசியல் செய்வேனென்று சம்பந்தன் பிடிவாதமாக நிற்பாரானால், தமிழினத்தின் சாபத்தையே எதிர்காலத்தில் அவர் சுமக்க நேரிடும்.