மரணத்திலும் இணைபிரியாத நண்பர்கள்

339 0

PIRITHஐந்து ஈழத்தமிழ் இளைஞர்களை கடல் காவுகொண்டது. இலண்டன் கம்பர் சான்ட் கடற்கரையில் உயிர்காப்பு பணியாளர்களை அமர்த்த ரொட்டர் உள்ளுராட்சி நிர்வாகம் இன்று(27) அவசரமாக முடிவுசெய்துள்ளது.

ரொட்டர் உள்ளுராட்சி நிர்வாகம் இன்று தாமதமாக எடுத்த இந்த முடிவினால் தமது உறவுகளை பலிகொடுத்த மேற்படி ஐவரின் குடும்பங்களுக்கு பலனில்லையென்றாலும் ஏனைய மக்களை காக்கும் வகையில் இணைபிரியாத இந்த நண்பர்களுக்கு ஏற்பட்ட இந்த அவலமுடிவு அமைந்துள்ளது.

லண்டன் கிறின்விச் பகுதியில் சிறுவயதுமுதலே நெருங்கியநண்பர்களாக இருந்து வரும் இந்த ஐவரும் மரணத்தில் கூட இணைபிரியாத நண்பர்களாக கடலில் ஒன்றாக பலியானமை நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அதுவும் கடலுக்கு குளிக்கச் செல்லாத நிலையில் கரையில் விளையாடிக்கொண்டிருந்த இவர்கள் அனைவரும் திடிரெனத்தோன்றிய கடல்மட்ட உயர்வினால் பரிதாபகரமாக மரணமடைந்ததாக தற்போது வெளிவந்துள்ள மேலதிகத்தகவல்கள் குறிப்பிடுகின்றன.

நண்பர்கள் ஐவரும் மகிழ்ச்சியுடன் கடற்கரையில் கால்பந்தாட்டத்தில் ஈடுபட்டவேளை திடிரென கடல்மட்டம் உயர்வடைந்து அவர்களை முதலில் தாக்கியுள்ளது.இவ்வாறு வேகமாக கடல்மட்டம் உயர்வடைந்ததன் காரணமாக திடீரென இளக்கமடைந்த கடல்மண் இந்துசன் மற்றும் கெனிகன் ஆகியோரின் கால்களை புதைத்துவிட்டது.

கடல்மண்ணில் புதையுண்ட மேற்படி இருவரும் நீரில் தத்தளித்த போது, கெனிகனின் அண்ணனான கோபியும் ஏனைய இருவரான நிதர்சன், மற்றும் குருசாந் ஆகியோர் அவர்களை மீட்கச்சென்றனர்.

ஆனால் அவர்களின் கால்களும் கடல்மண்ணில் புதையுண்டதால் இருவரையும் மீட்கச்சென்ற இவர்களும் சிக்கலில் மாட்டிக்கொண்டனர். மேற்படி ஐவருக்கும் நீச்சல் தெரியுமென்றாலும் கால்கள் புதையுண்டதால் தொடந்தும் தத்தளித்த அவர்களின் உடல் அதிக சோர்வு அடைந்ததால் அவர்களால் கரையேற முடியாமல் அனைவருமே தத்தளித்தனர்.

இறுதியில் அனைவருமே நீரில் மூழ்கிப்பலியான சோகம் இடம்பெற்றுள்ளது. உயிர்காப்பு பணியாளர் ஒருவர் ஐந்து நிமிட உதவியை செய்திருந்தால் இவர்கள் அனைவரையுமே காப்பாறியிருக்கலாமென குறிப்பிடப்படுகின்றது.
இதில், இந்துசன் மற்றும் கெனிகன் ஆகியோரின் உடலங்கள் மண்ணில் அதிகமாக புதையுண்டிருந்ததால் மேற்படி இரண்டு உடலங்ளையும் மீட்டுப்பணியாளர்களால் உடனடியாக கண்டுபிடிக்கமுடியவில்லை. அதன்பின்னர் கடல்அலைகளே அவர்களின் உடலங்களை கரையொதுக்கியிருந்தது.

கம்பர் சான்ட் கடற்கரையில் நிரந்தரமாக உயிர்காப்பு பணியாளர்கள் அமர்த்தப்பட்டிருந்தால் இவ்வாறான அநியாயப்பலிகளை தடுத்திருக்கலாமென அந்தப்பகுதி மக்களும் கருத்துத்தெரிவித்துள்ளனர்.

இந்தவிடயத்தில் கம்பர் சான்ட் கடற்கரையைப்பராமரிக்கும் உள்ளுராட்சி நிர்வாகம் தற்போது விமர்சனங்களுக்கு உள்ளாகிவருகின்றது. உயிர்காப்பு பணியாளர்கள் அமர்த்தப்படவேண்டுமெனக்கோரி இணையம் மூலம் நடத்தப்பட்;ட முறையீட்டு மனுவில் இதுவரை 7,000 பேர் ஒப்பமிட்டுள்ளனர்.

கோடைகாலத்தில் அதிகவெம்மை நிலவும்நாள் ஒன்றில்மட்டும் சுமார் 30,000 பவுண்சுகளை வாகனத்தரிப்பிட வருமானமாகப்பெறும் ரொட்டர் உள்ளுராட்சி நிர்வாகம் சுமார் 25,000 பேர்கூடும் கம்பர் சான்ட் கடற்கரையில் ஒரு உயிர்காப்பு பணியாளரைக்கூட அமர்த்தவில்லையென விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் திங்களன்று பிரித்தானியாவில் வங்கிவிடுமுறை வருவதால் இந்தவார இறுதியில் கம்பர் சான்ட் கடற்கரைக்கு அதிகளவுமக்கள் வருவார்கள் என்பதால் அவசரமாக உயிர்காப்பு பணியாளர்களை அமர்த்த ரொட்டர் உள்ளுராட்சி நிர்வாகம் இன்று முடிவுசெய்துள்ளது.

இதற்கிடையே கடந்தவாரம் இதே கடற்கரைப் பகுதியில் நீந்திய 19 வயதான பிரேசில் மாணவன் ஒருவன் பலியான நிலையில் ரொட்டர் உள்ளுராட்சி நிர்வாகம் இதில் அதிக கவனம் எடுத்திருக்கவேண்டுமென்ற கண்டனங்களும் வலுத்துவருகின்றன.

இதேவேளை இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நினைவாக பிரித்தானியாவில் இடம்பெற இருந்த உதைபந்தாட்ட போட்டி பிற்போட பட்டமை குறிப்பிடதக்கது .